கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
`கழகமே கோயில் அம்மாவே தெய்வம்' என்பது அதிமுக அமைச்சர்கள் அடிக்கடி பேசும் வசனம். ஒரு படி மேலே போய் ஜெயலலிதாவுக்கு கோயிலே கட்டிருக்கிறார் அமைச்சர் ஒருவர். வேறு யாருமல்ல... "சட்டமன்றத்தில் அம்மா இருப்பதால், அதைக் கோயிலாகப் பார்க்கிறேன். எனவே, அங்கு செருப்பணிந்து செல்ல மாட்டேன்" என்று 2011-ல் முகம் நிறைய பட்டையுடன் பவ்யம் காட்டினாரே, அதே
ஆர்.பி.உதயகுமார்தான்.
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலத்துக்கும் டி.கல்லுப்பட்டிக்கும் இடையே இருக்கிறது டி.குன்னத்தூர். இந்த ஊர் அருகே சாலையையொட்டி கடந்த சில மாதங்களாக பெரிய மண்டபம் ஒன்று கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அங்கே 12 ஏக்கர் இடம் வாங்கியிருக்கிறார், ஏதாவது ஸ்கூல், காலேஜ் கட்டுவாராக இருக்கும் என்று பேசிக்கொண்டார்கள் உள்ளூர் மக்கள். அவர்கள் சொன்னது போலவே அடிக்கடி அந்த இடத்தை மேற்பார்வையிட்டு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார் அமைச்சர்.
இப்போது தான் தெரியவந்திருக்கிறது அமைச்சர் கட்டுவது, அம்மா ஆலயம் என்று. கடந்த பொங்கல் திருநாளன்று இந்தப் பகுதி திடீரென விழாக்கோலம் பூண்டது. யாக சாலை பூஜைகளும் நடந்தன. அதைத் தொடர்ந்து அங்கே ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் சிலைகளை நிறுவும் நிகழ்ச்சி (அமைச்சர் பாஷையில் சொன்னால், சுவாமி சிலைகளின் பிரதிஷ்டை) நடந்தது.