லதா ரகுநாதன்
lrassociates@gmail.com
ஜெட் லாக் (Jet Lag) – அடிக்கடி வெளிநாடுகளுக்கு விமானப் பயணம் மேற்கொள்பவர்கள் மத்தியில் புழங்கும் வார்த்தை இது. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நேர மண்டலம் இருக்கிறது. இந்தியாவில், திங்கள் கிழமை காலை 11.41 மணி என்றால், அமெரிக்காவில் அது திங்கள் கிழமை அதிகாலை 2.11 மணி. அதாவது அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை விட, 9 மணி நேரம் 30 நிமிடங்கள் நாம் முன்னே இருக்கிறோம்.
எனவே, டெல்லியிலிருந்து விமானத்தில் புறப்பட்டு வாஷிங்டன் சென்றடையும்போது ஏற்படும் நேரக் குழப்பம் நம் உடலில் ஒருவித ஒத்திசைவின்மையை ஏற்படுத்திவிடும். நம் உடலின் தூக்க நேர சுழற்சியைக் கட்டமைக்கும் ‘சிர்கேடியன் ரிதம்’ (Circadian rhythm) எனப்படும் நேர சுழற்சி பாதிப்புக்குள்ளாகும். இதைத்தான் ஜெட் லாக் என்கிறார்கள்.
எப்போதாவது வெளிநாடு செல்பவர்களுக்குக் கூட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிடுவதில்லை. நன்றாக ஓய்வெடுத்தால் ஓரளவு சமாளித்துக் கொள்ளலாம். தொழில், வணிகம் நிமித்தம் அடிக்கடி நீண்ட நேர விமானப் பயணம் செல்பவர்களுக்குத்தான் சற்று சிரமம். தூக்க சுழற்சி பாதிக்கப்படுவதால் மந்தமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.