என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
எளிய மக்களின் துயர்மிகு வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர் என்.டி.ராஜ்குமார். ‘தெறி’, ‘ஒடக்கு’, ‘ரத்தசந்தன பாவை’ உட்பட 7 கவிதைத் தொகுப்புகளையும், 3 மொழிபெயர்ப்பு நூல்களையும் தந்திருக்கும் இவர், தபால் நிலையத்தில் தினக்கூலிப் பணியாளராக இருந்தவர். இப்போது அதை விட்டுவிட்டு குழந்தைகளுக்கு இசை பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
சாதிய ஆதிக்க உணர்வுக்கு எதிராகச் சாட்டை சுழற்றுபவை இவரது படைப்புகள். பழங்குடி இனத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான ‘கனியான்’ சமூகத்தில் பிறந்ததால், அடிப்படையிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுநகர்தலையும், விளிம்புநிலை மக்களின் வாழ்வையும் நன்கு உணர்ந்தவர். இவரது படைப்புகளும் அவற்றையே அச்சாரமாகக் கொண்டு எழுதப்பட்டவை. நேரடிக் கவிதையாக்கம் மட்டுமல்லாது, மலையாள தேசத்தின் முன்னணிக் கவிஞர்களான ஏ.அய்யப்பன், பவித்திரன் தீக்குன்னி, பொய்கையில் அப்பச்சன் ஆகியோரின் கவிதைகளையும் தமிழுக்குத் தந்தவர்.
‘நான் சாத்தானின் குழந்தை
நாயும், பேயும், பிசாசும்தான்
எனது தெய்வம்
எனது தலைவன் கருப்பழகன்
சதிகார ராமனை நேரில் நின்று
குத்தி மலத்திய காட்டாளன்…’