இந்தியன் நெ.1: நெருப்பு மங்கை


‘நெருப்போடு விளையாடக் கூடாது’ என்று சொல்வார்கள். ஆனால், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்மணியான ஹர்ஷினி கனேகருக்கு நெருப்புடன் விளையாடுவதுதான் தொழில். இந்தியாவில் தீயணைப்புத் துறையில் பணிக்குச்  சேர்ந்த முதல் பெண் என்ற பெருமைகொண்ட இவர், பல தீ விபத்துகளின்போது சாகசங்களைச் செய்து ஆபத்தில் இருந்தவர்களின் உயிரை மீட்டுள்ளார்.  சாகசங்கள் நிறைந்த வேலைகளை ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்ற மாயையை முறியடித்து நெருப்புடன் மோதி பல சாகசங்களைச் செய்துள்ள ஹர்ஷினி கனேகரைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூரில் 1976-ம் ஆண்டு பிறந்தவர் ஹர்ஷினி. நாசிக்கில் உள்ள  சிடிஓ மெரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர், பின்பு மேரி அமிர்தாபாய் டாகா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சாகசங்களைச் செய்வதில் அதிக விருப்பம் கொண்டவராக ஹர்ஷினி இருந்தார்.  வளர்ந்த பிறகு என்னவாக ஆகப்போகிறாய் என்று யாராவது கேட்டால் ஹர்ஷினி அளிக்கும் பதில், ‘நான் ராணுவத்தில் சேரப் போகிறேன்” என்பதாகத்தான் இருந்தது.

சிறுவயதில் படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் மிகச் சிறந்தவராக இருந்தார் ஹர்ஷினி. இந்நிலையில், கல்லூரியில் படிக்கும்போது  என்சிசியில் சேர்ந்து காவல் துறை அல்லது ராணுவத்தில் சேர்வதற்காக பல்வேறு பயிற்சிகளில் ஹர்ஷினி ஈடுபட்டார். அத்துடன் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வென்றார். கல்லூரியில் பிஎஸ்சி  பட்டம் பெற்ற பிறகு, எம்பிஏ படிப்பில் சேர்ந்தார் ஹர்ஷினி. ஆனால் அது அவருக்கு திருப்தியைத் தரவில்லை. மிடுக்கான உடை அணிந்து ராணுவம் அல்லது போலீஸில்  சாகசங்கள் நிறைந்த ஏதாவது ஒரு வேலையைச் செய்யவேண்டும் என்று அவரது மனது துடித்தது. இந்தச் சமயத்தில் நாக்பூரில் உள்ள நேஷனல் ஃபயர் சர்வீஸ் கல்லூரியில் (National Fire Service College in Nagpur)  சேர அவர் விண்ணப்பித்தார்.

 இதுபற்றி கூறும் ஹர்ஷினி, “நாக்பூரில் உள்ள தீயணைப்புத் துறை கல்லூரியைப் பற்றி முதலில் எனக்குத் தெரியாது. என் கல்லூரித் தோழி ஒருவர்தான் இப்படி ஒரு கல்லூரி இருப்பதாகவும், அதில்  சேர வாய்ப்பு இருப்பதாகவும்  எனக்கு முதலில் தெரிவித்தார். நான் உடனே அவரிடம், இந்தக் கல்லூரியில் சேர்ந்தால் காவல் துறையினரைப் போல் மிடுக்காக  சீருடை அணிந்து பணியாற்ற முடியுமா எனக் கேட்டேன். அவர் முடியும் என்று கூற உடனடியாக அந்தக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன்.  எனக்கு இந்தத் தகவலைக் கூறிய தோழியும் என்னுடன் சேர்ந்து விண்ணப்பித்தார். இருவரும் சேர்ந்து  கல்லூரியில் நுழைவுத் தேர்வு எழுதினோம். எனக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது. என் தோழிக்கு இடம் கிடைக்கவில்லை.

அந்தக் கல்லூரியில் பெண்களில் எனக்கு மட்டுமே இடம் கிடைத்தது.  தீயணைப்புத் துறையில் இதுவரை எந்தப் பெண்ணும் வேலை பார்த்தது இல்லை என்றும்,  இதுதொடர்பான படிப்பை படிக்கப் போகும் முதல் பெண் நான்தான் என்பதும் அப்போதுதான் எனக்குத் தெரியும். எனக்கு கல்லூரியில் இடம் கிடைத்ததற்கான  கடிதம் வந்த நாளை மறக்கவே முடியாது ” என்கிறார்.

நாக்பூர் தீயணைப்புத் துறை கல்லூரியில் சேர்ந்த ஹர்ஷினி அங்கு தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட்டார். ஆண்களுக்கு நிகராக பயிற்சிகளில் அவர் தீவிரமாக இருந்தது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. துடிப்பாகச் செயல்பட்ட அவர் பயிற்சியைத் திறம்பட முடித்தார்.

இதுபற்றி கூறும் ஹர்ஷினி, “கல்லூரியில் சேர்ந்தது முதல் பயிற்சியை முடிக்கும் நாள்வரை நான் ஒரு நாள்கூட தாமதமாக சென்றதில்லை. அப்படிச் சென்றால், பெண்களே இப்படித்தான் என்று நினைத்து விடுவார்களோ என நான் பயந்ததே  அதற்குக் காரணம். அதேநேரத்தில், எத்தனை கடுமையான பயிற்சிகளை செய்யச் சொன்னாலும் தட்டாமல் செய்து முடித்தேன். ஒரு பெண் என்பதால் சில பயிற்சிகளில் இருந்து விலக்கு அளிக்கும்படி சலுகைகளைக் கேட்கவில்லை. கனமான தண்ணீர் பைப்புகளைச்  சுமந்து செல்வது, உயரமான கட்டிடங்களின் மீது ஏறுவது, தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது என அனைத்துக் கடுமையான பயிற்சிகளையும் முகம் சுளிக்காமல் செய்தேன்.  இதன்மூலம்  பெண்களாலும் ஆண்களுக்கு நிகராக எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என்று நிரூபித்தேன். பெண்களின் கவுரவத்தைக் காத்தேன்” என்கிறார்.

2006-ம் ஆண்டில் படிப்பை முடித்து குஜராத்தில் உள்ள மெஷானா ஃபயர் ஸ்டேஷனில் பணிக்குச் சேர்ந்தார் ஹர்ஷினி. இதன்மூலம் தீயணைப்புத் துறையில் பணிக்குச் சேர்ந்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.  அப்பகுதியில்  தனது பணிக்காலத்தில் 3 தீயணைப்பு நிலையங்களுக்கு தலைவராகவும் இவர் இருந்தார். பின்னர் அங்கிருந்து 2010-ம் ஆண்டு மும்பைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

தீயணைப்புத் துறையில் பணியாற்றுவதுடன் பைக்கில் நீண்டதூரம் சாகசப் பயணம் செய்வதிலும்   ஹர்ஷினிக்கு ஆர்வம் அதிகம்.  லடாக், கார்கில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனது பைக்கிலேயே பயணம் செய்துள்ள ஹர்ஷினி, தன்னைப் போலவே பைக் சாகசப் பயண வீரரைக் காதலித்து மணம் புரிந்தார்.

ஆண்களின் உலகமான தீயணைப்புத் துறையில் வேலைக்குச் சேர்ந்து சாதனை படைத்துள்ள ஹர்ஷினி, தன்னைப் போன்ற 
பெண்களுக்கு கூற விரும்பும் அறிவுரை ஒன்றே ஒன்றுதான்.  “நீங்கள் தைரியமாக கனவு காணுங்கள். ராணுவம், காவல்
துறை, விண்வெளிப் பயணம் என்று எந்த இலக்கை வேண்டுமானாலும் அடையத் துணியுங்கள். இவை ஆண்களுக்கான துறையாயிற்றே என்று  எந்தச் சூழ்நிலையிலும் நினைக்காமல் தீவிரமாக முயற்சி செய்யுங்கள். உங்கள் கனவை நிச்சயம் நிறைவேற்ற முடியும்” என்பதே அந்த அறிவுரை. வாழ்க்கையில் வென்றவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

விருதும் பாராட்டும்

நிதி ஆயோக் அமைப்பு 2017-ம் ஆண்டுமுதல் நாட்டை மாற்றியமைத்த சிறந்த பெண்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2017-ம் ஆண்டில் ஹர்ஷினி கனேகர் நிதி ஆயோக்கின் விருதை வென்றார். இவரது சாதனையை பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டியுள்ளார்.

x