குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
“ஏற்ற இறக்கம் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே. இந்த நான்கு ஆண்டுகளில் ஒரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்திருந்தாலும் எனக்கு இத்தனை படிப்பினை கிடைத்திருக்காது. அதைக்காட்டிலும் அதிகமாக இந்தச் சிறைச்சாலை எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது” - அண்மையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தனது உறவினருக்கு சசிகலா எழுதிய கடிதத்தில் இருந்த வரிகள் இவை.
சிறைக்கு வெளியே சசிகலாவை வைத்து ஆளாளுக்கு ஒரு அரசியல் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாலும் சிறைக் கைதியாக இருக்கும் அவர் இத்தனை தெளிவாக இருக்கிறார். நன்னடத்தை விதிகளைக் காரணம் காட்டி முன்கூட்டியே விடுதலை செய்திருந்தால் இரண்டு மாதங்கள் முன்னதாகவே சசிகலா வெளியில் வந்திருப்பார். சிறைக் கொட்டடிக்குள் இப்போது அவர் எதிர்க்கொண்டிருக்கும் கரோனா தொற்றைக்கூட அவர் சந்தித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய பாஜக ஒரு வருடத்துக்கு முன்பே பச்சைக்கொடி காட்டியது. ஆனால், அதற்கு பிரதிபலனாக முக்கியமான ஒரு நிபந்தனையை விதித்தது. ‘விடுதலையானதும், தான் சம்பந்தப்பட்ட கம்பெனிகளை சசிகலா தாராளமாக செயல்பாட்டுக்குக் கொண்டு வரலாம். ஆனால், எந்தக் காரணம் கொண்டும் அரசியல் பக்கமே வரக்கூடாது.’ என்பதே பாஜக விதித்த அந்த அதிமுக்கிய நிபந்தனை.