கோபத்தின் காரணமாகக் கோட்டையை இழந்தவர்கள் பலர். இன்றைக்கு வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் கோபம் வருகிறது. கேட்டால் மன அழுத்தம் என்கிறார்கள். ஆனால், கோபம் வார்த்தைகளாக வெளிப்படும்போது எதிரில் இருப்பவர்களைக் காயப்படுத்திவிடுகிறது. கோபத்தை வெளிப்படுத்திவிடுவதன் மூலம், நமது மன அழுத்தம் வேண்டுமானால் குறைந்துவிடலாம். ஆனால், காயம்பட்டவர்களுக்கு அந்த வலி வாழ்நாள் முழுவதும் மறக்காது. கோபத்தைக் கொட்டியதன் மூலம் உறவுகளை இழந்தவர்கள் ஏராளம்.
‘வெளியே விடும் வார்த்தைகளை நீ சுவைத்துப் பார்த்து பயன்படுத்து’ என்பார்கள். ‘சிந்திய முத்துக்களை அள்ளலாம், ஆனால்,
கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாது’ என்றும் சொல்வார்கள். யாராக இருந்தாலும், கோபம் என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். அதிலும், பெரியவர்கள் சொல்லும் சொல்லுக்கு வீரியம் அதிகம். எனவே, அதைக் கவனமாகக் கையாளாவிட்டால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்!
சாபமாகும் கோபம்
பெரியவர்கள் சொல்லும் வார்த்தைகள் நமக்குள் நிறைய தாக்கங்களை ஏற்படுத்தும். பெரியவர்களின் வாழ்த்து நம் மனதை அளவு கடந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அதேசமயம், அவர்கள் வாயிலிருந்து சுடுசொற்கள் வெளிப்பட்டால், அவை நம்மைக் கலங்கவைத்துவிடும். வயதில் மூத்தோர் வாழ்த்தினால் அது பலிக்கும் என எண்ணுகிறோம். அது உண்மை என்றால் அவர்கள் சொல்லும் கடுமையான வார்த்தைகளுக்கும் தாக்கம் உண்டு என உணர வேண்டும். ஆம், பெரியவர்கள் மனம் வெதும்பி வெளிப்படுத்தும் கோப வார்த்தைகள், சாபமாகவே கருதப்படும்!
எனவே, பெரியவர்களின் மனதை நோகடிக்கும் செயல்களைத் தவிர்த்துவிட்டு, அவர்களது மனக் குறைகளைப் போக்க இளம் தலைமுறையினர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். பல ஆண்டுகால அனுபவத்தில், எத்தனையோ மனிதர்களைக் கடந்துவந்திருக்கும் பெரியவர்களின் ஒவ்வொரு வார்த்தைக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்!
வாழ்க்கையின் தாத்பரியம்
பொதுவாகவே, எல்லா வீடுகளிலும் சின்னச் சின்ன சண்டைகள், மனஸ்தாபங்கள், புரிதலின்மையால் ஏற்படும் சச்சரவுகள் என்று எல்லாமே இருக்கும். பின்னர், யார் பக்கம் தவறு என்று இரு தரப்பும் புரிந்துகொண்டு மனம் விட்டுப் பேசியதும் அவை அனைத்தும் மறைந்துவிடும். வாழ்க்கையின் தாத்பரியமே அதுதான்.
ஆனால், வார்த்தைகளின் கனத்தை உணர்ந்து கொள்ளாமல் நாம் வெளிப்படுத்தும் கோபம் எதிராளியின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்திவிடும். “என்னை ஏன் பெற்றீர்கள்... ஏதாவது பணக்கார வீட்டில் நான் பிறந்திருக்கலாம். உங்களுக்குப் பிள்ளையாகப் பிறந்து கஷ்டப்படுகிறேன்” என்று பிள்ளைகள் கோபமாகச் சொல்வது பெற்றோரை வருத்தத்தில் ஆழ்த்திவிடும். பிள்ளைகள் வளர்ந்து, திருமணம் செய்த பிறகு, “இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. எங்காவது தனிக்குடித்தனம் போகிறேன்” என்று சொல்லும்போது பெற்றவர்கள் மனமுடைந்துவிடுவார்கள்.
சந்தேகம் எனும் சாத்தான்
உறவுகளுக்குள் இருக்கும் நம்பிக்கையின்மை, சந்தேகம் போன்றவை கோபமான வார்த்தைகளின் வடிவத்தில் வெளிப்படும்போது உறவுச் சங்கிலியே தகர்ந்துவிடும் அளவுக்கு வலியை ஏற்படுத்திவிடும். மனைவியின் நடத்தை குறித்து கணவன் கொண்டிருக்கும் சந்தேகங்களும், கணவரின் நடவடிக்கைகளில் நம்பிக்கையை இழக்கும் மனைவியின் மனக் குமுறல்களும் கோபமான வடிவில் வெளிப்படும்போது அது குடும்பத்துக்குள் பூகம்பத்தையே ஏற்படுத்திவிடும். சாகும் வரை இப்படியான வார்த்தைகளை மறக்க முடியாது. பிற்காலத்தில் பிள்ளைகளிடம், “உங்க அப்பா என்னை இப்படி ஒரு வார்த்தை கேட்டுவிட்டார்” என்று அம்மாவோ, “உங்க அம்மா என்னை எப்படியெல்லாம் சந்தேகப்பட்டா தெரியுமா?” என்று அப்பாவோ சொன்னால் அது பிள்ளைகளைப் பெரிதும் பாதிக்கும்.
எனவே, மன வருத்தங்கள் கோபமாக மாறிவிடும் அபாயத்தை ஆரம்பத்திலிருந்தே தவிர்ப்பது நல்லது. எதிராளியின் நியாயத்தை மதிக்க வேண்டும் என்று, உள்ளம் திறந்து பேசினால் உறவுகள் வலுப்பெறும்!
பெருந்தன்மை அவசியம்
வார்த்தை என்பது ஓர் ஆயுதம். அதை உபயோகப்படுத்துபவர்கள், உபயோகப்படுத்தும் வார்த்தை, உபயோகிக்கும் இடம், சூழல் இவற்றைப் பொறுத்து அர்த்தங்கள் மாறும். பெரியவர்கள் சில சமயம் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டு “கோபத்தில் பெரியவர்கள் ஆயிரம் பேசுவோம். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது” என சாதாரணமாகச் சொல்லி விடுவது உண்டு. அதேசமயம், இளையவர்கள் ஏதாவது சொன்னால், ‘வாழ்க்கை அனுபவம் இல்லாத சிறியவர்கள்தானே… இவர்களின் வார்த்தையைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று பெருந்தன்மையாக மன்னித்து விடாமல், “யாரைப் பார்த்து இந்த வார்த்தையைப் பேசினாய்... வயதுக்கு ஒரு மரியாதை வேண்டாமா?” என்று எரிந்து விழுந்தால்… அது சாதாரண விஷயத்தைச் சிக்கல் நிறைந்த பிரச்சினையாக மாற்றிவிடுகிறது.
நேர்மறையான வார்த்தைகள்
ஒருவரின் மனச் சங்கடத்தைப் போக்கும் வல்லமை, ஆறுதலான வார்த்தைகளுக்கு உண்டு. அதுவும் பணியிடங்களில் ஏற்படும் அழுத்தம், நட்பு வட்டங்களில் உண்டாகும் மன வருத்தம், உறவுகளுக்கு இடையே ஏற்படும் மனஸ்தாபம்… என்று எதுவாக இருந்தாலும், பெரியவர்கள் அனுசரணையாகச் சொல்லும் வார்த்தைகளால் நொடிப் பொழுதில் அவை அனைத்தும் மறைந்துவிடும் மாயத்தை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறோம்.
1960-களின் இறுதியில், அமெரிக்காவில் அப்பல்லோ விண்கலம் ஆய்வுகள் நடந்துவந்தன. அதில், அப்பல்லோ 13 எனும் விண்கல ஆய்வுகள் தோல்வியில் முடிந்தபோது, ‘தோல்வி என்பது ஒரு தெரிவல்ல’ (failure is not an option) என்று ஆய்வகத்தின் எல்லா இடங்களிலும் எழுதிவைத்தார்களாம். அந்த உத்வேகத்தில் அடுத்த இலக்கு வெற்றியில் முடிந்ததாம்.
ஒருவர் நேர்மறை எண்ணம் கொண்டவரா, எதிர்மறை எண்ணம் கொண்டவரா என்பதை அறிய உளவியல் நிபுணர்கள் ஒரு எளிதான உதாரணத்தைப் பயன்படுத்துவார்கள். பாதி அளவு தண்ணீர் நிரப்பப்பட்ட தம்ளரை அவரிடம் காட்டி, “இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்பார்கள். “தம்ளரில் பாதி அளவு தண்ணீர் இருக்கிறது” என்று சொன்னால், அவர் நேர்மறை எண்ணம் கொண்டவர் என்றும், “அரை தம்ளர் காலியாக இருக்கிறது” என்று சொல்பவரின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும் என்றும் கணிப்பார்கள்.
‘கண்டேன் சீதையை’ என்று ராமனிடம் அனுமன் சொன்னபோது, ‘கண்டேன்’ எனும் முதல் வார்த்தையே ராமன் மனதில் ஆறுதலை ஏற்படுத்திவிட்டது என்கிறார் கம்பர். அதுதான் நேர்மறையான வார்த்தையின் வலிமை. எனவே, எதிர்மறை வார்த்தைகளுக்கு இடம் கொடுக்காமல் ஆக்கபூர்வமான எண்ணங்களுக்கே இடம் கொடுக்க வேண்டும்.
என்ன செய்யலாம்?
பெரியவர்கள், இளையவர்கள் என்று யாராக இருந்தாலும், “பிறர் நன்றாக இருக்க வேண்டும்” என்று எண்ண வேண்டும்; வாழ்த்த வேண்டும். இரு தரப்பும், அன்பும், ஆக்கபூர்வமான எண்ணமும் நிறைந்த வார்த்தைகளைப் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள வேண்டும். ‘கனியிருப்ப காய் கவர்ந்தற்று’ எனும் வள்ளுவரின் வார்த்தைகளுக்கேற்ப நல்ல சொற்களைப் பயன்படுத்துவோம். கோபம் தெறிக்கும் எதிர்மறை வார்த்தைகளை விட்டொழிப்போம்.
(காற்று வீசும்…)