குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
நான்கு வருட சிறை வாழ்க்கைக்குப் பிறகு சுதந்திரப் பறவையாகி இருக்கிறார் சசிகலா. ஆனால், கரோனா பெருந்தொற்று இன்னமும் அவரை சுதந்திரக் காற்றைச் முழுமையாகச் சுவாசிக்க விடாமல் முடக்கி வைத்திருக்கிறது.
ஆர்ப்பாட்ட அணிவகுப்பு!
ஜனவரி 27-ல் சசிகலா விடுதலை உறுதி என தெரிந்ததுமே அமமுகவினருக்கும் அதிமுகவுக்குள் இருக்கும் சசிகலா ஆதரவாளர்களுக்கும் புதுத் தெம்பு பிறந்தது. அவரை வரவேற்று புரட்சிப் போஸ்டர்களும் முளைத்தன. சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலாவை ஆயிரம் கார்கள் பின் தொடர தமிழகம் அழைத்து வரவேண்டும் என்பது சின்னம்மா விசுவாசிகளுக்கு தினகரன் போட்ட உத்தரவு. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் பறந்தன. ஆதரவாளர்கள் பின் தொடர ஆர்ப்பாட்டமாய் தமிழகத்துக்குள் ரீ என்ட்ரி ஆகும் சசிகலாவை நேராக ஜெயலலிதாவின் சமாதிக்கு அழைத்துச் சென்று அஞ்சலி செலுத்த வைப்பது. அதன் பிறகு போயஸ் கார்டனில் அவருக்காக புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்டிருக்கும் இல்லத்துக்கு அவரை அழைத்துச் சென்று, ‘சின்னம்மா மீண்டும் கார்டனுக்கு வந்து விட்டார்’ என்ற செய்தியை எதிரிகளுக்குச் சொல்வது. இதுதான் தினகரன் முதலில் வைத்திருந்த பிளான்.