எழுத்தாளர் பாலகுமாரனின் கார் ரஜினி வீட்டின் போர்டிகோவில் நுழையும்போதே ஓடிவந்து வரவேற்றார் ரஜினி. சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் அதுதான். தன்னைத் தேடி யார் வந்தாலும் வெளியே வந்து அவர்களை வரவேற்று அழைத்துச் செல்வது மட்டுமல்ல; அவர்கள் புறப்படும்போது கார் வரை வந்து வழியனுப்பி வைத்த பிறகே உள்ளே செல்வார். தன்னை வரவேற்ற ரஜினி இளமையான கெட்-அப்பில் இருப்பதைப் பார்த்ததும் பாலகுமாரனுக்கு ஆச்சரியம். கொஞ்ச நேரத்தில் அந்த ஆச்சரியம் விலகிவிட்டது. அதற்குக் காரணம், ரஜினியின் 6 வயது ரசிகன்!
மீசை வெச்ச குழந்தை!
அப்போது தங்களது ஆறு வயது மகனுடன் தமிழகத்துக்குச் சுற்றுலா வந்திருந்தனர், கனடா நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு இலங்கைத் தமிழ்த் தம்பதியினர். அவர்கள், கடந்த ஓராண்டு காலமாக, ரஜினியை காண விரும்பி அடம்பிடிக்கும் தங்களது 6 வயது மகனுக்காக தமிழகம் வர விரும்புவதாகவும் ரஜினி நேரம் அளித்தால் மட்டுமே தங்கள் பயணத்தை திட்டமிடமுடியும் என்று கேட்டு, ரஜினிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். ரஜினியும் அவர்களுக்கு நேரம் கொடுத்துவிட்டார். உடனே சென்னை புறப்பட்டுவந்த அந்தக் குடும்பத்தைத் தன் வீட்டில் வரவேற்றார் ரஜினி. அந்தச் சிறுவனை வாரித் தூக்கி வைத்துக்கொண்டார். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அவனோடு பேச்சுக் கொடுத்தார்.
“என்ன ஜென்டில்மேன்... இப்போ சந்தோஷமா?” என்றார். அந்தச் சிறுவனோ “இல்லை” என்று தலையாட்டினான். சிறுவனின் அம்மாவுக்கோ கோபம் வந்துவிட்டது. அவனிடம், “மோன்… இப்படிச் செய்யலாமோ..? நீ நல்ல பிள்ளையாண்டன் இல்லையா?” என்றார். அதற்கு அந்தச் சிறுவன், “ரஜினி அங்கிளைப் பார்க்கப் போறோம்மென்று சொன்னியள். ஆனா, இப்போ அவரோட டாடியைக் காட்டுறியங்கள். எனக்கு ரஜினி அங்கிளைதான் பார்க்க வேணும்... அவரை வரச் சொல்லுங்கோவன்” என்றான். ரஜினியைத் தவிர, எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். அந்த சிறுவனின் இலங்கைத் தமிழை ரசித்த ரஜினி, அவனது சந்தேகத்தில் இருந்த நியாயத்தை உணர்ந்து அந்த வரவேற்பறையே அதிரச் சிரித்தார்.
நரைத்த தலைமுடி தாடியுடன் இருந்த ரஜினிக்குப் புரிந்துவிட்டது. ரஜினியை அவன் உள்வாங்கிக் கொண்டது இந்த தாத்தா தோற்றத்தில் அல்ல... கருகருவென்ற அழகான, ஸ்டைலான தலைமுடியில் ‘2.0’ சிட்டி ரோபோவாகத்தான் என்பது தெரிந்ததும் அந்தச் சிறுவனிடம், “மிஸ்டர். நீங்க... இந்தக் கேக்கை சாப்பிட்டு முடிச்சுட்டு... கொஞ்ச நேரம் விளையாடுங்க. நான் போய் ரஜினி அங்கிளைக் கூட்டிக்கொண்டு வர்றேன். ஓகே?” என்று சொன்ன ரஜினி, அவனின் பெற்றோரிடம், “ஐ நீட் ஃபோர்டி பை மினிட்ஸ் ப்ளீஸ்... பார்டன் மீ” என்று சொல்லிவிட்டு, அவரது வீட்டில் இருக்கும் மேக்கப் அறைக்குள் போனார். அடுத்த அரை மணிநேரத்திலேயே கிளீன் ஷேவ் செய்துவிட்டு, தலைக்கு டை அடித்துக்கொண்டு இளமை ரஜினியாக மாறி வந்தார். அந்தச் சமயத்தில்தான் பாலகுமாரனும் அங்கே வந்து சேர்ந்தார்.
தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை இப்போது அழைத்து வரச் சொன்னார் ரஜினி. இளமை தோற்றத்தில் இருந்த ரஜினியைப் பார்த்ததும், “ஹே... ரஜினி அங்கிள்!” என்று உற்சாகம் பொங்க ஓடிவந்தான். ரஜினி அவனிடம், “இப்போது சந்தோஷமா?” என ‘சிட்டி ரோபோ’ ஸ்டைல் எனர்ஜியுடன் கேட்க... “டபுள் ஓகே” என்று அவருக்கு முத்தங்களை வாரி வழங்கினான். ஒரு சூப்பர் ஸ்டாரும் அவரது மிக இளவயது ரசிகனும் சந்திக்கும் தருணத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த பாலகுமாரன், அந்தத் தம்பதியும் சிறுவனும் விடைபெற்றுச் சென்ற பிறகு விஷயத்தைத் தெரிந்துகொண்டார்.
பாலகுமாரன் ஒருமுறை சொன்னார்: “என் வாழ்நாளில் நூற்றுக்கணக்கான சிறந்த மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களில் ரஜினி எனும் அற்புத மனிதரைப் பற்றி நூறு முறை பேசினாலும் பகிர்ந்தாலும் அது போதாது.” தனது ரசிகன் பால் மணம் மாறாக் குழந்தை என்றதும் பட்டென்று அவனுக்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டவர் ரஜினி. அவரே மீசை வைத்த குழந்தைதானே!
நண்பர்களை வென்ற சிவாஜி
6 வயது ரசிகனை திருப்திப்படுத்திய ரஜினியின் 6 வயது பால்யமும் ஆச்சரியங்களால் நிரம்பியதுதான். சிறுவன் சிவாஜியின் (ரஜினி) சேட்டைகளைத் தாங்க முடியாமல், 1956-ம் வருடம் அக்டோபர் மாதம் விஜயதசமி நாளில் பள்ளியில் சேர்த்துவிடுவதென்று முடிவு செய்திருந்தார் அப்பா ரானோஜி. ஆனால், அன்றைக்கோ வெளியே கிளம்பமுடியாதபடி மழை கொட்டியது. புத்தாடை, பை நிறைய பெப்பர்மின்ட் மிட்டாய் என்று அமர்க்களமாகத் தயாராகியிருந்தான் சிறுவன் சிவாஜி. சட்டென்று மழை விட்டு வானம் திறந்து திடீரென வெயிலடிக்க ஆரம்பித்தது!
பெங்களூருவின் அன்றைய புறநகரான ஹனுமந்த நகரிலிருந்து, 2 கிலோமீட்டர் தூரத்தில் பசவன்குடியில் இருந்தது அரசு பிரீமியர் மாடல் பள்ளி. ஹனுமந்த நகரில்தான் ரானோஜியின் வீடு. தனது ஐந்து வயது கடைக்குட்டி மகனான சிவாஜியை மிதிவண்டியில் உட்கார வைத்து, அவனைப் பள்ளியில் சேர்க்க அழைத்துக்கொண்டு போனார் ரானோஜி. பள்ளியில் வலது கையைத் தூக்கி இடது காதைத் தொடும்படி சிறுவன் சிவாஜியிடம் கூறினார் தலைமை ஆசிரியர். அப்போதெல்லாம் அப்படிச் செய்தால்தான் அட்மிஷன் கிடைக்கும். ஆனால், சிறுவனின் விரல்கள் காதுக்குச் சற்று மேலேயே நின்றுகொண்டன. “இந்த வருடம் சேர்த்துக்கொள்ள முடியாது. அடுத்த வருடம் பார்க்கலாம்” என்றார் தலைமையாசிரியர்.
ரானோஜியின் முகம் வாடிவிட்டது. உடனே, தலைமையாசிரியர், “உங்கள் மகனிடம் சில கேள்விகள் கேட்கிறேன். அவன் சரியாகப் பதில் சொன்னால் சேர்த்துக்கொள்கிறேன்” என்றார். கன்னடத்தில், “உனது தந்தையின் பெயர் என்ன?” என்று சிவாஜியிடம் கேட்டார் தலைமையாசியர். “ரானோஜி” என்று கணீர் குரலில் பதில் வந்து விழுந்தது. “அவர் என்ன வேலை செய்கிறார்?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். “போலீஸ்” என்றான் சிறுவன். ஆச்சரியத்துடன் திரும்பினார் தலைமையாசிரியர். “இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே?” என்றார்.
“இப்போ நான் சர்வீஸ்ல இல்ல சார்... எக்ஸ் ஹெட் - கான்ஸ்டபிள். ஜூலை மாசம் ரிட்டையர்டு ஆகிட்டேன். பெஸ்ட் சர்வீஸ் அவார்ட் வாங்கியிருக்கேன். என்னை மாதிரியில்லாம இவனைப் பெரிய போலீஸ் ஆபீஸரா ஆக்கணும்” என்றார் ரானோஜி. அந்த நிமிடமே சிவாஜிக்கு அட்மிஷன் கிடைத்தது.
முதல் நாள் பள்ளியில் சேர்ந்தபோது ஒரு மணி நேரம் அழுது தீர்த்தான் சிவாஜி. அவன் அழ அழ... அவனது வாயில் மிட்டாயைத் திணித்துக் கொண்டேயிருந்தார் ஒன்றாம் வகுப்பு ஆசிரியை. தன் வயதுடைய பிள்ளைகள் தன்னைப் போலவே அழுதுகொண்டும் மூக்கைச் சிந்திக்கொண்டும் இருந்ததைப் பார்த்த சிவாஜிக்கு அழுகை நின்றுவிட்டது. தன்னருகில் அழுதுகொண்டிருந்த பையனின் கண்களைத் துடைத்துவிட்டு “அழாதே!” என்றான். அந்தக் கணமே அவர்கள் இருவரும் விளையாடத் தொடங்கினார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் தனக்குப் பல நண்பர்களைச் சம்பாதித்துக்கொண்ட சிவாஜி, துறுதுறுவென்று வகுப்பறையெங்கும் ஓடிப் பிடித்து விளையாடத் தொடங்கிவிட்டான்.
தவமிருந்து பெற்ற பிள்ளை
அங்கேயே காத்திருந்த ரானோஜி, மதியம் பள்ளி முடிந்ததும் சிவாஜி அழைத்துக்கொண்டு பெருமையுடன் வீடு வந்து சேர்ந்தார். அடுத்த நாள் முதல் உற்சாகமாகப் பள்ளி செல்ல ஆரம்பித்த சிவாஜி, பள்ளியில் சுட்டியாகவும் விளையாட்டில் கெட்டியாகவும் விளங்கினான்.
சிவாஜி என்றால் அவனது தாய் ராம்பாய்க்கு உயிர். சிவாஜி கடைக்குட்டி மட்டுமல்ல; மார்கழியின் முகப்பாக அடிக்கத் தொடங்கியிருந்த குளிருக்கு நடுவே குறைவான எடையுடன் பிறந்தவன். பிரசவம் முடிந்து மருத்துவ மனையிலிருந்து வீடு வந்த தாயையும் சேயையும் பார்த்த அக்கம் பக்கத்துப் பெண்கள், “குழந்தை ரொம்ப நோஞ்சானா இருக்கு... உனக்கும் உடம்புல ரத்தமில்ல. இந்தக் குழந்தையை எப்படித்தான் காப்பாற்றப் போறியோ?” என்று உச்சுக் கொட்டிவிட்டுப் போனார்கள். ஆனால், ராம்பாய் மனம் கலங்கவில்லை.
ஏனென்றால், நான்கு பிள்ளைகளைப் பெற்றது போதும் என்றிருந்த அந்தத் தாயின் எண்ணத்துக்கு மாறாக, அவரது கர்ப்பத்தில் சூல் கொண்டுவிட்ட குழந்தைதான் சிவாஜி. கடவுள் தந்த பிள்ளையைக் கண்ணும் கருத்துமாகப் பெற்றெடுக்க வேண்டுமே என்று காலையும் மாலையும் கோயிலுக்குப் போய் பூஜைகள் செய்வார் ராம்பாய். வாரந்தோறும் பஜனை மடங்களுக்குச் செல்வார். அவரின் ஓயாத வேண்டுதலின் பலனாக சிவாஜி பிறந்தார். எனவே, தவமிருந்து பெற்ற பிள்ளையாகக் கருதி, கடைக்குட்டி மகனைக் கொண்டாடினார். கண்ணுக்குள் வைத்துப் போற்றினார்.
அப்படி வளர்த்த மகனை மஞ்சள் காமாலை தாக்கியபோது மனமொடிந்துதான் போனார் அந்தத் தாய். மகனைக் காப்பாற்ற மனதைக் கல்லாக்கிக் கொண்டு அந்தக் காரியத்தைச் செய்தார் ராம்பாய்!
(சரிதம் பேசும்)