கட்டக்காளை - 3


மாசிப்பச்சைக்கு போயிட்டுவந்தன்னைக்கு ராத்திரிதான், லச்சுமாயி வகுத்துவலியால துடிச்சுப்போனா... பதறியடிச்சு எந்திரிச்ச கட்டக்காளை, மேக்குவீட்டுல ஒறங்கிட்டுருந்த கழுச்சியாத்தாள எழுப்ப, சத்தம் கேட்டு அன்னத்தாயும், பின்னாயும் எந்திரிச்சு வந்துட்டாக...

"கொறமாத்தக்காரிக்கு வலி எடுக்கக் கூடாதே... சாமி நீ தான் தொணச்செய்யணும்..." சொல்லிக்கிட்டே வந்த கழுச்சியாத்தா, வலியால துடிச்சுக்கிட்டுருந்த லச்சுமாயிகிட்ட, எந்த எடத்துல வலிக்குதுன்டு கேட்டா... லச்சுமாயி சொன்னத வச்சு, எதுனால வலிக்கிதுன்ற வெவரம் புரிஞ்சுபோச்சு.

கொஞ்சூண்டு புளியும் கருப்பட்டியும் எடுத்துக்காரச் சொல்லி, தண்ணியில கரச்சு, ஒரு செம்பு நெறையா குடிக்கச் சொன்னா... ‘மடக்கு மடக்கு’ன்டு குடிச்ச லச்சுமாயி, சத்த நேரத்லயே வலி கொறஞ்சு நெதானத்துக்கு வந்துட்டா.

"ஒண்ணுமில்லத்தே... வெறும் சூட்டு வலிதான்... இதுக்குப் போயி அழுது ஊரக் கூட்டிப்பிட்ட..." கழுச்சியாத்தா ஆறுதலா சொன்ன வாத்தையக் கேட்டு, சொவத்தோடசொவறா பித்துப்புடிச்சவென் மாரி நின்டுக்கிருந்த கட்டக்காளைக்கு இப்பத்தான் உசுரே வந்துச்சு.
மாசிப்பச்சை திருழா முடிஞ்சு, ஒரு மாசம் மள மளன்டு ஓடிப்போச்சு.

விடிஞ்சும் விடியல, இருட்டப் பொத்துக்கிட்டு மயிலு, தோகவிரிச்சு எந்திரிக்கிற மாரி, மஞ்ச செவப்புக்கலருல, கெழக்க அடிவானத்திலருந்து சூரியன் பரிஞ்சு வருது...

ஊருச்சனம் பூராம் அரக்கப் பறக்க அததுக வேலயைப் பாத்துக்கிட்டுத் திரியுதுக...

கருப்புக்கோயிலு இச்சிமரத்திலிருந்த காக்காக் குருவியெல்லாம் ‘கீச்சு மூச்சு’ன்டு கத்தி ஒலி எழுப்புதுக. அடயிலிருந்து எறங்கின குஞ்சுத்தாக்கோழி ‘கெக்...கெக்...’ன்னு கத்திக்கிட்டே, தாங் காலச் சுத்திச் சுத்தி வர்ற குஞ்சுகளுக்கு, கொத்திக் கொத்தி எரபெறக்க சொல்லிக் குடுத்துட்டுருக்கு.

சம்பிரதாயமின்ற பேருல பெரியாளுக வச்சிருக்கிற ஒத்தொத வழக்கத்துக்கும் எதாச்சும் காரணமிருக்கும்… அப்படித்தான் கல்யாணங் கட்டிக்குடுத்து மொதப்பிள்ளய பெத்துக்குடுக்குறவரைக்கும், வாயும் வகுறுமா இருக்குறவள சூதானமாப் பாத்துக்கிறது பெத்தவுக கடமென்றதினால ஏழாம் மாசம் கட்டிச்சோத்த கட்டிக்காற வழக்கத்த வச்சிருக்காக.

இன்னைக்கு, லச்சுமாயோட அப்பன் வீட்டாளுக சோறு கட்டிக்காரதா, போன சந்தையன்னைக்கே சொல்லி விட்டுருக்காக. அதாங், இன்னைக்கு வாராகன்டு வீடே, ‘கல கல’ன்டுருக்கு.

அப்பன் வீட்டாளுக வாராகன்ற சேதிகேட்டதிலிருந்தே... லட்சுமாயிக்கு இருப்புக் கொள்ளல. அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி எதையாச்சும் செய்யுறா... உள்ளுவீட்டுக்கும் வாசலுக்குமா நடந்து தவிச்சுப் போறா…

"வகுத்துப் பிள்ளக்காரி... பேசாம திண்ணையில ஒக்காரு…" பின்னாயி சொன்னது லச்சுமாயி காதுல விழுகல. அவ நெனப்புப் பூராம் அப்பன் வீட்டுலருந்து வாரவுகளப் பத்தித்தான்…

பின்னாயி, எதுத்த வீட்டுச் சின்னெம்னோட பொஞ்சாதி… இந்த ஊருக்கு என்னைக்கு வாக்கப்பட்டு வந்தாளோ, அன்னைக்கிருந்து இன்ன வரைக்கும் கட்டக்காளை அப்பன் முத்தனம் பெரியாம்பள குடும்பத்துமேல, இவ வச்சிருந்த மருவாதை கொஞ்சங்கூட கொறையாம இன்னமும் வச்சிருக்கா.

தன்னோட அப்பென் ஆத்தா காலத்துக்குப் பெறகும், கட்டக்காளையும் தாங்குடும்பத்தோட பவுசு கொறையாம கண்ணியத்தோட, சொந்த பந்தங்கள பாசமா பாத்துக்கிறதனால, பின்னாயிக்கு இந்தக் குடும்பத்துமேல தனி பாசம்.

விடிஞ்சதிலருந்து ஊரடங்கிற வரைக்கும் இந்த வீடே கதின்டு கெடக்குற பின்னாயி, கட்டக்காளைக்கு ஒரு வகையில சின்னாத்தா மொற. லட்சுமாயிக்கு நல்லது கெட்டத சொல்றதலருந்து, சூதானமா பாத்துக்கிறது வரைக்கும் எல்லாமே பின்னாயிதான்.

சோறு கட்டிக்கி வார ஆளுகள பெருமை கொறையாம நடத்திணுமின்டு பக்கத்து வீட்டு பொட்டியம்மா, செல்லம்மா, மாயக்கா… அல்லாரும் ஆளுக்கொரு வேலய இழுத்துப் போட்டுச் செஞ்சிக்கிருக்காக. ஆளாளுக்கு பம்பரமா சுத்துறாக.

ஊருக்கெணத்துல தண்ணியெறச்சுக்கிட்டு வந்த அன்னத்தாயி, குழுதானித் தொட்டிபூரா நெப்பி வச்சிருந்தா. வெங்கலப் பானை, பித்தள அண்டா, சருவச் சட்டி ன்டு குடிக்கிறதுக்கும் பொழங்கிறதுக்கும் போதுமான தண்ணியப் புடுச்சு, தண்ணிச்சாலு நெட்டுக்க... அம்புட்டுப் பாத்தரத்திலயும் நெப்பி வச்சிட்டா.

"போதுமித்தே... நீ நெப்பி வச்சிருக்கிற தண்ணியில, ஒரு கல்யாணத்தயே முடிச்சிப்புடலாம் போல...”ன்டு பின்னாயி சொல்ல.
"கை காலு கழுவக் கூட தண்ணியில்லாத ஊருன்டு, வார சனம்... எளக்காரமாப் பேசிப்புடக்கூடாதில்ல... அதுக்குத்தான், சலம்பச் சலம்ப ஊத்தி வச்சிருக்கேன்., பின்னாயிகிட்ட பெருமையாச் சொன்ன அன்னத்தாயி, "ஆமாத்தே... இன்னும் நாழி, ஒலக்கு, செம்புன்டு இருக்கிறதப்பூராம் எடுத்து வையி, அம்புட்டயும் நெப்பிப்புடுறேன்” ன்டு நக்கலாவும், வாய் வெட்டுசாவும் சொன்னா...

தொம்பற பக்கத்துல பெரிய பெரிய கல்ல வச்சு அடுப்புக் கூட்டி, பருப்பானமும் நெல்லுச் சோத்தயும் ஆக்கிக்கிருந்தா கழுச்சியாத்தா.

எட்டு வீட்டுக்கு மணக்கிறா மாரி எரும மாட்டு வெண்ணய முருங்க எலைய உருவிப்போட்டு, மாயக்கா நெய்யுருக்கிட்டுருந்தா.
தோட்டத்திலிருந்து அறுத்துக்காந்த வாழ எலைய, திண்ணையில ஓரமா வச்ச கட்டக்காளை, தொட்டியிலருந்த தண்ணிய மோந்து... நின்டவாக்கிலயே கால்ல ஊத்தி, முன்னங்காலு வெரல வச்சுப் பின்னங்காலத் தேச்சுக் கழுவுனான்.

கொஞ்சூண்டு தண்ணிய வச்சு மூஞ்சியையும் கழுவி, வாயிலயும் ஊத்தி கொப்பிளிச்சு... ப்ளிச்சின்டு கீழ துப்புனான்.
தோள்ல கெடந்த துண்டெடுத்து மூஞ்சியத் தொடச்சிக்கிட்டே திண்ணையில ஒக்காந்த கட்டக்காளை,  “விடியமின்ன வண்டியக் கட்டிக் கெளம்புறமின்டு சொன்னவக, இன்னம்மா வாராக...”ன்டுதானப் பேசிக்கிட்டே… "இன்னும்மா சோறு தண்ணிய எறக்கி வைக்காம கிண்டிக்கிட்டுத் திரியிறீங்க...”ன்டு கழுச்சியாத்தாகிட்ட கேட்டான்.

"மாமெ வீட்டாளுக வாராகன்டதும் இம்புட்டு அவசரப் படுறவெங்… தீயெறிக்கத் தேக்கம் வெறகு ஒடச்சுப் போட்டுருக்கணும்... கனகனன்டு வெந்து இந்நேரம் எறக்கிருப்பேன்..."ன்டு சொல்லி, லேசா சலிச்சுக்கிட்ட கழுச்சியாத்தா, "என்னா வெறகோ பொகஞ்சுக்கிட்டே பொழுதும்போச்சு... ஊதி ஊதி வாயும் வலிக்குது "ன்டா.

கழுச்சியாத்தா பேச்சுக்கு மறுவாத்தப் பேசிப் பழகாத கட்டக்காளை, லேசாச் சிரிச்சுக்கிட்டே அங்கருந்து நகன்டு போயிட்டான்.
கழுச்சியாத்தா, கட்டக்காளைக்கு ஒண்ணுவிட்ட பெரியப்பன் பொஞ்சாதி… பெரியாத்தான்டாலே கொஞ்சம் பயந்தான்.
சின்ன வயசுலருந்தே சுருக்குன்டு பேசிப்புடுமின்டாலும் ரொம்ப பாசமான ஆத்தா… ஆசையாத் தின்டுக்கிருந்தா
லும் அடுத்தவகளக கண்டுட்டா அப்படியே அள்ளிக்குடுத்திரும். சூது வாதில்லாத அப்புரானி... யாருக்கு எதாச்சுமின்டா, ஓடிப்போயி மொத ஆளா, ஒதவுறதுக்கு நிக்கும்.

கட்டிச் சோறு கட்டிக்காரவுகள, மனங்கோனாம அனுப்பணுமின்றதிலயே எல்லாரும் கண்ணுங்கருத்துமா இருந்தாக.
அப்பன் வீட்டாளுக எப்ப வருவாகன்டு வண்டிப்பாதயப் பாத்து வாசல்லயே காத்துக்கெடக்கா லச்சுமாயி.

"லச்சு... ஒங்க அப்பன் வீட்டாளுக வண்டியில வந்துட்டாக..." தெக்குத் தெருவு தேனம்மா சத்தமா சொல்லிக்கிட்டே வந்தா. அவ சொல்லி முடிக்கல, பெறத்தலயே வண்டி மாட்டு மணிச்சத்தம் கேட்க, காளியாத்தா கோயிலு முக்குல திரும்பிருச்சு… லச்சுமாயிக்கு மொகமெல்லாம் பூவா மலந்துபோச்சு.

கைய ஊண்டி எந்திரிச்சவ, நொட்டாங்கய்ய இடுப்புல முட்டுக்குடுத்துக்கிட்டு, புதுச் சேலத்துணியக் கட்டிக்கிட்டு, நக நட்ட கழுத்தில போட்டுக்கிட்டு, வேகமா நடக்க மாட்டாம மெதுவா நடந்து போயி, வண்டியிலிருந்து எறங்கின அவுக ஆத்தாள ஆறுதலாக் கட்டிப்புடிச்சிக்கிட்டா.

அஞ்சாறு வண்டியில ‘கே…கே…’ன்டு ஆளுக வந்து எறங்கிட்டாக… சோறு கட்டிக்காந்த, பண்ட பாத்தரம் பலகாரச்சட்டிகளையும் பகுமானமா எறக்கி வச்சாக .

"எல்லாரும் வாங்கப்பா..." கழுச்சியாத்தா, பின்னாயி, கட்டக்காளை, ஒச்சுக்காளை, வீரணன்டு ஆளும் பேருமா வந்தவுகள வரவேத்தாக.

கெடமாட்டு மணிச் சத்தங் கெனக்கா ‘கனங்கன’ன்டு... கட்டக்காளை வீடே கலகலப்பாருக்கு.

கட்டிச் சோத்துப் பானையில, வண்டுகட்டி வச்சிருந்த மஞ்சத் துணிகள கழுச்சியாத்தா, பின்னாயின்டு... ஆளாளுக்கு கழத்துனாக.
புளிச்சோறு, தக்காளிச்சோறு, தயிர்சோறு, வட பலகார வகைக தளும்பத் தளும்ப இருக்கு.

"அடியே அன்னம்… என்னத்த பெராக்குப் பாத்துக்கிருக்கவ... போயி சாம்பிராணி கரண்டியில கங்கெடுத்துட்டு வா. அடுப்புல கெடக்குற பெரியகங்காப் பாத்து கெளறிவிட்டு எடுத்துட்டு வா. நகண்டுக்கிருக்காம வெரசாப் போடி…"

கழுச்சியாத்தா சொன்னதுமே... ஓடோடிப் போயி ‘தகதக’ன்டு’ தீக்கங்க கரண்டியில அள்ளிக்காந்தா.

கொண்டுக்காந்த கட்டிச்சோத்து வகைகள் தலவாழ எலையில எடுத்து வச்சு, சாமிக்குத் தழுக போட்ட கழுச்சியாத்தா, "எந்தக் கொறயுமில்லாம பிள்ளையப் பெத்துக்குடுக்கணும் சாமி. தாயுக்கும் புள்ளைக்கும் நல்ல சொகத்த கொடுத்து, நீங்கதான் காப்பாத்தணும் சாமி…"ன்டு சொல்லி வணங்கி, கட்டக்காளை, லச்சுமாயி அவுக ஆத்தா அப்பன் எல்லாரையும் சாமி கும்பிடச் சொன்னா.

“வேடிக்க பாத்திக்கிட்டு நிக்காம, எலைய எடுத்துப் போடுங்க… வந்தவக சாப்பிடட்டும்”

கழுச்சி யாத்தா சொல்லி முடிக்கல, லட்சுமாயி தண்ணிய மோந்து அவுக அப்பெங்கிட்ட குடுத்து கையக்கழுவிட்டுச் சாப்பிடச்சொன்னா.

கெழமேக்கா இருந்த பட்டாசலையில வரிசையா வந்தாளுகளப் பூராம் ஒக்காரவச்சு, அன்னத்தாயி எலைய எடுத்துப் போட, வீரணன் சோத்த அள்ளி வைக்க, கொண்டுக்காந்த கட்டிச்சோத்து வகைகள மொதல்ல சாப்பிடச் சொன்னாக.

அப்டியே, ஆக்கிவச்சிருந்த பருப்பானஞ் சோத்தயும், கரண்டி நெறயா நெய்யயும் ஊத்திப் பரிமாற, எல்லாரும் வகுறாற சாப்பிட்டுட்டு, வெத்தல பாக்கப் போட்டு மனசாறப் பேசிக்கிருந்தாக.

மொட்டயநாயக்கரு, மொக்கராசு செட்டியாரு, சின்னனம்பலம், சோனை சேர்வை, தாமஸ் விருமாண்டி...ன்டு ஊருல உள்ள பெரியாளுகள கூட்டிக்காந்த ஒச்சுக்காளை, எல்லாத்தயும் சாப்புட விட்டான்.

சொந்த பந்தத்தோட, ஊருலருக்கிற முக்கியமான பெரியாளுக பூராஞ் சேர்ந்து, லச்சுமாயிக்கும் கட்டக்காளைக்கும் திந்நீறு குடுத்து, கையிகாலுக்கு சொகத்தக் குடுக்கணுமின்டு சாமியக் கும்பிட்டு வழி அனுப்பி வச்சாக.

அப்பன் வீட்டாளுக எப்ப வருவாக, எப்ப ஊருக்குப் போகலாமின்டு இன்னவரைக்கும் பகுமானமாயிருந்த லச்சுமாயி, வண்டியில ஏறி ஊருக்குப் போக மாட்டேமின்டு… சொல்லி அழுக ஆரம்பிச்சிட்டா.

அவ இப்படிச் செஞ்சது, வழி அனுப்ப நின்டுக்கிருந்த அம்புட்டாளுகளுக்கும் திக்குன்டாகிப் போச்சு!

 (தொடரும்)

x