வரும்... ஆனா இப்ப வராது... ஏமாற்றமளிக்கும் மதுரை எய்ம்ஸ் திட்டம்!


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

"அய்யா இங்க இருந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரியக் காணோம்யா... காணோம். 7 மாடிக் கட்டிடம் அய்யா... ஏழு மாடி... பாவிப்பயல்க, நர்சுகளையும் தூக்கிட்டுப் போயிட்டாங்கய்யா..." என்று வடிவேல் கணக்காய் கதறத் தோன்றுகிறது, மதுரையில் எய்ம்ஸ்க்காக ஒதுக்கப்பட்ட இடத்தை நேரில் பார்த்தால்.

மதுரையில் இருந்து கூகுள் மேப்பில் எய்ம்ஸ் ஹாஸ்பிட்டல் என்று போட்டுவிட்டு வண்டியை விட்டீர்கள் என்றால், நேராக கன்னியாகுமரி மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக, தோப்பூரில் கொண்டுபோய்விடும். நான்குவழிச் சாலையில் இருந்து பிரிந்து உள்ளே போனாலும்கூட, மருத்துவமனைக்கென்றே பளபளவென்று நான்கு வழிச்சாலை போட்டிருக்கிறார்கள். காம்பவுண்ட் சுவரும் பப்பளவென ஜொலிக்கிறது. ஒரு காலத்தில் தூத்துக்குடியின் தேரிக்காடு போல கிடந்த அந்த ஏரியாவில், இப்போது ரியல் எஸ்டேட் பிஸினசும் சக்கைப் போடு போடுகிறது. ஆனால், மருத்துவமனையை மட்டும் காணோம்.

முன்பு பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சராக இருந்த புதுவை நாராயணசாமி எப்படி, "இன்னும் 3 மாதத்தில் கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கும்" என்று 4 ஆண்டுகளாக விமான நிலையங்கள் தோறும் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தாரோ, அதேபோல, “இன்னும் 45 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும்” என்று மத்திய - மாநில அரசுகள் இப்போது சொல்லிக் கொண்டே இருக்கின்றன.  இந்த வாரம்கூட, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதே பதிலைச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு. உண்மையில் என்னதான் ஆச்சு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு?

x