பருவமழை பாதிப்பு... நிவாரண நடவடிக்கைகள் தாமதமின்றி தொடங்கட்டும்!


புத்தாண்டில் நல்ல விஷயங்களை எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழர்களுக்கு, பருவம் தப்பிய மழைக்காலம் பல்வேறு வகைகளில் துயரங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வாரக் கணக்கில் பெய்யும் மழையால் பயிர்கள் சேதமடைந்திருப்பதால் நிலைகுலைந்திருக்கிறார்கள் தமிழக விவசாயிகள். அக்டோபர் மாத்திலேயே வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டாலும், நவம்பர் 15-க்குப் பிறகுதான் பருவமழை தீவிரமடைந்தது. அதன் தாக்கமாக, ஜனவரி மாதம் தொடங்கிய பின்னரும், தமிழகத்தின் சில பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்தது. அத்துடன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது மழை.

குறிப்பாக, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரிப் படுகை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டிய மழையால், நெல், கரும்பு, உளுந்து, சோளம் எனப் பல்வேறு பயிர்கள் பெருமளவில் சேதமடைந்திருக்கின்றன. அறுவடைக் காலம் என்பதால், நம்பிக்கையுடன் காத்திருந்த விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்திருக்கிறார்கள். போதிய நீர்வரத்து உள்ளிட்ட சாதகமான அம்சங்களால் இந்த முறை மகசூல் நன்றாக இருக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியளித்திருப்பதில் வியப்பில்லை.

கஜா, நிவர், புரெவி புயல்களின் பாதிப்புகளைவிடவும் இப்போது பெய்திருக்கும் மழையால் அதிகப் பாதிப்பு என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை விவசாயிகளிடமிருந்து எழுந்திருக்கிறது.

ஏற்கெனவே, புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையை ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரமாக உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், தற்போது, சேதமடைந்திருக்கும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில் மறு கணக்கெடுப்பு நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முதலில் களைவதுதான் ஆட்சியாளர்களுக்கு அழகு. தமிழக அரசு இதைக் கவனத்தில் கொள்ளும் என்று நம்புவோம்!

x