குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக, சினிமா அரசியல்தான் தமிழகத்து அரியணையில் கோலோச்சி வருகிறது. வரும் தேர்தலில் சினிமா அரசியலுக்கு விடை கொடுத்துவிடும் தமிழகம் என அரசியல் ஆருடங்கள் கணிக்கப்பட்டு வரும் நிலையில், எம்ஜிஆரின் அரசியல் வாரிசு யார் என்பதில் பெரும் வார்த்தை யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது.
அரசியலுக்கு வருகிறேன் என்று புறப்பட்ட ரஜினி, “எம்ஜிஆர் ஆட்சியைத் தருவேன்” என்றுதான் ஆரம்பித்தார். ஆரம்பத்திலேயே இதற்கு விமர்சனங்கள் கிளம்பின. “எம்ஜிஆர் ஆட்சியிலிருந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகம் கண்ட வளர்ச்சி என்ன?” என்று அவரது அமைச்சரவையில் இருந்த ஒருவரின் தம்பியே சர்ச்சையைக் கொளுத்திப்போட்டார். நல்லவேளை, ரஜினி அரசியலுக்கு வணக்கம் போட்டுவிட்டார். இல்லாவிட்டால் அவரையும் எம்ஜிஆரையும் வைத்து இன்னும் பலர் கம்பு சுற்றியிருப்பார்கள்.
அடுத்து, “நான் எம்ஜிஆரின் மடியில் தவழ்ந்தவன்” என்று ஆரம்பித்த கமல், “ ‘நீ அரசியலுக்கு வருகிறாயா?’ என்று அப்போதே என்னைக் கேட்டார் எம்ஜிஆர். அப்போது எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. இப்போது வந்திருக்கிறேன். நான் எம்ஜிஆரின் நீட்சி... எம்ஜிஆரின் அரசியல் வாரிசு” என்கிறார். இதற்கும் ஆங்காங்கே விமர்சனங்கள். அதிலும் இத்தனை நாளும் ஜெயலலிதாவை புரட்சித் தலைவரின் அரசியல் வாரிசு என அடித்துச் கொண்டிருந்த அமைச்சர் சி.வி.சண்முகம் போன்றவர்களே, “எம்ஜிஆரின் வாரிசு இரட்டை இலை” மட்டும் தான் என மல்லுக்கு நிற்கிறார்கள்.