நிதியின்றி தள்ளாடும் நூறு நாள் வேலைத் திட்டம்!- உழைத்தும் ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் பயனாளிகள்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

உழைக்கும் மக்களுக்கு, நூறு நாள் வேலைத் திட்டம் எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதற்குக் கரோனா காலமே அத்தாட்சி. பொதுமுடக்கம் ஏற்படுத்திய சிரமங்களுக்கு நடுவே உழைக்கும் மக்களைப் பசித்துயரிலிருந்து ரேஷன் அரிசி காப்பாற்றியது என்றால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் வரும் இந்தத் திட்டம், அவர்களின் அன்றாடச் செலவுகளுக்கேனும் உதவிகரமாக இருந்தது.

இந்தச் சூழலில், இந்தத் திட்டத்தின்கீழ் செய்த வேலைக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும், நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைவிட குறைவான தொகையே வழங்கப்படுகிறது என்றும் வேதனை தெரிவிக்கிறார்கள் தொழிலாளர்கள்.

இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட திட்ட அலுவலரைச் சந்தித்து முறையிடுவதற்காக 50 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர்  சத்தியமங்கலத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்து அழைத்துவந்தவர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ‘சுடர்’ நடராஜன். அவரிடம் பேசினேன்:

x