கரு.முத்து
muthu.k@kamadenu.in
தமிழக அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அனுதினமும் காய் நகர்த்திக்கொண்டிருக்கும் பாஜக, புதுச்சேரியில் ஆட்சியையே பிடித்துவிட வேண்டும் எனும் முனைப்பில் நமச்சிவாயம் என்ற பிரம்மாஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கிறது.
கடந்த இதழில் நாம் குறிப்பிட்டிருந்ததை உறுதிப்படுத்தும் வகையில், பாஜக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நமச்சிவாயம். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக அவர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவை அவர் எடுத்திருக்கிறார்.
அவரும் அவரது ஆதரவாளர் தீப்பாய்ந்தானும் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர். இந்த நிலையில் ஆளும் காங்கிரஸுக்குப் பெரும்பான்மை குறைந்திருக்கிறது. ஆனாலும் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று தான் சபாநாயகர் என்பதையும் மறந்து அரசியல் பேசுகிறார் காங்கிரஸ் கட்சியின் சிவக்கொழுந்து.