கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
"இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுகவின் சார்பு அணி போல செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, புதிதாக உருவான முஸ்லிம் கட்சிகள் இப்போது அதே பாணியையே கடைபிடிக்கின்றன" என்று எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றன. அடுத்து ஒவைசியின் கட்சியும் தமிழக இஸ்லாமியர்களின் வாக்குகளைக் குறிவைக்கக்கூடும் என்கிறார்கள். இந்தச் சூழலில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாவுடன் ஒரு பேட்டி...
இந்தத் தேர்தலில் ரஜினிகாந்த் கட்சி களமிறங்கினால் அதன் தாக்கம் என்னவாக இருக்கும்?
நீண்ட கால இழுத்தடிப்புக்குப் பிறகு கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தாலும், அதில் சந்தேகம் இருக்கத்தான் செய்தது. இந்த நேரத்தில் அவர் வேறொரு கட்சியைத் தன்னுடைய கட்சியாக ஆக்கிக்கொண்டு, அதற்கென ஒரு சின்னத்தையும் பெற்றுவிட்டார் என்று செய்திகள் வருகின்றன. அதிகாரபூர்வமாக அறிவிக்கும்வரையில் காத்திருங்கள் என்று அவர் சொன்னாலும், ஊடகங்கள் இந்த உண்மையை அம்பலப்படுத்திவிட்டன. ரகசியமாக வைத்துக்கொள்வதற்கு இது என்ன புரட்சிகர இயக்கமா?