ஹாட் லீக்ஸ்: மஞ்சளுக்கு மாறிய மாயம் என்னவோ?


இது ஜான்குமார் ஜாக்பாட்!

புதுச்சேரியில் நாராயணசாமி முதல்வர் ஆவதற்காக தனது எம்எல்ஏ பதவியை தியாகம் செய்தவர் ஜான்குமார். நாராயணசாமி முதல்வரானதும் தன்னை அமைச்சராக்குவார் என எதிர்பார்த்த ஜான்குமார் அது நடக்காததால் பாஜக பக்கம் தலையைக்காட்டி விட்டார்.பாஜக மேலிட பிரதிநிதியை ஜான்குமார் சந்தித்துப் பேசியது புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பியது. இருந்தாலும் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டது காங்கிரஸ். இந்த நிலையில், “வரும் சட்டப்பேரவை தேர்தலில் என்னை அமைச்சராக்குவதாக எந்தக் கட்சி உத்தரவாதம் தருகிறதோ அந்தக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவேன். அத்துடன் 5 தொகுதிகளில் அந்தக் கட்சி வேட்பாளர்களுக்கான முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டு அவர்களை ஜெயிக்க வைப்பதும் எனது பொறுப்பு” என்று அதிரடி அரசியல் ஆஃபர் ஒன்றை அறிவித்திருக்கிறாராம் ஜான்குமார்.

விடுதலையாகியும் வீட்டுக்கு வரமுடியாத வி.என்.சுதாகரன்!

ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலைக்கு நாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இரண்டு மாதங்கள் முன்னதாகவே விடுதலையாகி இருக்க வேண்டிய ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன் இன்னமும் விடுதலை தேதிகூட தெரியாமல் இருக்கிறார். தண்டனைக் காலம் முடிந்தாலும் சுதாகரனுக்காக செலுத்தப்பட வேண்டிய அபராதத் தொகை 10 கோடியே 10 ஆயிரம் ரூபாயை செலுத்த ஆள் இல்லையாம். இவ்வளவு பெரிய தொகையை ‘வெள்ளை’யாக திரட்டிக் கட்டுவதற்கு முறையான கணக்கு வழக்குகள் காட்ட வேண்டுமாம். அதனால் சொந்த பந்தங்கள் பலரும் பணம் கட்டத் தயங்குகிறார்களாம். சுதாகரனுக்கு பெண் கொடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலும் கைவிரித்து விட்டார்களாம். இதையறிந்து வேதனைப்பட்ட சசிகலா, தனக்காக பணம் ஏற்பாடு செய்த விவேக் ஜெயராமனிடம் சுதாகரனுக்கும் பணத்தை ஏற்பாடு செய்யும்படி சொன்னாராம். அப்போதுதான் தனக்கே தனது வீட்டை அடமானம் வைத்துத்தான் அபராதம் கட்டி இருக்கிறார்கள் என்ற விவரம் சசிகலாவுக்கே தெரிந்ததாம். ஆனாலும் இதையெல்லாம் கேள்விப்பட்ட சுதாகரன் கொஞ்சமும் கலங்கவில்லையாம். “நான் செய்த தவறுகளுக்கான தண்டையை நானே அனுபவித்துக் கொள்கிறேன் சித்தி. அபராதம் கட்டவில்லை என்றால் இன்னும் ஒரு வருஷம் ஜெயிலில் இருக்க வேண்டும் அவ்வளவுதானே... அதையும் அனுபவித்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று சொன்னாராம். “கவலைப்படாதே நான் வெளியில் போனதும் ஒரே வாரத்தில் உன்னையும் வெளியில் எடுக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று அவருக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறாராம் சசிகலா.

x