என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
`இங்கு அரசியல் பேசாதீர்கள்’ என எழுதி வைத்திருக்கும் உணவகங்களுக்கு மத்தியில், அரசியலை வைத்தே புதுமை செய்திருக்கிறது கேரளத்தில் உள்ள ஒரு புட்டுக்கடை. பச்சரிசி மாவில் செய்யும் புட்டு வெண்மையாக இருப்பதுதானே நியதி? ஆனால், இங்கு அரசியல் கட்சி கொடிகளின் வண்ணத்தில் கலர்கலராய் புட்டு செய்து கொடுத்து அசத்துகின்றனர். இதனால், சகலக் கட்சியினரும் இங்கு சங்கமித்து சாப்பிட்டு மகிழ்கிறார்கள்.
திருவனந்தபுரம் அருகே உள்ள குட்டிச்சல் கிராமத்தில் உள்ளது ‘ஆமினா’ புட்டுக்கடை. இதன் உரிமையாளரான சுல்பிகருக்குச் சொந்தமாக அரிசி ஆலை உண்டு. கூடவே வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என முடிவெடுத்தவர், ஹோட்டல் தொழிலுக்குள் கால் பதிக்க எண்ணினார். எந்த மாதிரியான உணவகத்தைத் தொடங்கலாம் என நண்பர்கள் குழுவிலிருந்து ஏகப்பட்ட ஆலோசனைகள் வந்துவிழுந்தன. இறுதியில் தன் அரிசி ஆலையில் இருந்தே பச்சரிசி எடுத்து பிரத்யேகப் புட்டுக்கடை போடலாம் என முடிவெடுத்தார் சுல்பிகர்.
“எல்லாம் சரி, ‘ஆமினா’ புட்டுக்கடை அரசியல் புட்டுக்கடையானது எப்படி?” என்றதும் முகம் நிறைய புன்னகையோடு பேசத் தொடங்கினார் சுல்பிகர்.