டாக்டர் கு. கணேசன்
gganesan95@gmail.com
‘கோவிட்-19’ என்று அழைக்கப்படும் கரோனா வைரஸ் காய்ச்சல் இன்று உலகையே உலுக்கியெடுக்கிறது. சீனாவில் தொடங்கிய இதன் ஊற்றுக்கண், உலகமெங்கும் மளமளவென பரவ… உறைந்துபோயிருக்கிறது மனித இனம். நெருக்கடியான இந்த நேரத்தில், கரோனா வைரஸ் பற்றி நிறைய பேச வேண்டியிருக்கிறது. கூடவே, இதுபோன்ற தொற்றுநோய்கள், கொள்ளைநோய்களைப் பற்றிய அறிமுகத்தையும், அவற்றின் பின்னணியில் இருக்கும் கிருமிகளைப் பற்றிய விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்க வேண்டியிருக்கிறது. அதற்காகவே தொடங்குகிறது இந்தப் புதிய தொடர்!
2019, நவம்பர் 17-ம் தேதி…
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரவாசிகள், உலகத்தையே நடுங்கவைக்கும் எரிமலையைத் தங்கள் நகரம் கக்கப்போகிறது என்பது தெரியாமல் வழக்கம்போல் விழித்துக்கொள்கிறார்கள். நகரின் மத்திய பகுதியில் அமைந்திருந்த மாகாண மருத்துவமனையில் காலை நேர வெளிநோயாளிகள் பிரிவு என்றும் போல பரபரப்பாக இயங்கத் தொடங்குகிறது. புலப்படாத ஒரு புதிய நோயுடன் நோயாளிகள் அங்கே வரப்போவதையும் அது உலக வரலாற்றில் இடம் பிடிக்கப்போவதையும் அங்குள்ள மருத்துவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.