ரோகிணி
readers@kamadenu.in
“மூலை முடுக்கெல்லாம் போய்ச் சொல்லுங்க. மக்கள்கிட்ட அந்த எழுச்சி வரட்டும். அந்த எழுச்சி என் கண்ணுக்குத் தெரியணும். அப்ப நான் அரசியலுக்கு வர்றேன்” என்று ரஜினி சொன்னதை ஆளுக்காள் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொண்டாலும், “எங்கள் தலைவர் சரியாகத்தான் பேசியிருக்கிறார். சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறார். நீங்கள் எல்லோரும்தான் அவரது பேச்சைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்” என சுறுசுறுப்பாய்க் கிளம்பிவிட்டார்கள் ரஜினி மன்ற நிர்வாகிகள்.
‘அரசியல் மாற்றமும், ஆட்சி மாற்றமும் இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை’, ‘அரசியல் புரட்சிக்கு ஒன்றிணைவோம். முதலில் அரசியலில் தூய்மை இருந்தால்தான் ஆட்சியில் தூய்மை இருக்கும்!’, ‘சுவாமி விவேகானந்தர், அறிஞர் அண்ணா சொன்னதைப் போல் தலைமை ஏற்க இளைஞர்களை அழைக்கிறார் மக்கள் தலைவர் ரஜினிகாந்த்’… இப்படி ரஜினி பேசியதன் சாராம்சத்தைச் சாறாகப் பிழிந்து பன்ச் வசனங்களாக மாற்றி அவற்றையெல்லாம் போஸ்டர்களாக அச்சடித்திருக்கிறார்கள் ரசிகர்கள். அத்துடன், ரஜினி பேசிய உரையை உள்ளடக்கி ஒரு படிவத்தையும் தயார்செய்து வீடுதோறும் சர்வேயும் எடுக்கவிருக்கிறார்கள். கோவை, திருப்பூர் நகரங்களில் போஸ்டர்களும் களம் இறங்க ஆரம்பித்துள்ளன. இந்தப் போஸ்டர்களில் காணப்பட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினேன்.
“தலைவர் பேட்டி கொடுத்த ரெண்டாவது நாளே தலைமையிலிருந்தே வந்த உத்தரவு இது. மன்ற மாவட்ட நிர்வாகிகள், தலைவர் பேசியதன் முக்கிய அம்சத்தைத் தலைப்பாக்கி போஸ்டர்கள் தயார் செய்து வார்டு வாரியாக மன்றங்களுக்கு வழங்க வேண்டும். அதை வீதிதோறும் அவர்கள் மக்கள் கண்ணில் படும் இடங்களில் ஒட்ட வேண்டும். அதேசமயம் ரஜினி சொன்ன வார்த்தைகளை வைத்து சில கேள்விகள் அடங்கிய படிவங்களையும் தயார் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். ‘50 வயதுக்குட்பட்டவர்களுக்குப் பதவி என்பதை ஆதரிக்கிறீர்களா?’, ‘அதிமுக ஆட்சி பற்றிய ரஜினியின் கருத்தை ஆமோதிக்கிறீர்களா?’ என்பன போன்ற கேள்விகளை அதில் சேர்க்கச் சொல்லியிருக்கிறார்கள்.