ரஜினியைப் போல் கங்குலிக்கும் அரசியல் அழுத்தம்?- தூங்கவிடாமல் துரத்தும் அரசியல் கட்சிகள்


வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவருமான சவுரவ் கங்குலிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி, அரசியல் வட்டாரங்களிலும் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது.

தமிழகத்தில் ரஜினிக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தைப்போல், மேற்கு வங்க அரசியலுக்கு வருமாறு கங்குலிக்கும் அழுத்தம் தரப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்று செய்திகள் கிளம்பியிருக்கின்றன.

கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல அரசியல் தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். கங்குலியின் மனைவிக்குப் பிரதமர் மோடி போன் செய்து நலம் விசாரித்தார். இந்தச் சூழலில், அரசியலுக்கு வருமாறு கங்குலிக்குச் சில அரசியல் கட்சிகள் கொடுத்த அழுத்தமே அவருக்கு மாரடைப்பு ஏற்படக் காரணம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கங்குலியின் நண்பருமான அஷோக் பட்டாச்சார்யா கூறியது பரபரப்பைக் கிளப்பியது. பாஜகவும், திரிணமூல் காங்கிரஸும் பதறிப்போய் இதை மறுக்கின்றன. ஆனால், அஷோக் பட்டாச்சார்யாவின் இந்தக் கருத்தை, மேற்கு வங்க அரசியலைக் கவனித்தவர்கள் நிச்சயம் மறுக்க மாட்டார்கள்.

x