உமா
uma2015scert@gmail.com
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பயிற்சிகள், தற்போது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஏனென்றால், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு எனும் மிக முக்கியமான விஷயத்தைத் தவிர்த்துவிட்டு, கற்றல் - கற்பித்தல் குறித்த உரையாடலை நாம் முன்னெடுத்துச் செல்லவே முடியாது.
ஒரு குழந்தை தனது வீட்டைவிட்டு பள்ளிக்கு வந்து கற்றலில் ஈடுபடுவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவிற்கு அவர்களது பாதுகாப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப்பட வேண்டும். பள்ளிக்கு வரும் குழந்தைகள், வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு திரும்பிச் செல்லும்வரை மனதளவிலும் உடலளவிலும் பாதுகாப்பாக உணரும்படி, அவர்களைக் கவனமாகக் காப்பது பள்ளி சார்ந்த அனைவரது கடமை!
பள்ளிக்கு வரும் குழந்தைகள் பாதுகாப்புடன்தானே இருப்பார்கள் என நாம் எண்ணலாம். ஆனால், அன்றாடம் நாம் செய்திகளில் பார்க்கும் சம்பவங்கள் அந்த எண்ணம் எவ்வளவு மேலோட்டமானது என்பதை உணர்த்துகின்றன. பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் போதிய கவனம் செலுத்தப்படுகிறதா எனும் கேள்வியையும் எழுப்பிக்கொண்டேயிருக்கின்றன.