ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
காட்சி 1
சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு சென்னை மாதவரத்தில் வீடெடுத்து தன்னந்தனியாக தங்கி... காலை 6:30 மணிக்கு டிப்டாப்பாக கிளம்பி பேருந்தில் ஏறினால், சிறுசேரியில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்துக்குள் அடியெடுத்து வைக்கும்போதே காலை 9:30 மணி ஆகிவிடும். வேலை முடிந்து மாலை 6 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியேறினால், வீடடையவே இரவு 9 மணி ஆகிவிடும்.
இப்படி ஐந்து ஆண்டுகளாக மாதவரத்துக்கும் சிறுசேரிக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருந்த ஜோசப்புக்கு, ஊரடங்கு சேதி காதில் தேன் வந்து பாய்ந்தது போலத்தான் இருந்தது. இணைய வசதி உள்ள அலுவலக லேப்டாப்போடு சொந்த ஊரான திருநெல்வேலிக்கு திரும்பினார் ஜோசப். குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக நேரம் செலவழித்தபடி அலுவலகப் பணிகளையும் வீட்டில் இருந்தே செய்யத் தொடங்கினார். நாளடைவில் வேலைப் பளு அதிகரித்தது. அலுவலகத்தில் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்த நிலைமை மாறியது. 12 மணி நேரம்வரை வேலை இழுத்தது. அலுவலகத்தில் உள்ளதுபோல் பணிக்குரிய சவுகரியமான நாற்காலியும் மேஜையும் வீட்டில் இல்லாததால், கழுத்தும் முதுகும் கடுத்தன. மணிக்கணக்கில் பயன்பாட்டில் இருக்கும் கணிப்பொறி, அதைக் குளிரூட்ட ஏசி என்பதாக மின்கட்டணம் மூன்று மடங்கானது. இணைய சேவைக்கான கட்டணத்தை அலுவலகம் ஏற்றதே தவிர, மின்கட்டணத்துக்கு மூச்சு காட்டவில்லை.