கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
அம்பேத்கர் தொடங்கிய இந்தியக் குடியரசுக் கட்சியை இப்போதும் நடத்திக்கொண்டிருப்பவர் செ.கு.தமிழரசன். நீண்ட அனுபவமும், ஆற்றலும் இருந்தும்கூட ஜெயலலிதாவிடம் அதீத விசுவாசம் காட்டியதால் விமர்சிக்கப்பட்டவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்தார். இப்போது கமல் உறவைக் கைகழுவிவிட்டு ரஜினிக்கு அம்பு விட்டுக்கொண்டிருக்கிறார். ஏன் இந்தக் குழப்பம்? அவருடன் பேசலாம்.
ஜெயலலிதாவை நிபந்தனையின்றி ஆதரித்த உங்களால் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை ஏன் ஆதரிக்க முடியவில்லை? சீனியர் என்கிற ஈகோதான் காரணமா?
ஜெயலலிதா பாஜகவை ஆதரித்தபோதே கூட்டணியைவிட்டு வெளியேறியவன் நான். மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவந்ததையும் எதிர்த்தவன். அப்படிப்பட்ட நான் இவர்கள் பாஜகவோடு கூட்டணி வைத்த பிறகும் எப்படி உறவைத் தொடர முடியும்? பட்டியலின மாணவர்கள் எந்தத் தொழிற்கல்வியில் சேர்ந்தாலும் அவர்களுக்கான கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே தரும் என்று உத்தரவிட்டு, ஒரே ஆண்டில் 40 ஆயிரம் பொறியாளர்களை உருவாக்கியவர் ஜெயலலிதா. எடப்பாடி அந்தத் திட்டத்தை அப்படியே கைவிட்டுவிட்டார். நேரில் கேட்டதற்கு மத்திய அரசு நிதி தரவில்லை என்று சொல்லிவிட்டார். குறைந்தபட்சம் ஆதிதிராவிடர் நல உயர்மட்டக் குழு கூட்டத்தையே 3 ஆண்டில் ஒரு முறைகூட கூட்டாத இந்த அரசை ஆதரிக்கச் சொல்கிறீர்களா?