ரஜினியை அரசியலுக்கு அழைத்து வந்த சக்தி எது?


ஜெ.ராம்கி
readers@kamadenu.in

ரஜினி வந்துவிட்டார்! “தேர்தலில் நான் வென்றால், அது மக்களின் வெற்றியாக இருக்கும். தோல்வி அடைந்தால் அது மக்களின் தோல்வியாகத்தான் இருக்கும்” என்று மனம் திறந்திருக்கிறார். அதுமட்டுல்ல, “என் ரசிகர்களுக்காக என் உயிரே போனாலும் கவலையில்லை. கொடுத்த வாக்கிலிருந்து என்றைக்கும் மாற மாட்டேன்” என்று உறுதியாகக் கூறிவிட்டார். எனவே, இப்போதே அரசியல் கணக்குகள் தொடங்கிவிட்டன. அதேநேரம், “ரஜினி கட்சி தொடங்கி நேரடி அரசியலுக்கு வரப்போவதே கிடையாது. தனது படங்களைத் திரையரங்குகளில் ஓட வைப்பதற்கான ஓர் உத்தியாகவே அரசியலைத் தொட்டுக்கொள்கிறார்” என்று விமர்சித்தவர்கள் அதிகம். அத்தகைய விமர்சனங்களைத் தவிடுபொடியாக்கிவிட்டு, ரஜினியை உறுதியுடன் நிற்கச் செய்து, அரசியலுக்கு அழைத்து வந்தது எது என்பதுதான் அவரது அரசியல் எதிரிகளின் மனதைக் குடைந்துகொண்டிருக்கும் கேள்வி.

அது 2017 ஜனவரி. ‘துக்ளக்’ பத்திரிகையின் ஆண்டு விழா. அதில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, “தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது” என்று குறிப்பிட்டார். சோ, ஜெயலலிதா பற்றிய நினைவலைகளாகப் பத்து நிமிடங்கள் பேசிவிட்டு, நாட்டு நடப்பு பற்றி குறிப்பிட்ட அந்த ஒற்றை வரிதான் திருப்புமுனையாக அமைந்தது. ரஜினி சொன்ன அசாதாரண சூழல், மறுநாள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டமும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் நாடறிந்த விஷயம்தான்.

ரஜினியின் அரசியல் வருகையை விரைவுபடுத்தியது, அந்த அசாதாரண சூழல்தான். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து கவனித்துவந்த ரஜினி, அது வன்முறையில் முடிந்தபோது, “அமைதி திரும்ப வேண்டும்” என அறிக்கை விடுத்தார். அதுவரை உடல்நலக்குறைவின் காரணமாக ரசிகர்களை நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்த்து வந்த ரஜினி, ரசிகர்களைச் சந்திக்கவும் முடிவு செய்தார். தமிழகமெங்கும் உள்ள ரசிகர் மன்றத்தினரை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சந்திக்க முடிவானது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தீவிர ரசிகர்களின் முழு விவரங்களும் திரட்டப்பட்டு, அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டது. 2017 முதல் 2019 வரை ரசிகர்கள் சந்திப்பைத் தொடர்ந்து நடத்தவும் திட்டமிடப்பட்டது.

x