வனமே உன்னை வணங்குகிறேன்..! 20 - கொடைக்கானலுக்கு மிக அருகில்…


கோடை நெருங்க நெருங்க, இயல்பாகவே மனம் கோடை வாசஸ்தலங்களைத் தேடும். ஆனால், கோவிட் 19 அச்சுறுத்தலோ சமூக விலகலை நிர்பந்திக்கிறது. ஆகையால், இப்போதைக்கு அரசு அறிவிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுலா திட்டமிடல்களைத் தள்ளிவைப்பது மிக முக்கியம் என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறோம். இந்த வாரம் புதியதொரு சுற்றுலா தலத்தைத் தெரிந்துகொள்வோம். எல்லாம் சரியான பின்னர், இங்கு செல்ல திட்டமிட்டுக்கொள்ளலாம்!

இந்த வாரம், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிக்குடி, அஞ்சுவீடு பகுதிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். கொடைக்கானலுக்குச் சென்றிருந்தாலும்கூட இந்த இடங்களைப் பெரும்பாலானோர் கண்டு ரசித்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்தத் தகவல்கள் பலருக்குப் புதிதாக இருக்கும்!

குட்டிக் கொடைக்கானல்

கொடைக்கானலின் எழிலுக்குச் சற்றும் குறையாத அழகைத் தன்னகத்தே கொண்டுள்ள தாண்டிக்குடி, ‘குட்டிக் கொடைக்கானல்’ (Half Kodai) என்றுதான் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தாண்டிக்குடி, சுற்றுலா ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியிருக்கும் கொடைக்கானலிலிருந்து விலகி 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வத்தலகுண்டுவிலிருந்து வந்தால் 47 கிலோமீட்டர் தொலைவு. தனிமையில் இனிமை காண விரும்புவோர் ஆர்வத்துடன் தாண்டிக்குடி வருகின்றனர். சூழல் இணக்கச் சுற்றுலா மையமாக தாண்டிக்குடி விரைவில் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
எழில்மிகு தாண்டிக்குடிக்கு ஒரு பெயர்க் காரணம் உண்டு. முருகக் கடவுள் இந்த இடத்திலிருந்து பழநி மலைக்கு தாவிச் சென்றதால் இப்பெயர் என்கின்றனர் உள்ளூர்வாசிகள். இங்கு பாலமுருகன் கோயில் ஒன்று உள்ளது. கதவுமலை சிவன் கோயில் என்ற கோயிலும் உண்டு. கதவுமலை கோயிலுக்குச் செல்ல எப்போதுமே அனுமதி இல்லை.

தொல்லியல் ஆர்வலர்களின் விருப்பமான இடமாகவும் தாண்டிக்குடி உள்ளது. இங்குள்ள கி.பி 1280-ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள், தொன்றிக்கோன், கோடைப்பொருநன் என்ற சங்ககால அரசர்களின் குறிப்பைத் தாங்கியுள்ளன. இங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தொல்லியல் ஆர்வலர்களின் நீண்ட கால கோரிக்கை. மத்திய காபி ஆராய்ச்சி மையம், ஏல ஆராய்ச்சி மையம் மற்றும் மண்டல வாசனைப் பொருட்கள் ஆராய்ச்சி நிலையம் ஆகியனவும் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர்க்காரரின் உணர்வுபூர்வப் பகிர்வு

கொடைக்கானலிலேயே பிறந்து வளர்ந்து அங்கேயே சுய தொழில் செய்துகொண்டிருக்கும் ஏ.அப்பாஸ், தான் சிறுவயதில் பார்த்த கொடைக்கானலையும், தற்போது வணிகச் சுற்றுலா மையமான பிறகு அதன் மீது நிலவும் அழுத்தத்தையும் பற்றி பேசினார். அத்துடன் தாண்டிக்குடி, அஞ்சுவீடு பகுதிகளின் எழிலையும் எடுத்துரைத்தார்.

“சோலைக்காடுகளால் சூழப்பட்டிருக்கும் தாண்டிக்குடி, இயற்கை எழிலுக்காக மட்டுமல்ல, தொல்லியல் எச்சங்களுக்
காகவும், அறிவியல் ஆராய்ச்சி மையங்களுக்காகவும், மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகளுக்காகவும் பிரசித்தி பெற்றது. ட்ரெக்கிங் செல்பவர்களின் முதல் தெரிவாகத் தாண்டிக்குடி இருக்கிறது.

வழக்கமாகக் கொடைக்கானல் வருவோருக்கு 12 மைல் ரவுண்ட் (Twelve Mile Round) என்ற வணிகச் சுற்றுலா மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. அப்பர் லேக் வியூ, பைன் ஃபாரஸ்ட், மோயர் பாயின்ட், குணா கேவ்ஸ், பில்லர் ராக், சூசைட் பாயின்ட் அரை நாள் சுற்றுலா செல்லலாம். மதிய உணவுக்குப் பின்னர் செட்டியார் பார்க், குறிஞ்சி ஆண்டவர் கோயில், பழநி டெம்பிள் வியூ என்று சுற்றிக்காட்டப்படும். பெரும்பாலானோர் இத்துடன் கொடைக்கானல் பயணத்தை முடித்துக்கொள்கின்றனர்.

சுற்றுலா அழுத்தம்

ஆனால், சிலர் மேலும் சில நாட்களுக்குத் தங்கிவிடுகின்றனர். அவர்கள் இரண்டாம் நாளில், பேரிஜமுக்குச் செல்லலாம். மோயர் பாயின்ட் செக் போஸ்ட்டில் ஆரம்பித்து கேப்ஸ் ஃப்ளை வேலி வியூ, பேரிஜம் லேக் வியூ, பேரிஜம் லேக் என்ற பேக்கேஜும், அடுத்ததாக பூம்பாறை வில்லேஜ் டூர் என்ற பேக்கேஜும் செயல்படுத்தப்படுகின்றன. என் சிறு வயதில் பார்த்ததைவிட இந்த இடங்களில் மனிதர்களின் அழுத்தம் அதிகமாக இருப்பதாகவே உணர்கிறேன். கொடைக்கானல் ஏரி இன்னும் முழுமையாகக் கெட்டுவிடவில்லை. எனவே, இப்போதாவது சுற்றுலா அழுத்தத்தை முறையாகக் கட்டுப்படுத்தி ஏரியைப் பாதுகாக்க வேண்டும்.

பிரத்யேக அனுபவம்

வழக்கமான, இந்தச் சுற்றுலா மையங்களில் பெற முடியாத அனுபவத்தை உள்ளூர்வாசியாக நான் தாண்டிக்குடியிலும், அஞ்சுவீடு பகுதியிலும் பெற்றேன். கொண்டை ஊசி வளைவுகள், உங்களைத் தாண்டிக்குடிக்கு வரவேற்று அழைத்துச் செல்லும். பாதையின் இரு புறங்களிலும் காபி தோட்டங்களும், ஏலக்காய் தோட்டங்களும் நறுமணத்தால் வணக்கம் சொல்லும். இவை தவிர வெனிலா பீன் பயிர்களும், மிளகு தோட்டங்களும், மலைவாழைத் தோப்புகளும், ஆரஞ்சு, எலுமிச்சைத் தோட்டங்களும் காணக்கிடைக்கும். சூரியக்கதிரில் ஜொலிக்கும் மதுரா நதியையும் பார்க்கலாம். தாண்டிக்குடி செல்லும் வழியில் குரங்குகளும் இருக்கும். தயவுசெய்து உப்பு சுவை மிகுந்த நமது உணவை அவற்றுக்குப் பழக்கப்படுத்தாமல் கடந்துவிடுங்கள். சில நேரங்களில் மக்கள் விட்டுச்செல்லும் உணவு மிச்சங்களைக் காட்டெருமைகள் உள்ளிட்ட விலங்குகள் ருசிப்பதைப் பார்த்து வருந்தியிருக்கிறேன். இத்தனை செழுமைமிகு தாண்டிக்குடியைச் சூழல் இணக்கச் சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, மாவட்டச் சுற்றுலா அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது.

அழகு நிறைந்த அஞ்சுவீடு

தாண்டிக்குடியைப் போலவே அழகு நிறைந்தது அஞ்சுவீடு எனும் மலைக் கிராமம். ஆனால், இதுவும் சுற்றுலா மையமாக அறிவிக்கப்படாததால் உள்ளூர்வாசிகளின் உதவி இல்லாமல் நிச்சயமாகப் பயணப்படாதீர்கள். பேத்துப்பாறை செல்லும் வழியில் இது உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ்ந்துவருகின்றன. இங்கு ஓர் அருவி உள்ளது. லெமன் கிராஸ் புல்வெளியின் ஊடே பயணித்தால் அருவியை அடையலாம். மீண்டும் சொல்கிறேன், உள்ளூர்வாசிகளின் உதவியில்லாமல் சென்றால் ஆள் உயரப் புல்களுக்கு இடையே தொலைந்துபோவீர்கள். மேலும், அஞ்சுவீடு பகுதி யானைகள் வலசை வரும் பகுதி. 6 மாதங்களுக்கு ஒரு முறை யானைகள் வந்து செல்வதால் உள்ளூர்வாசிகளே மிகுந்த எச்சரிக்கையுடன்தான் இருப்பார்கள். அதனால், காலமும் சூழலும் அறிந்து அங்கு செல்லலாம்” என்றார் அப்பாஸ்.

பாதுகாப்பான சூழல் சுற்றுலா மையமாக இந்த இடங்களை உருவாக்கினால், இயற்கையை நேசிப்பது மட்டுமே இலக்கு என்று வரும் சூழல் இணக்கச் சுற்றுலாவாசிகளுக்கு, அழுத்தம் இல்லாத இடமாக இவை அமையும். அதுவரை உள்ளூர்வாசிகளின் உதவியுடன் பாதுகாப்பாகச் சென்று வரலாம்.

பின்குறிப்பு: கரோனா காரணமாகப் பெரும்பாலானோர் வீட்டிலேயே இருக்கும் சூழல் உருவாகியுள்ளதால், ‘வனமே உன்னை வணங்குகிறேன்’ தொடரின் பழைய அத்தியா யங்களை https://www.hindutamil.in/kamadenu என்ற இணையப் பக்கத்தில் ‘தொடர்கள்' பகுதியில் வாசிக்கலாம்.

படங்கள் உதவி: ஏ.அப்பாஸ் 

x