தொடாமல் தொடரும் - 23


“பவித்ரா யாரு ரகு?” என்றாள் அஞ்சலி அமைதியாக.

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.

“எந்த பவித்ராவைக் கேக்கறே?”
“உனக்கு எத்தனை பவித்ராவைத் தெரியும்?”

“இன்ட்டீரியர் டிசைன் பண்ற ஒரு பொண்ணு பேரு பவித்ரா. அப்பறம் என் ஆபீஸ்ல வேலை பார்த்து ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு பவித்ரா நின்னுட்டா. அதான் கேட்டேன்” என்றான் தடுமாற்றத்தை வெளிக்காட்டாமல்.

“ஓ…இதுல எந்த பவித்ராவோட உனக்கு நல்ல பழக்கம் ரகு?”

“பழக்கம்னா? எல்லாரோடயுமே ஃப்ரெண்ட்ஷிப்தான். எதுக்குத் திடீர்னு பவித்ரா பத்தி கேக்கறே?”

“உன் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்னன்னு நான் கேக்கலையே… இதுல எந்த பவித்ரா சமீபத்துல ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகியிருந்தா ரகு?”

ரகு எச்சரிக்கையானான். இவளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது. மதன் ராஸ்கல் ஏதாவது உளறிவிட்டானா? இவளுக்கு என்ன தெரியும், எவ்வளவு தெரியும் என்று தெரியாமல் என்ன சொல்வது?

“இன்ட்டீரியர் டிசைன் பண்ற கம்பெனில வேலை பார்க்கற பவித்ராதான் சமீபத்துல ஹாஸ்பிடல்ல இருந்தா.”
“என்ன பிரச்சினை அவளுக்கு?”
“அது… தெரியல. ஏதோ ஹெல்த் இஷ்யூ. எதுக்கு இவ்வளவு விபரமா கேட்டுட்டு இருக்கே. ரிமோட்டைக் குடு. நியூஸ் பாக்கணும்.”
“இப்ப நீ கேள்வி கேட்டே. அதுக்கு நான் பதில் சொல்ல வேணாமா? அதைவிடவும் உனக்கு நாட்டு நடப்புதான் முக்கியமா?”
“சரி… சொல்லு.”

“அந்தப் பொண்ணு தற்கொலைக்கு முயற்சி செஞ்சிருக்கா. யாரோ ஒருத்தர் கடைசி நிமிஷத்துல காப்பாத்தி ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்காங்க. அவளுக்காக ஹாஸ்பிட்டல்ல பணமும் கட்டிருக்காங்க. அது யாருன்னு உனக்குத் தெரியுமா ரகு?”
சில விநாடிகள் அமைதியாக இருந்தான்.

“இத பாரு அஞ்சலி. நீ தெரிஞ்சிக்கிட்டுதான் கேக்கறே. இனிமே நான் எதையும் மறைக்க விரும்பலை. ஆமாம். நான்தான் காப்பாத்துனேன். நான்தான் பணம் கட்டினேன்.”

“நீ எதுக்கு அவளுக்காகப் பணம் கட்டணும்? அவகிட்ட பணம் இல்லையா?”

“உயிருக்குப் போராடிட்டு இருந்தா. பணம் கட்டினாதான் வைத்தியம் செய்வோம்னு அந்த ஹாஸ்பிட்டல்ல சொல்லிட்டாங்க. அவ மயக்கமா இருந்த அந்தச் சமயத்துல அவகிட்டயே எப்படி கேக்க முடியும்? அதனால நான் கட்டினேன்.”

“அவ டிஸ்சார்ஜ் ஆயாச்சில்ல… நீ கட்ன பணத்தைத் திருப்பிக் குடுத்துட்டாளா ரகு?”
“நெக்ஸ்ட் மன்த் சாலரி வந்ததும் திருப்பிக் குடுக்கறேன்னு சொல்லிருக்கா.”
“அவளுக்குக் குடும்பம்னு யாரும் இல்லையா?”

“அப்பா, அம்மால்லாம் ஊர்ல இருக்காங்க. இவ தனியா இங்க வீடெடுத்து தங்கிருக்கா.”
“சரியா சொல்லு. லேடீஸ் ஹாஸ்டல்லயா? வீட்லயா?”

“மொதல்ல லேடீஸ் ஹாஸ்டல்ல இருந்தா. அங்க இவளுக்குப் பிடிக்கலன்னு தனியா வீடெடுத்துத் தங்கினா. இப்ப டாக்டர் அவ தனியா இருக்கக் கூடாதுன்னு சொன்னதால மறுபடி ஒரு ஹாஸ்டல்ல தங்க வெச்சிருக்கேன்.”
“ஓ… நீதான் தங்க வெச்சிருக்கியா? அவ எங்க தங்கணும்னு நீதான் முடிவு செய்வியா?”
“அஞ்சலி! மைண்ட் யுவர் வேர்ட்ஸ்... அவ என் ஃப்ரெண்டு. அவ்வளவுதான்.”

“எந்த அளவுக்கு ஃப்ரெண்டுன்னுதான் கேக்கறேன். ஆபீஸ்ல நடக்கற பல விஷயங்களை நாம ரெண்டு பேருமே கேஷுவலா ஷேர் பண்ணிட்டிருக்கோம். நீ பவித்ரா மேட்டர் எதுவுமே எங்கிட்ட சொன்னதில்லையே… ஏன்?”
தர்மசங்கடமாக நெளிந்தான் ரகு.
“நான் நியாயமாதானே கேக்கறேன்? சரி… உன் ஸோ கால்ட் ஃப்ரெண்டு பவித்ரா எதுக்காகத் தற்கொலை செஞ்சிக்க முயற்சி செஞ்சா? அதையாவது சொல்லேன்.”
“அது… சம் பர்சனல் மேட்டர் அஞ்சலி.”

“அது உனக்குத் தெரியாதுன்னு சொன்னா நான் நம்பணும்?”
“இல்ல…நிஜமா எனக்குத் தெரியாது.”

“நீ அழிச்சாட்டியமா பொய் சொல்றே. டிராமா போதும் ரகு.உண்மையைச் சொல்லு. அவ எதுக்குத் தற்கொலை செய்ய நினைச்சா? பதில் சொல்லு ரகு. எனக்கு டென்ஷனா இருக்கு.”
“ஒண்ணு மட்டும் சொல்றேன். இதுல நீ இவ்வளவு தூரம் டென்ஷனாகறதுக்கு எதுவும் இல்ல.”

“ஓ… அப்படியா? எங்க ஆபீஸ் எம்டி என்னை கார்ல ட்ராப் செஞ்சாரு. அவரை ஜஸ்ட் ஒரு மரியாதைக்காக டீ சாப்புட வீட்டுக்குக் கூப்புட்டேன். அதுக்கே நீ அவ்வளவு டென்ஷனானே…உன் பேன்ட் பாக்கெட்ல ஹாஸ்பிடல்ல எவளோ ஒருத்திக்காக நீ பணம் கட்னதுக்கான ரசீதைப் பாத்தாலும் நான் டென்ஷனாகக் கூடாது. அதைப் பத்தி நேர்ல போய் அந்த ஹாஸ்
பிட்டல்லயே விசாரிச்சிட்டு வந்ததுக்கப்பறமும் நான் டென்ஷனாகக் கூடாது. அப்படித்தான?”
“துப்பறியற வேலையெல்லாம் செய்றியா நீ? என்னைக் கேக்க வேண்டியதுதானே? இவ்வளவுதான் நீ என் மேல வெச்சிருக்கற நம்பிக்கையா அஞ்சலி?”

“சும்மா அலட்டாத ரகு… என் இடத்துல இருந்து பாரு. யாரா இருந்தாலும் உடனே டவுட் வரத்தான் செய்யும். பதறத்தான் செய்யும். இப்பவும் எதுவும் புரியாம பதறிட்டுதான் இருக்கேன். ஓப்பனா சொல்லிடு. அவளோட ரகசியமா குடித்தனம் நடத்திட்டிருக்கியா நீ?”
அவள் கேட்டு முடிப்பதற்குள் பொளேரென்று கன்னத்தில் அறைந்தான் ரகு.

“அண்ட் திஸ் ஈஸ் த லிமிட். ரொம்ப ஓவராப் போறே நீ!”

“ரகு… எதுக்கு இப்ப என்னை அடிச்சே? கேள்வி கேட்டா சரியான பதிலைச் சொல்லு. அதை விட்டுட்டு ஆம்பளைத் திமிரைக் காட்டறியா?”

எதுவும் பதில் சொல்லாமல் வேகமாக எழுந்து பைக் சாவியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான் ரகு.

***
அந்த ஹோட்டலின் பாருக்குள் வெளிச்சம் குறைவாக இருந்தது. கொத்துக் கொத்தாகப் போடப்பட்டிருந்த மேஜைகளில் ஒரு மூலையில் மதனும், ரகுவும் உயரமான கிளாஸ்களில் நுரைக்க நுரைக்க பீர் ஊற்றி லேசாக இடித்துவிட்டு பருகத் தொடங்கினார்கள்.
“என்னமோ பெரிய சி.ஐ.டி மாதிரி ஹாஸ்பிட்டலுக்குப் போய் விசாரிச்சிருக்கா பாரேன்…” என்றான் ரகு ஆத்திரமாக.
“உன் மேல தப்பை வெச்சிக்கிட்டு எதுக்கு அவங்க மேல கோபப்படறே? தப்பு செய்யக் கூடாது. செஞ்சா சுத்தமா செய்யணும். உன்னை யாரு ஹாஸ்பிட்டல்ல பணம் கட்ன ரசீதை அவங்க பார்க்கற மாதிரி பேன்ட்ல வெச்சி துவைக்கப் போடச் சொன்னது?”
“அது தப்புதான்…அதுக்காக இப்படித்தான் செய்வாளா? இது என்னங்க ரசீதுன்னு என்னை நேரா விளக்கம் கேக்க வேண்டியதுதானே? இவ என்ன போலீஸா? என்னை மடக்கணும்னே புறப்பட்டுப் போயிருக்கா பாரு.”

“ரகு… அவங்க ஹாஸ்பிட்டலுக்குப் போயி விசாரிச்சதுல உனக்குக் கோபம் இல்ல. விஷயம் அவங்களுக்குத் தெரிஞ்சி போச்சேன்றதுதான் உன் கோபம். நான்தான் சொன்னேன்ல…என்னிக்காவது மாட்டிக்குவேன்னு.”

“எப்படா குத்திக் காட்டலாம்னே வெய்ட் பண்ணுவியாடா?”

“இப்ப நீ இருக்கற மூட்ல எல்லார் மேலயும் பாய்வே… என்ன இருந்தாலும் கை நீட்டக் கூடாது ரகு. ரொம்பத் தப்புடா…ஆயிரம் வியாக்யானம் பேசிட்டு கடைசில லோ கிளாஸ் மாதிரி இப்படி அறைஞ்சிட்டு வந்திருக்கியே…”
“என்னால கோபத்தைக் கன்ட்ரோல் செய்ய முடியல.”
“அவங்களும் திருப்பி அறைஞ்சிருந்தா என்னாயிருக்கும்?”
“போன் செஞ்சி வேணும்னா சொல்லிக்குடேன்!”
“டேய்! அடங்குடா! ரொம்பதான்!”

மதன் கொறிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த நிலக்கடலை மசாலாவை ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டுக்கொண்டான்.
“இதுல டென்ஷனாறதுக்கு எதுவும் இல்ல. பவித்ரா எனக்கு ஜஸ்ட் ஃப்ரெண்டுதான்னு சொல்றேன். அதை நம்பாம துருவித் துருவி என்னமோ விசாரணைக் கைதியைக் கேக்கற மாதிரி கேள்வி கேக்கறாடா.”
“இவ்வளவு தூரம் ஆனப்பறம் நீயும் எல்லா விஷயத்தையும் வெளிப்படையா சொல்லிருக்கணும் ரகு. அப்படியே புறப்பட்டு வந்துட்டே. இது இன்னும்தான் டென்ஷனைக் குடுக்கும்.''
“ஏற்கெனவே என் மேல ஏகப்பட்ட மரியாதை அவளுக்கு…எல்லாத்தையும் சொன்னேன்னு வெச்சிக்க.. அவ்வளவுதான்! என்னை ஒரு எறும்பைப் பாக்கற மாதிரிதான் பார்ப்பா.”

“மறுபடியும் நீ தப்பு பண்றே ரகு… பவித்ரா போல்டான பொண்ணுதான். ஆனா ஒரு வீக்கான மொமென்ட்ல அவ விபரீதமா தற்கொலையை யோசிக்கலையா? நீ பாட்டுக்கு அறைஞ்சிட்டு அப்படியே புறப்பட்டு வந்துட்ட. இப்ப அவங்க மனசு எவ்வளவு தூரம் பேதலிச்சிப் போயிருக்கும்னு யோசிச்சியாடா?”
“அதுக்கு?”

“அவங்களும் விபரீதமா ஏதாச்சும்…”

“யாரு? இவளா? ராட்சசி! அடுத்தவங்களைத்தான் வாயாலயே சாவடிப்பா!”
ரகுவின் செல்போனில் செய்தி வந்ததற்கான ஒலிக் குறிப்பு வர… எடுத்துப் பார்த்தான்.
அஞ்சலி ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

‘நீங்கள் திரும்பும்போது நான் இருக்க மாட்டேன். என்னைத் தேட வேண்டாம்!' என்று இருந்தது.

 (தொடரும்…)

x