மற்றவை வெண் திரையில் - 7: கவிதா ஒரு காவியம்


கே.பாலசந்தர் படம் என்றால் பெரியவர்கள் அனைவரும் கொண்டாடுவார்கள். 

எனக்கு அந்த வயதில் பெரிய உவப்பில்லை. சண்டை இல்லாத படத்தை யார் பார்ப்பார்கள்? கதாபாத்திரங்கள் வசனம் பேசுவதை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருப்பது? ‘மிட்லாண்’டில் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ரிலீஸானபோது ஒரு இரவுக் காட்சி செல்லத் தயாரானோம்.

திருவல்லிக்கேணியிலிருந்து நடந்து போய் வரும் தூரம். அப்பா அலுவலகம் முடிந்து வீடு திரும்ப எட்டு மணியாகும். அதனால் பெரும்பாலும் இரவுக் காட்சிகள்தான் செல்வோம். எனக்கு ஆள் அரவம் அதிகமில்லாத நள்ளிரவில் திரும்பி நடந்து வரப் பிடிக்கும்.

கமலதாசன்!

அப்படி இருந்தும் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்துக்குப் போகப் பிடிக்கவில்லை. “சண்டை இருக்குமா?” என்று விசாரித்தேன். “இருக்கும்” என்றார் அப்பா. சிவகுமார் பற்றி சுமாரான அபிப்பிராயம் இருந்தது. வில்லன் யார் என்று கேட்டேன். ஏதோ ஒரு பெயர்… கமலதாசன் என்று என் காதில் விழுந்தது. சிவகுமாருக்கும் கமலதாசனுக்கும் ஒரு சண்டைக் காட்சியாவது இருக்கும் என்று நம்பிப் போனேன். சிவகுமாரின் ரொமான்ஸைவிட கமலின் மெலிதான வில்லத்தனம் பிடித்தது. இருந்தும் ஒரு சண்டை காட்சிகூட இல்லாதது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.

இம்முறை பாட்டி வீட்டிலிருந்து இன்னொரு பாலசந்தர் படத்திற்குப் பரவசமாக கிளம்பினார்கள். சிறுவன் நான், என்ன செய்ய முடியும்? நாயகன் யார் என்று கேட்டால் சரியாகப் பதில் இல்லை. எந்த ஆர்வமும் இல்லாமல் சென்றேன். பல்லாவரம் ‘ஜனதா’ தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது, ‘அவள் ஒரு தொடர்கதை’.

சிம்ம சொப்பனம்!

அறிமுகக் காட்சிகளே கன்னத்தில் அறைவது போன்று இருந்தன. 

யாரோ புதுமுக நடிகை சுஜாதாவாம். என்ன அழுத்தம்... என்ன மிரட்டல்? நான் ஆடிப்போயிருந்தேன். ‘கவிதா ஒரு கவிதை. அவள் 
கதை ஒரு தொடர்கதை..!’ என்ற வாய்ஸ் ஓவரில் கதை நகர ஆரம்பிக்கிறது.

ஓடிப்போன அப்பா, பொறுப்பில்லாத குடிகார அண்ணன், விதவைத் தங்கை, பார்வையில்லாத தம்பி, அண்ணி, அம்மா, குழந்தைகள் என ஒரு உடைந்த கூட்டுக் குடும்பத்தைத் தனி ஆளாய் திடமாய்த் தாங்கும் பெண்ணாகக் கவிதா. குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர். தன் காதலையும் காதலனையும் குடும்பச் சூழலுக்காகக் காத்திருக்க வைக்கிறாள்.

எல்லோரும் அஞ்சி நடுங்கும் சிம்ம சொப்பனம் கவிதா. “அவ *** (ஆம், வசவுச் சொல்தான்!) மாதிரி டிரெஸ் பண்ணிட்டுப் போறா” என்று அண்ணனே சொல்கிறான். கண்ணைக் கசக்கினாலும் அம்மாவும் அண்ணியும் கவிதாவைக் கரித்துக் கொட்டு
கின்றனர். அக்கா போன பின் அவளைப் போல மிமிக்ரி செய்து பழிக்கின்றன உடன்பிறப்புகள். யார் புரிதலுக்கும் காத்திராமல் கம்பீரமாய் நடைபோடுகிறாள் கவிதா.

இதற்கிடையே, வாய்ப்பு தேடும் ‘விகடகவி’ கோபாலுக்கு விதவைப் பெண் மீது நாட்டம். அலுவலகத்தில் சபல புத்தி பாஸ் கவிதாவுக்கு லவ் லெட்டர் கொடுக்க, அலட்டிக்கொள்ளாமல் அதன் ஆங்கிலத்தைத் திருத்தி தந்துவிட்டுப் போகிறாள். கொஞ்சம் எல்லை மீறினால் தவறில்லை என்று எண்ணும் தோழியிடமும் தள்ளி நின்று அன்பு செலுத்துகிறாள்.

மாறும் மதிப்பீடுகள்

இத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும், கதையின் நங்கூரம் கவிதாதான். கதை செல்லச் செல்ல கதாபாத்திரங்கள் பற்றிய மதிப்பீடுகள் நமக்கு மாறிக்கொண்டே வருவதைக் கவனிக்கலாம். திமிர் பிடித்தவள் என்று அறிமுகமாகும் கவிதா நம் பரிதாபத்தைச் சம்பாதிக்கிறாள். கவிதாவின் காதலன் திலக், கண்ணியமாகத் தோன்றுகிறான். கவிதாவின் விதவை தங்கைக்கு ஆசைப்படும்போது நம் மரியாதையை இழக்கிறான். விகடகவி கோபால் தன் காதலி வேறொருவனை மணமுடிக்க, கண்கலங்கி மிமிக்ரி செய்யும்போது நாமும் சிரித்துக்கொண்டே அழுகிறோம். குடிகார அண்ணன் மூர்த்தியைப் படம் முழுவதும் வெறுக்கிறோம். ஆனால், அவன் மனம் திருந்தி வருகையில் நெகிழ்கிறோம். துரதிஷ்டவசமாக அவன் கொலை செய்யப்பட, நாம் பதைபதைத்துப் போகிறோம். பிறழ்ந்த உறவில் இருந்த தோழியை முதலில் மலிவாகப் பார்க்கிறோம். பின் அவள் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்கையில், அவளை மன்னித்து நன்றாக வாழ வாழ்த்துகிறோம்.

முதலில் காதலனைத் தங்கைக்கு விட்டுக்கொடுக்கிறாள் கவிதா. இறுதியில் அண்ணன் சாவினால் மீண்டும் குடும்ப பொறுப்பைக் கையில் எடுக்க நேர்கிறது. தன்னை மணமுடிக்க முன் வந்த மாப்பிள்ளையை இன்னொரு தங்கைக்கு விட்டுக்கொடுக்கிறாள். அதே பஸ்ஸில் அதே வேலைக்கு மீண்டும் செல்கிறாள் கவிதா.

கவிதா, திலக், மூர்த்தி, கோபால் என்றுதான் மனதில் படம் ஓடிக்கொண்டிருந்தது. அப்படி ஒரு வலிமையான பெண் பாத்திரத்தை அது வரை திரையில் நான் பார்த்திருக்கவில்லை. நான் பார்த்த எல்லா நாயகர்களையும் நடிகை சுஜாதா தூக்கிச் சாப்பிட்டுவிட்டதாக நினைத்தேன். மலையாளத்தில் சில படங்கள் நடித்திருந்தாலும், தமிழில் அவருக்கு இதுதான் முதல் படம்.

பார்வையின் தொலைவு

முதன்முறையாக இந்தப் படத்தைப் பார்த்தபோதே முழுதாக ஜீரணம் செய்ய முடியவில்லை. இரண்டாம் முறை பார்க்கும் வாய்ப்பு ஒரு மாதத்திலேயே கிடைத்தது. இம்முறை பெற்றோர்களுடன் ‘சித்ரா டாக்கீ’ஸில். பார்த்த படத்தை மீண்டும் பார்க்கும் பேரனுபவத்தை முதல் முறையாகப் பெற்றேன். படத்தில் சிறிய பாத்திரம் பஸ் கண்டக்டருக்கு. கவிதாவைத் தூரத்தில் நின்று பார்க்கும் பாத்திரம். அவருக்கும் கல்யாண பத்திரிகை வைப்பாள். கடைசிக் காட்சியே பஸ்ஸில்தான் முடியும். நாமும் பஸ் கண்டக்டர் போலத்தான் கவிதாவின் வாழ்க்கையைத் தள்ளியிருந்து பார்க்கிறோம்.

திரையில் ஓர் குறிஞ்சி மலர்

‘அவள் ஒரு தொடர்கதை’ ஆறு மாதங்கள் ஓடி பெரு வெற்றி கண்ட படம். தெலுங்கு, கன்னடம், வங்காளம், இந்தி எனப் பல மொழிகளில் பின்னர் எடுக்கப்பட்டது. தெலுங்கில் அண்ணன் பாத்திரத்தில் ரஜினி நடித்தார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், பின்னாட்களில் பெண் பாத்திரங்களை முன்னிறுத்தி படங்கள் எடுக்க பெரிதும் காரணமான படம் இது என்று சொல்லலாம்.
இந்தப் படம் ரித்விக் கட்டக் இயக்கிய ‘மேகே தாக்கா தாரா’ (1960) எனும் வங்காளப் படத்தின் பாதிப்பு என்று படித்திருக்கிறேன். ‘அவள் ஒரு தொடர்கதை’ பாதிப்பில் தமிழிலும் நிறைய படங்கள் வந்தன. இராம நாராயணன்கூட, தனது ஆரம்பகாலப் படங்களில் ஒன்றான ‘சுமை’ படத்தை இதே வார்ப்பில்தான் எடுத்தார். ஆனால், ‘அவள் ஒரு தொடர்கதை’ அரிதாய் பூக்கும் குறிஞ்சி மலர் போல என்றே கருதுகிறேன்!

எம்.எஸ்.பெருமாள் எழுதிய கதைக்கு உயிர் கொடுத்த சுஜாதாவும், முத்தான பாடல்கள் தந்த கண்ணதாசனும் பாலசந்தருக்கு இணையாக படத்திற்கு உயிரூற்றினார்கள். கமல் முழு நாயகனாகத் தயாராகிவிட்டது இந்தப் படத்தை மீண்டும் பார்க்கையில் தெரிந்தது. ஸ்ரீபிரியாவிற்கு சிறிய வேடம்; ஆனால், பெரிய ஆளுமை தெரிந்தது. ஜெய்கணேஷும் விஜயகுமாரும் நல்ல புது வரவுகள்.
ஒரு திரைக்கதையை எப்படி தொய்வில்லாமல் எழுதலாம். வசனம் மூலம் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எப்படி தூக்கி நிறுத்தலாம் என்று தெரிந்துகொள்ள நினைப்பவர்கள், ‘அவள் ஒரு தொடர்கதை’யை ஒரு முறை பார்க்கலாம். திலக்கின் அம்மா கவிதாவைப் பார்த்தவாறு சொல்வார்: “கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு இவ்வளவு கர்வமா இருக்காளே?” என்று. அதற்கு கவிதா பதில் சொல்வாள்: “ கல்யாணத்திற்கு முன் பொண்ணு கர்வமா இருக்கலாம்; கர்ப்பமாதான் இருக்கக் கூடாது!”
கடந்து சென்ற கவிதாக்கள்

வாழ்க்கையின் பல்வேறு பயணங்களில் எத்தனையோ கவிதாக்களைப் பார்க்கிறேன். உறவுகளில், அலுவலகங்களில், வீட்டு வேலை செய்யும் பெண்கள் மத்தியில் எத்தனை கவிதாக்கள்? ஆணைவிட பெண், குடும்பப் பொறுப்பைச் சுமப்பது உலகமெங்கும் நடக்கும் கதைதானே! அடிமட்டங்களில் சமமான கூலி கிடைக்காவிடினும் குடும்பத்திற்குச் செல்வது பெண்ணின் ஊதியம்தானே? இன்றும் பொறுப்பில்லாத ஆண்களால் உடையும் குடும்பங்களைத் தாங்கிச் சுமக்கும் கவிதாக்கள் வீட்டுக்கு வீடு இருக்கிறார்கள்.
படத்தில் வரும் ஒவ்வொரு பாடலையும் எடுத்து பேசிக்கொண்டே போகலாம். எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் கலகப் பாடலாக வரும் ‘அடி என்னடி உலகம்’ பாடல் ஒரு சோற்றுப் பதம். பாடலின் ஒரு வரி கவிதாவின் கதையைத் தீர்க்கமாகச் சொல்கிறது. ‘சேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா?’

தீராது! ஆம், கவிதா ஒரு தொடர் காவியம்!

படங்கள் உதவி: ஞானம்

(திரை விரியும்…)

x