கட்டக்காளை - 1: மண்மணக்கும் தொடர்கதை


‘டிண்ட்டக்கு...டண்டுங்... டிண்ட்டக்கு...டண்டுங்...' கொட்டுச்சத்தம் சும்மா... காதக்கிழிக்கிது. ‘ஸ்ஸ்ஸ்...டுமீல்...ஸ்ஸ்ஸ்...டமால்...' வானத்தப் பொத்துக்கிட்டு, வேட்டுச்சத்தம் பத்தூருக்கும் கேக்குது. பெரிய கோயிலுக்கு கொண்டுக்குப் போன மாசிப்பெட்டித் திருவிழா, கொலவச் சத்தம், கொட்டு மேளம், வாணவேடிக்கை, கொண்டாட்டமெல்லாம்… ஒசக்க வானத்துல முட்டிமோதி எதிரொலிச்சு... உசுலம்பட்டி வட்டாரத்துக்கே கேக்குது. 

மாசிப் பச்சைத் திருவிழா, மொத நாளன்னைக்கு, பாப்பாப்பட்டி பெரிய கோயிலுக்கு எடுத்துக்கிட்டுப்போன ஆச்சி கெழவியோட பெட்டிய… சீரும் செறப்புமா கும்புட்டுட்டு, மூனா நாத்தன்னைக்கு, திருப்பிக் கொண்டுக்காந்து, உசுலம்பட்டி சின்னக்கருப்புக் கோயில்லயே வச்சுருவாங்க, இதாங் மாசிப் பெட்டித்திருவிழா. பாப்பாப்பட்டி ஆச்சி கெழவி கோயிலுக்கு, மாசித் திருவிழாவப் பாக்கப்போற சனத்துகளவிட, பெட்டி உசுலம்பட்டிக்கு வாரன்னைக்குத்தான்… கொள்ளாச்சனம் குமிஞ்சிரும். ஆச்சி கெழவியோட கொடிவழிச் சொந்தபந்தம் பூராமே… நாடு கடந்து, தேசங்கடந்து எங்கிட்டு இருந்தாலும், அம்புட்டுச்சனமும் மாசிப்பெட்டியப் பாக்க உசுலம்பட்டிக்கு வந்து எறங்கிரும். மாசிப்பெட்டித் திருவிழான்னைக்கு... உசுலம்பட்டிக்கு வடக்க, ஊரு மத்தியில, கெழக்குத் தெசையில, மேக்க, தெக்க….ன்டு எல்லாத் தெசயிலயும், எள்ளுப்போட்டா விழுக எடமிருக்காது… அம்புட்டுக் கூட்டமாருக்கும்... சின்னக்கருப்புக் கோயிலுக்குள்ள பெட்டி போறவரைக்கும்... கூட்டம், சனங்கள கெறங்கடிச்சுரும்.

கட்டக்காளை மனசு, வானத்துக்கும் பூமிக்குமா மெதந்து, சும்மா… கும்மாளம் போட்டுகிட்டு இருந்துச்சு… மொகத்துல ஏகப்பட்ட பூரிப்பு… கட்டக்காளைக்கும், லச்சுமாயிக்கும் கல்யாணமாகி அஞ்சாறு வருஷமா கொழந்தையில்லாம குடும்பமே கெடந்து, தவியாத் தவிச்சுப் போச்சு… இப்ப, லச்சுமாயி முழுகாம இருக்கான்ற சேதி தெரிஞ்சத்திலருந்தே, கட்டக்காளைக்கு சொல்ல முடியாதளவுக்கு... சந்தோசமும் கூடிப்போச்சு…

கட்டக்காளை வம்சத்துல... மூணு தலமொறயா… ஒத்தப் பிள்ளைக்கு மேல அடுத்த பிள்ள இல்லெ... கூட்டங்கும்மல்ல, ஒத்தக்காவித்தியா திரியிறமேன்ற வேதன, தனக்குப் பின்னாடி ஆளு வேணும், ஊருல எளக்காரமாப் போயிருமேன்ற ஏக்கம், தண்ணிக்குள்ள விழுந்த எலி, மேடேறமாட்டாம...சுத்திச் சுத்தி வந்து தவியா தவிக்கிறமாரி, துடிச்சுப் போன கட்டக்காளையோட ஏக்கத்த… பத்து நாளைக்குச் சொன்னாலும் பத்தாது. கட்டக்காளைக்கும்,லச்சுமாயிக்கும் பிள்ள வரங்கேட்டு போகாத கோயிலில்ல… வேண்டாத சாமியில்ல… ஒத்தப் புள்ளகூட இல்லாமப் போயிருமோன்ற பயம், மனச கவ்விக் கவ்வி கொதறிக்கிட்டிருந்துச்சு. எந்தச்சாமி புண்ணியமோ, கட்டக்காளையோட மனக்கொறைய, இப்பத்தாங் ஏறெடுத்துப் பாத்திருக்கு. தன்னோட வம்சத்த லச்சுமாயி நல்லபடியா பெத்துக் குடுக்கணுமேன்ற நெனப்பு தான், கட்டக்காளை மனசுல கெடையா கெடக்கு… ஊருல இருக்கிற, காளாஞ்சி கருப்பு, கோட்டக் கருப்பு, காளியாத்தான்டு அம்புட்டுச்சாமிக்கும் வெளக்குப் போட்டு, விழுந்து விழுந்து கும்பிடாத நாளில்ல... ஊரயே தெரட்டி... கெடாக்கறியுஞ் சோறும் போடுறேன்டும், பெரியகோயிலுக்கும் கெடா வெட்டுறதாவும் நேத்திக்கடன் நேந்திருக்கான். மாசமா இருக்கான்றதால, ஐஞ்சாறு மாசமா, பொத்திப் பொத்தி வச்சிருந்த லட்சுமாயிய கூட்டிக்கிட்டு, மாசிப்பெட்டித் திருவிழா அன்னைக்கு, மீறுன அருளோட ஆடிவார… மாயாண்டிச்சாமி, அய்யங்கோடாங்கி கிட்டயெல்லாம் திந்நீறு வாங்கணுமின்ட ஆச... அதாங் கெளம்பிட்டுருக்காங்க…

நாலா தெசையில இருந்தும், ஊருச்சனம்பூராம் உசுலம்பட்டிக்கி கெளம்பி வந்திட்டுருக்கு...

ஆச்சி கெழவியோட மாசிப் பெட்டி எங்கென்ன வருதுன்டு, வெடிக்கிற வேட்டுச் சத்தத்த வச்சே கண்டுபுடிச்சிரலாம்…
வக... வகையா வேட்டுகள, மெனக்கட்டு கட்டச் சொல்லி வாங்கியாந்து வெடிப்பாய்ங்க. நின்டு வெடிக்கிற வேட்டு... நெதானமா வெடிக்கிற வேட்டு...

டமார் வேட்டு, புறாவேட்டுன்டு... எக்கச்சக்கமான வேட்டு வகைக… தினுசு தினுசா வேட்டுக் கட்டுறதில, வடக்கம்பட்டியான மிஞ்ச இந்த எல்கையிலயே ஆளில்லன்டு சொல்லலாம். அதுலயும், புறாவேட்டு இருக்கே... உசுரோட புறாவப் புடிச்சு, சின்னப் பெட்டிக்குள்ள அடச்சு, ரெண்டு மூணு நாளைக்குத் தாங்குறமாரி எரையும் உள்ள வச்சு, வேட்டுக் கட்டிக் குடுத்திருவாய்ங்க... வெடி, வானத்தில போயி வெடிக்கறப்ப, புறாவுக்கும் எந்த சேதாரமில்லாம ஆசாரமா பறந்துபோயிரும்… ரெண்டு மூணு நாக்கழிச்சு, வேட்டுக் கட்டுறவன் வீட்டுக்கே, அந்தப் புறா திரும்பி வந்துரும். வெரசா போகலயின்டா, கூட்டத்துக்குள்ள வெலக எடமில்லாமப் போயிரும்… எம்புட்டுத்தான் முண்டியடிச்சுக்கிட்டுப் போனாலும்... முன்னாடி நிக்கிறாளு மண்டயத்தான் பாக்கமுடியும். அம்புட்டுக் கூட்டத்தயும் வெலக்கி, சாமியாடிக்கிட்டுவார கோடாங்கிமாரப் பாத்து, திந்நீறு வாங்கமுடியாதுன்றது கட்டக்காளைக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் லச்சுமாயியை, சீக்கிரம் கெளம்பச்சொல்லி அவசரப் படுத்திக்கிட்டே இருந்தான்.

“வடகாட்டுப்பட்டிக்கிட்ட பெட்டி நெருங்கிருச்சு... ஏய்... சும்மா அங்கிட்டுங்இங்கிட்டும் பூனகெனக்காத் திரியாம, வெரசா வண்டியல ஏறுங்க...” சத்தமாக் கூப்பிட்ட கட்டக்காள, மாட்டு வண்டியப் பூட்டிக்கிருந்த ஒச்சுக்காளகிட்ட, “ஏலே ஒச்சு... பெட்டி அம்மச்சியம்மன் கோயிலுக்கு வாரதுக்குள்ள போய்ச் சேந்திரணுமிடா... மாட்டுக்குத் தண்ணி தவுடு வச்சிட்டியா, கொஞ்சங் கூலத்தையும் கட்டி வண்டியில போட்டுக்க”ன்டு சொன்னான்.

மாடா இருந்தாலும் நம்ம கூடவே... ஓடா ஒழைக்கிற உசுருக, பசியாக் கெடந்திரக் கூடாதுன்ற அக்கறயில பேசிக்கிட்டே வந்த கட்டக்காள, வண்டியில பூட்டியிருந்த மயிலக்காள ரெண்டயும், மூஞ்சி, முதுகுலயும் பாசமா தடவிக் கொடுத்தான்… நல்லா, வாட்ட சாட்டமா, வண்டிமாடு வாங்கணுமின்டு அருவம், ஒச்சுக்காளகூட சேந்து மூணு பேரும்… சந்த சந்தையா அலஞ்சது... கட்டக்காளைக்கு ஞாபகத்துல வந்துருச்சு...

வடக்க, அத்திக்கோம்ப சந்தை… கலருக்கலரா… சாட்டக்குச்சி, சுங்கம் வச்ச கயிறு, வருசையா தொங்குறதும்... காப்பிக்கட, சர்பத்துக்கட, பலகாரக்கடன்டு, ஏகப்பட்ட கடைகள்ல சனம் அலமோதுறதும்... சும்மா திருவிழாக்கணக்கா இருக்குற சந்தையில… மயிலக்காள, காரிக்காள, செவலக்காளன்டு, காள மாடுகள்ல எம்புட்டு வகை இருக்குமோ, அம்புட்டு வக மாடுகளும், இன்னொரு பக்கம் கொம்புகள சீவி பளிப்பளிண்டு வெளக்கெண்ணெயத் தேச்சு, ஓங்கு தாங்கா நிக்கிற காளைகளப் பாத்தாலே மெரட்டுறமாதிரி இருக்கு.

மாடுகளுக்கு சுழிசுத்தம் பாக்குறது, வாலு, காலு, ஒடம்பு வாட்ட சாட்டம் பாக்குறது, மாடுகள தட்டிப்பாக்குறது, தடவிப்பாக்குறது, ஓட்டிப்பாக்கிறது, பூட்டிப்பாக்குறதுண்டு... மாடுகள வாங்குறதுக்குள்ள இருக்குற அம்புட்டு வெவரத்தையும் பாத்துப் பாத்து வாங்கிறதுக்கு தனித்தெறமை வேணும்.

மாட்டுத் தரகு ஏவாரம் பாக்குற அருவம், ஆசாரமா வாங்கிட்டு வந்திருவான். உத்துனூண்டு ஒச்சங்கூட இல்லாம, மாடுகள வாங்கிட்டு வர்றதில அருவம், கெட்டிக்காரான்.

மாடுன்றது செல்வாக்கியத்த தர்ற சாமி மாரி. ஒரு சம்சாரி, வீட்ட வகுசியா ஆக்குறதும்... வக்கில்லாம ஆக்கிறதும் அதுகதான். பொண்ணுப் பாக்கப் போனா கொனமறியணும், மாடு வாங்கப்போனா சுழியறியணும்பாங்க, அதுமாரித்தான்… எந்த மாடு, தோதான மாடுன்டு... ஒத்தொத்த மாட்டயும், உத்து உத்துப் பாத்துக்கிருந்தான் அருவம்.

"எலேய்... அருவம் இங்கவாடா, இந்தமயிலயப் பாரு..." கொம்பு ரெண்டும் வாளிப்பா, பாக்குறதுக்கே சும்மா… செஞ்சு வச்ச செலகெனக்கா, அம்புட்டு அம்சமா நின்ட காளைகளக் காமிக்க… மாட்டுக்கிட்ட வந்த அருவம், நொட்டாங்கையில மாட்டு மூக்கணாங்கயித்தப் புடிச்சு, தலைய லேசாத்தூக்கி... கண்ணுக்கு, எசவா நிப்பாட்டி... மாட்டு வாயோட கீத்தாடைய சோத்துக்கய்யால தடவிப் பாத்து, "ரெண்டு பல்லு போட்டுருக்கப்பா… எளங்கன்டுதான், நல்லா வாளிப்பாருக்கு எந்த வேலைக்கும் 
பழக்கிப்புடலா”மின்டு சொல்லிக்கிட்டே… ரெண்டு கொம்புக்கும் நடுவுல, உள்ளுப்பக்கமா மாட்டுக்கு சுழி இருக்கான்டு பாத்துட்டு, “இங்க பாரப்பாய்… இப்படிக் கோபுரங் கெனக்கா இருந்துச்சுன்டா… இதாங் ராசசுழி, வீட்டுல சும்மா…செல்வாக்கியம்… கூடிப்போயிருமப்பா…”ன்டு சொன்னதும், இந்த மயிலக்காளைகள ஆச்சிக் கெழவியே அடையாளம் காமிச்சுருச்சின்டு நெனச்ச கட்டக்காள, கேட்ட பணத்த எண்ணிக் குடுத்துட்டு, வாங்கிட்டு வந்த வண்டிக்காளைக தான் இது.

எத்தனயோ வருசமாகியும்… இன்னைக்கும், கூடப்பொறந்த பெறப்பா, இந்த மயிலக் காளைக, ஆளோட ஆளா நம்ம கூடயே ஒழைச்சிட்டுருக்குக. வண்டிமாடு வாங்கப் போனத நெனச்சிட்டுருந்த கட்டக்காளை நெதானத்துக்கு வந்தான்.

எடயப்பட்டி தொந்தி ஆசாரி மெனக்கட்டு செஞ்சு குடுத்த வண்டி. தனால சாரட்டு வண்டியே தோத்துப் போறளவுக்கு இருக்குற கூட்டு வண்டியில மாடு ரெண்டும் பூட்டி தயாரா இருக்க… கட்டக்காள, லட்சுமாயி, பின்னாயி, அன்னத்தாயி ஏறி ஒக்கார... ஒச்சுக்காளயும் வண்டி மின்னாடி விசுக்கின்டு ஏறி ஒக்கார, வண்டி உசுலம்பட்டிய நோக்கி ராசா வீட்டு ரதங்கணக்கா கெளம்பிருச்சு.

வண்டிப்பாதையல ரெண்டு பக்கமும், அடத்தியா செடியும் கொடியும், மூடுன கட்டாப்பும், ஓங்கி வளந்த மரங்களும் வண்டிப்பாத நெட்டுக்க வெயிலு படாம வச்சிருக்க, பொது… பொதுன்ற மண்ணுல, சர சரன்டு வண்டி போயிக்கிருந்திச்சு... வண்டியில வந்த ஆளுக, ஆளாளுக்கு சாமிகளப் பத்துன கதைகள பேசிக்கிட்டே வந்தாக.

வண்டி செம்மேட்டுப்பட்டிய தாண்டிருக்கும்... திடீர்ன்டு, முடுச்சுக்கார கினிங்கிட்டிமாயி ஓடியாந்து வண்டிய வழி மறிச்சான்... கட்டக்காளைக்கு மனசு திக்குன்டு ஆகிப் போச்சு...

ஊரக்கெடுக்கிறவன், வம்பு தும்ப வெலைக்கு வாங்கி, வீட்டுக்குள்ள கொண்டாந்து வசமா எறக்கி விட்டுட்டுப் போறவன்... சாமி பெட்டி பாக்கப் போற நேரத்துல, கெட்ட சகுனமாரி... இவன் எதுக்கு குறுக்க வந்து நிக்கிறான்..? கட்டக்காளை மனசு செத்த வடம் தடுமாறிப் போச்சு.

(தொடரும்)

x