பொங்கலூருக்கு மீண்டும் சிங்காநல்லூர்?
கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்திலேயே திமுக வென்ற ஒரே ஒரு தொகுதி சிங்காநல்லூர். வழக்கமாக இந்தத் தொகுதி மீது கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு கண் உண்டு. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சி இப்போது சிங்காநல்லூருக்காக மல்லுக்கட்டுகிறது. ஆனால், இது தங்களுக்கு சிட்டிங் தொகுதி என்பதால் திமுகவினர் பிடிவாதமாக இருக்கிறார்கள். அதேநேரம், இந்தத் தொகுதியில் தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும் கார்த்திக்குக்கு எதிராக திமுகவுக்குள்ளேயே புகைச்சல். உள்ளூர் அமைச்சருடன் மறைமுக தொடர்பில் இருப்பதாக கார்த்திக்குக்கு எதிராக கழகத்தினரே கலகம் செய்கிறார்கள். இதனால் கார்த்திக் இந்த முறை சிங்காநல்லூரில் நிற்க மாட்டார் என்ற பேச்சும் ஓடுகிறது. இதைக் கணக்குப் போட்டு, தனக்கு மிகவும் பரிச்சயமான சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி காய்நகர்த்துகிறாராம்.
நேரு கோட்டையை நெருங்கும் மகேஷ்
உதயநிதி ஸ்டாலினின் மிக நெருங்கிய தோழரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தற்போது திருச்சி திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருக்கிறார். இந்த நிலையில், திருச்சி திமுகவின் பிரதான தளபதியாக இருந்த கே.என்.நேரு கட்சியின் முதன்மைச் செயலாளராகி தலைமைக் கழகம் சென்றுவிட்டதால், திருச்சியில் அவரது இடத்தைப் பிடிக்க மெனக்கிடுகிறார் மகேஷ். இதற்காக, வரும் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம் அவர். இதற்காக கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளை கொஞ்சம் கொஞ்சமாக தன் பக்கம் ஈர்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலினை தான் போட்டியிட திட்டமிடும் திருச்சி கிழக்கு தொகுதிக்குள் வரும் சத்திரம் பகுதிக்கு அழைத்து வந்து, கொடியேற்று விழாவையும் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார் மகேஷ். திருச்சி கிழக்கை இவர் குறிவைப்பது இருக்கட்டும்... நேரு என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லையே!