ஹாட் லீக்ஸ்- மதுரை மத்திய தொகுதியில் துரை தயாநிதி?


மதுரை மத்திய தொகுதியில் துரை தயாநிதி?

“சட்டமன்றத் தேர்தலில் என்னுடைய பங்களிப்பும் இருக்கும்” என்று முன்பு சொன்ன மு.க.அழகிரி, “ஜனவரி 3-ல் ஆதரவாளர்களைக் கூட்டி முக்கிய முடிவை எடுப்பேன்” என இப்போது அறிவித்திருக்கிறார். அழகிரியும் ரஜினியும் கூட்டு சேரப்போவதாகக்கூட செய்திகள் சிறகடிக்கின்றன. ஆனால் அழகிரியோ, “வாய்ப்புக் கிடைத்தால் ரஜினியுடன் நடிப்பேன்” என்று டபாய்க்கிறார். அழகிரி வெளிப்படையாக இப்படிச் சொன்னாலும் இந்த முறை அவர் திமுகவுக்கு ஷாக் கொடுக்கும் திட்டத்துடன் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். பாஜக ஆதரவுடன் தென் மாவட்டங்களில் ஒரு சில தொகுதிகளில் திமுகவை மிரட்டலாம் எனவும் சிலர் அவருக்கு யோசனை சொல்கிறார்களாம். இதனிடையே, மதுரை மத்திய தொகுதியில் மகன் துரை தயாநிதியை இறக்கிப் பார்க்கும் திட்டமும் அண்ணனுக்கு இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் அஞ்சா நெஞ்சரின் அடிப்பொடிகள். அதற்கேற்ப, துரை தயாநிதி சம்பந்தப்பட்ட வழக்குகள், வரி பாக்கி உள்ளிட்ட விவரங்களை க்ளியர் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் அழகிரி. இதற்கான பொறுப்பை மதுரையைச் சேர்ந்த தனக்கு நெருக்கமான குபேர வழக்கறிஞரிடம் ஒப்படைத்திருக்கிறாராம். இதை வைத்து, துரை தயாநிதி மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடக் கூடும் என செய்தி பரப்பும் அழகிரி தரப்பு, “வாய்ப்பு அமைந்தால் ரஜினி கட்சியின் வேட்பாளராகக்கூட தம்பி துரை களமிறங்கலாம்” என்கிறது.

சின்னம்மாவிடம் கலங்கிய எடப்பாடி உறவினர்

பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலா ஜனவரி இறுதியில் விடுதலையாகவிருக்கிறார். அவர் விடுதலையானால் அதிமுகவுக்குள் அரசியல் புயலடிக்கும் என்று சொல்லப்படும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அவரது உறவினர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல் அதிமுக வட்டாரத்தில் வட்ட
மடிக்கிறது. இந்தச் சந்திப்பின்போது, “நான்கு வருடங்களுக்கு முன்பு நீங்கள் எப்படி அதிமுக ஆட்சியை எடப்பாடியார் வசம் ஒப்படைத்தீர்களோ அதை அவர் அப்படியே கட்டிக்காத்து வருகிறார். விடுதலையானதும் நீங்கள் விரும்பினால் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கவும் அவர் தயாராகவே இருக்கிறார். இதுதான் நிஜம். எடப்பாடியாரைப் பற்றி வேறு யாராவது எதாவது சொன்னால் அதை நம்பாதீர்கள்” என்று கண்கலங்கிவிட்டு வந்தாராம் அந்த உறவுக்காரர்.

x