இசைவலம்: முருகனுக்காக உருகும் சித்!


வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

கர்னாடக இசைப் பிரியர்கள் மதுரை சோமுவின் ‘ஃபுல் பெஞ்ச்’ இசை நிகழ்ச்சிகளைக் காண 70-80-களில் பெரும் திரளாகக் கூடுவார்கள். அவரது கச்சேரியில்தான், மேடையிலும் பக்கவாத்தியம் உப பக்கவாத்தியங்கள், கொன்னக்கோல் என்று பல வாத்தியங்களை வாசிப்பவர்கள் இருப்பார்கள்.   ‘என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை... இன்னும் என்ன சோதனையா முருகா’ எனும் பாடலை உள்ளம் உருகக் கேட்ட பாக்கியவான்களுக்குத்தான் தெரியும் மதுரை சோமுவின் இசையில் மனதைக் கரைக்கும் மந்திர வித்தை பற்றி!

ஆனையாம்பட்டி ஆதிசேஷய்ய அய்யர் எழுதிய இந்தப் பாடலை அன்றைக்குக் கச்சேரி மேடைகளில் லால்குடி ஜெயராமன் (வயலின்), சி.எஸ்.முருகபூபதி (மிருதங்கம்) போன்ற இசை மேதைகளுடன் பாடிப் பரவசமூட்டினார் மதுரை சோமு.

இப்போது இன்றைய இளம் தலைமுறைக்கு மிகவும் நெருக்கமான பாடகரான சித் ஸ்ரீராம் ஏகாந்தமான ஒரு பொழுதில், ‘என்ன கவி பாடினாலும்’ பாடலைப் பாடி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மதுரை சோமுவின் குரலில் ததும்பும் கழிவிரக்கமும் இறைவனை ஆட்கொள்ள அழைக்கும் வேட்கையும் சித் ஸ்ரீராமின் குரலில் வெளிப்படாவிட்டாலும், நெகிழ்ச்சி, உருக்கம் கனிவு நிறைந்த அவரது குரலும், பாடல் அமைந்துள்ள நீலமணி எனும் அபூர்வ ராகத்தின் பிடிகளும் நம் மனத்தைப் பிசைகின்றன!

x