அமித் ஷாவுக்கு அச்சம் வந்திருக்கிறது- கே.எஸ்.அழகிரி பளிச்


கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

நீண்ட  இடைவெளிக்குப் பிறகு அதிகமான பொதுக்கூட்டங்களை நடத்துகிற ஒரு தலைவர் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்திருக்கிறார். ஓராண்டில் சுமார் 100 கூட்டங்கள் நடத்தியிருக்கும் கே.எஸ்.அழகிரி, கட்சிக்குள் கட்டுப்பாட்டையும் கொண்டுவந்திருக்கிறார். பாஜக அரசை விமர்சிப்பதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியைவிட அதிக வேகம் காட்டும் கே.எஸ்.அழகிரியுடன் ஒரு பேட்டி:

பாஜகவின் செயல்பாடு, வேகத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் காங்கிரஸ் என்றொரு கட்சி இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறதே?

காங்கிரஸ் கட்சியும், மகாத்மா காந்தியும் இருந்த காரணத்தினால்தான் இந்த நாட்டின் சுதந்திரம் ஆர்எஸ்எஸ் கைக்குப் போகாமல் காங்கிரஸ் கைக்கு வந்தது. ‘ராமரே காந்தியை நம்பித்தான் வந்தாரே ஒழிய, சாவர்க்கரை நம்பி வரவில்லை’ என்று நானும், தமிழகக் காங்கிரஸ் நிர்வாகிகளும் கூட்டங்களில் தொடர்ந்து பேசிவருகிறோம். பாஜக அமைக்க விரும்புகிற இந்து ராஷ்டிரம், ராம ராஜ்ஜியம் எப்படிப்பட்டது என்பதையும் அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறோம். பிரிவினைவாதிகள் காட்டுகிற வேகத்தை, இணக்கவாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. இந்திய தேசத்தைத் துண்டாடுவது மிக மிக எளிது. மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், சாதியின் பெயரால் இந்தத் தேசத்தைத் துண்டாடலாம், பிரிவினையை உண்டாக்கலாம். ஆனால், தேசத்தை ஒற்றுமையாக வைத்திருப்பதுதான் சிரமமான காரியம். அந்தப் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து காங்கிரஸ் கட்சி செயல்பட்டது. அதனால் பல சமயங்களில் கட்சிக்கே சிரமங்கள் ஏற்பட்டிருந்தாலும்கூட அதை ஒருபோதும் நாங்கள் கைவிட்டதில்லை.

x