இனியும் மெத்தனம் வேண்டாம்!


கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் ஒரு வாரத்துக்கும் மேல் நடத்திவந்த வேலை நிறுத்தம், ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. குடிநீர் ஆலைகளின் உரிமையாளர்கள் புதுப்பிக்கத் தகுந்த விண்ணப்பத்தை வழங்கினால் 15 நாட்களுக்குள் அதைப் பரிசீலிக்குமாறும், நிலத்தடி நீர் அளவைக் கண்காணிக்க குழுக்களை அமைக்குமாறும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முறையான அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கின்றன எனும் புகாரின் அடிப்படையில்தான் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்நிறுவனங்கள் அரசின் அனுமதியுடன் செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கவும், இவ்விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, அவசரகதியில் நடந்துகொண்ட அரசு, முந்நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சீல் வைத்தது வேலைநிறுத்தத்துக்கு வித்திட்டது. இதனால் ஏற்பட்ட குடிநீர்த் தட்டுப்பாடு, நகரம், கிராமம் எனும் வித்தியாசம் இல்லாமல் எல்லா இடங்களிலும் எதிரொலித்தது. தற்போது நீதிமன்ற உத்தரவால் பிரச்சினை முடிவுக்கு வந்திருந்தாலும், இன்னமும் பல கேள்விகளுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது.

குடிநீர் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவது, குறைந்த விலையில் குடிநீர் எனும் பெயரில் தரமற்ற குடிநீர் விற்கப்படுவது, இவ்விஷயத்தில் அரசு காட்டும் மெத்தனம் என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது அவசியம். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர்தான் அரசு செயல்பட வேண்டும் என்றில்லை. சுத்தமான குடிநீர் எல்லாத் தரப்பு மக்களையும் சென்று சேர்வதை உறுதிசெய்வது, தனியார் நிறுவனங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பது என்று செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய. அரசு அவற்றைக் கருத்தில் கொள்ளும் என்று நம்புவோம்!

x