தலைப்பைப் பார்த்ததும், ‘கோடை வாசஸ்தலம் என்றுதானே நீலகிரியைப் பரிந்துரைப்பார்கள். நீங்கள் என்ன, வாடையில் ஒரு நாள் நீலகிரியில் எனக் குறிப்பிடுகிறீர்களே?’ என யோசிக்கிறீர்களா? சூழல் இணக்கச் சுற்றுலாவை மேற்கொள்ளும்போது, பருவ காலத்தையும் கணித்துப் பயணப்பட்டால் பலவிதமான அனுபவங்களைப் பெறலாம். இயற்கை, ஒவ்வொரு காலத்திலும் நமக்கு வெவ்வேறு விதமான அனுபவத்தைத் தரும் ஆற்றல் கொண்டது.
ஆகையால், வாருங்கள் வாசகர்களே! கோடை வாசஸ்தலமான நீலகிரிக்கு... நாம் இந்த மார்கழிக் குளிரில் ஒரு விசிட் அடிக்கலாம்.
ஏன் மார்கழிக் குளிரில்...
கோடையில் நீலகிரிக்குச் செல்வதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், வாடைக் காலத்தில் உள்ளூர்வாசிகளே இரண்டு மூன்று ஸ்வெட்டர்கள் அணிந்து, கம்பளிக்குள் சுருண்டுகொள்ளும் நிலையில், நாம் அங்கு செல்ல வலுவான காரணம் வேண்டுமல்லவா? புகைபோல் படியும் பனிக்கு ஊடே நீலகிரி மலையின் எழிலைக் காணும் சுகத்தை ஒரு காரணமாகச் சொல்லலாம். அதைவிட முக்கியமான காரணம்... பறவைக் காணல். குளிர்காலத்தில் இடம்பெயரும் விதவிதமான பறவைகளைக் காண விரும்புபவர்கள் நீலகிரிக்கு நிச்சயம் இப்போது பயணப்படலாம்.
நவம்பர் கடைசியிலிருந்து மார்ச் முதல் வாரம் வரை எண்ணற்ற புள்ளினங்கள் நீலகிரிக்கு வருகை தருவது வழக்கம். கரோனா பொதுமுடக்கம் முடிந்து சுற்றுலாத் தலங்களுக்கு அரசு அனுமதி வழங்கிவிட்ட நிலையில், பறவை ஆர்வலர்கள் நீலகிரிக்குப் பயணப்படத் தொடங்கிவிட்டனர். நீங்களும் திட்டமிட்டுக்கொள்ளலாம்!
நினைவை ரம்மியமாக்கும் பறவைகள்
இப்படியாக மார்கழிப் பனியில் மேற்கொண்ட நீலகிரிப் பயண அனுபவங்களை, கோவையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ராமச்சந்திரன் கோவிந்தராஜ் நம்முடன் பகிர்ந்துகொண்டார். கேனான் இந்தியா நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் இவர், 2020-ம் ஆண்டுக்கான டி.ஜே.எம்.பி.சி சர்வதேசப் புகைப்படப் போட்டியில் (DJMPC INTERNATIONAL PHOTOGRAPHY CONTEST) வெற்றி பெற்றவர்.
“ஒரு புகைப்படக் கலைஞனாக இயற்கைக் காட்சிகளை, வனங்களை, வன உயிரினங்களைப் படம்பிடிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஒவ்வொரு முறை இயற்கையின் மகத்துவத்தைக் கேமராவுக்குள் கடத்தும்போதும், அதை புகைப்படமாகக் காண்பவர்கள் இயற்கையைப் பேண உறுதிகொள்ள வேண்டும் என்றே ஆசைப்படுவேன். வனத்தினுள் சரியான ஒளியைத் தேர்வு செய்து புகைப்படம் எடுப்பது மிகப் பெரிய சவால். அந்தச் சவாலைக் கைவந்த கலையாக்கிக் கொண்டதாகவே என்னை எனது நண்பர்கள் பாராட்டுகின்றனர்.
கோவைதான் எனது சொந்த ஊர். எனவே, நீலகிரிக்குச் செல்வதென்பது எனக்கு அவ்வளவு மெனக்கிட்டு திட்டமிட வேண்டிய விஷயம் அல்ல. நீங்கள் வெளியூர்க்காரர் என்றால், பயணத்தை நன்கு திட்டமிட்டுக்கொள்ளுங்கள். குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி, தொட்டபெட்டா, அவலாஞ்சி, கல்ஹட்டி நீர்வீழ்ச்சி ஆகியவை வழக்கமான இடங்கள்தான். எனினும், நவம்பர் முதல் மார்ச் வரை மட்டுமே காணக்கூடிய சில பறவைகள் இந்தப் பகுதியை இன்னும் ரம்மியமாக்கிவிடும்.
மிகச் சிறிய பறவையினங்கள் இந்தக் காலகட்டத்தில் இங்கே இடம்பெயர்வது வழக்கம். அந்தப் பறவைகளைக் காண விரும்பினால் மிகவும் பாதுகாப்பான முறையில், தகுந்த முன்னேற்பாட்டுடனும், சிறந்த வழிகாட்டியுடனும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் ‘ட்ரெக்கிங்’ செல்லலாம். சிறுத்தை அச்சுறுத்தல் இருக்குமென்பதால் பறவைக் காணலுக்குச் செல்லும்போது கூடுதல் கவனம் அவசியம்.
என்ன என்ன பறவைகளோ...
வெர்டிடர் ஃப்ளை கேட்சர், காஷ்மீரி ஃப்ளை கேட்சர், டைகா ஃப்ளை கேட்சர், ப்ளூ கேப்ட் ராக் ட்ரஷ், ப்ளூ த்ரோடட் ஃப்ளை கேட்சர், ப்ரவுன் ப்ரெஸ்டட் ஃப்ளை கேட்சர், க்ரே வேக்டெய்ல், க்ரே ஃபளை கேட்சர், க்ரே ஹெட்டட் கேனரி ஃப்ளை கேட்சர், ப்ளாக் அண்ட் ஆரஞ்சு ஃப்ளை கேட்சர், டிக்கெல்ஸ் ப்ளூ ஃப்ளை கேட்சர், ஏசியன் ப்ரவுன் ஃப்ளை கேட்சர், இந்தியன் ப்ளூ ராபின், நீலகிரி வுட் பீஜன், நீல்கிரி லாஃபிங் ட்ரஷ், இந்திய ஸ்கிமிட்டர் பேப்ளர், வெர்னல் ஹேங்கிக் பேரர், எமரால்டு ட்ரோவ், மலபார் விஷ்லிங் ட்ரஷ், ஓரியன்டல் ஐ, ரோஸ் ஃபின்ச், ஸ்கேலி ப்ரெஸ்டட் முனியா போன்ற பறவைகளை இந்தக் காலகட்டத்தில் காண முடியும்.
பறவைகள்தானே என நாம் மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. தாவரங்களும், செடிகளும், கொடிகளும், மரங்களும்தான் வனம். அந்த வனத்தின் வளத்தைப் பறவைகள் உறுதிசெய்கின்றன. பறவைகளின் எச்சங்கள் வளமான சூழலுக்கு வித்திடுகின்றன. மகரந்தச் சேர்க்கைக்குச் சிறு பறவைகள் தூதுவர்களாக இருக்கின்றன. அவற்றை நேரில் காண்பது அலாதியான சுகம் அல்லவா" என்று கூறி மார்கழியில் நீலகிரி செல்ல பரிந்துரைக்கிறார் ராமச்சந்திரன்.
பொறுப்பையும் சுமந்து செல்லுங்கள்
வனத்துக்குள் சுற்றுலா செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்புணர்வை ‘காமதேனு’ மீண்டும் மீண்டும் வலியுறுத்திவருகிறது. அதை மீண்டும் நினைவூட்டுகிறோம். சூழல் இணக்கச் சுற்றுலாவை அரசு முன்னிலைப்படுத்துவதற்கான காரணமும் சுற்றுச்சூழலைப் பேணுவதில் மக்கள் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே. வனத்துக்குள் பிரவேசிப்பது பொழுதுபோக்குவதற்காக அல்ல. உலகம் இயங்கக் காரணமாக இருக்கும் உயிர்களைத் தரிசிக்க... அவற்றின் அவசியத்தை, தாத்பரியத்தை அறிந்துகொள்ள! பறவைகளும், விலங்குகளும், தாவரங்களும் முழுக்க முழுக்க மனிதனின் பயன்பாட்டுக்காக மனிதன் அனுபவிக்க உருவாக்கப்பட்டவை அல்ல. அதைப் புரிந்துகொண்டு உயிரிச் சமநிலையை (bio balance) நாம் பேண வேண்டும்.
இயற்கையை நோக்கிய உண்மையான பயணம் அதுதான்!