கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
பொங்கல் திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களை கட்டியிருக்கின்றன. பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடக்கிற ஊர்களில் மட்டுமின்றி, புதிது புதிதாக பல ஊர்களில் ஜல்லிக்கட்டும், மஞ்சு விரட்டும் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இவற்றையெல்லாம் நடத்தக் கோரிப் போராடியவர்களோ, வழக்குகளோடு இன்னமும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
“தைப் புரட்சி... மெரினாப் புரட்சி” என்றெல்லாம் கொண்டாடப்பட்ட, 2017 ஜனவரியில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் நினைவிருக்கிறதா? சாதி, மத, அரசியல் என்று எந்த அடையாளமும் இல்லாமல், அணி திரட்ட தலைவர்கள் இல்லாமல் இளைஞர்களே ஒன்று திரண்டு நடத்திய மிகப்பெரிய புரட்சி அது. அந்தப் போராட்டத்திற்கான விதை 2017 ஜனவரி 16-ம் தேதி அலங்காநல்லூரில் ஊன்றப்பட்டது. விடிய விடிய நடந்த இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மறுநாள் காலையில் போலீஸார் நடவடிக்கையில் இறங்க, போராட்டம் தமிழகம் முழுக்க விரிவடைந்தது.
ஜல்லிக்கட்டு நடத்த தனிச்சட்டம் இயற்றும் வரையில் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று அவர்கள் உறுதியாக இருந்ததால், மத்திய - மாநில அரசுகள் இறங்கிவந்தன. ஜனவரி 23-ம் தேதி ஒரே வாரத்தில் தனிச்சட்டம் நிறைவேறியது. ஆனால், போராட்டம் நடந்த காலத்தில், போராடிய இளைஞர்களை கொண்டாடித் தீர்த்த தமிழ் சமூகம் பிறகு மறந்தேவிட்டது.