மற்றவை வெண் திரையில் 5: ஜெய்சங்கர் - துணிவின் துணைவர்


அந்தப் பன்னாட்டு நிறுவனத் தொழிற்சாலை, தமிழ்நாட்டின் ஒரு பெரு நகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தள்ளி அமைந்துள்ளது. அதன் நிர்வாக இயக்குநரின் அழைப்பில் அங்கு சென்றிருந்தேன். கிட்டத்தட்ட கிராமியச் சூழல் கொண்ட இடத்தில் இயங்கிவந்த அந்த நிறுவனத்தின் உயர் பதவிகளில் பணியில் சேர்வதற்குப் பலரும் தயங்கினர். அப்படிச் சேர்ந்தவர்களும் பழைய ஆட்களின் சதியில் சில வாரங்களில் பதவி விலகிவிடுவார்கள். நிலைமையை என்னிடம் விவரித்த வந்த அந்த எம்.டி, “நீங்க ‘துணிவே துணை’ படம் பாத்திருக்கீங்களா?” என்று கேட்டார். “பொன்வயல் கிராமம்!” என்றேன் சிரித்தவாறே. “யெஸ்! அதே கதைதான் நம்ம கம்பெனியில்” என்றவர், இப்போது மிகவும் நெருக்கமாகிவிட்டார்.

பல மணி நேரம் சொல்ல வேண்டிய விஷயத்தை, ‘துணிவே துணை’ என்ற ஒரு படத் தலைப்பு உணர்த்திவிட்டது. பொன்வயல் கிராமம் என்ற மர்மப் பிரதேசமும் மனதில் விரிந்தது. மெல்லிசை மன்னரின் அதிரடி இசையில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் முகம் மனத்திரையில் தோன்றியது. சித்ரா டாக்கீஸில் ரிலீஸான பட பேனரை ‘கெயிட்டி’ தியேட்டர் ஸ்டாப்பிங்கில் 27D பஸ்லிருந்து பார்த்த நினைவு வந்தது.

புதிர் கிராமம்

பொன்வயல் கிராமத்திற்குச் சென்ற புதியவர் எவரும் உயிரோடு திரும்பியதில்லை. எல்லோரும் மர்மமாக இறந்துபோகிறார்கள். அதைத் துப்பு துலக்கச் செல்லும் விஜயகுமாரைப் பலரும் பயமுறுத்துகிறார்கள். ஓடும்ரயிலில் ஒரு மொட்டைத் தலையன் அவருடன் சண்டை போடுகிறான். ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் அவன் புகைப்படமாகத் தொங்குகிறான். அவன் இறந்து பல ஆண்டுகள் ஆனதாகவும், அவனது ஆவி இன்னமும் ரயில் பாதையில் உலவுவதாகவும் சொல்கிறார்கள். பின்இரவு நேரத்தில் அந்த ஊருக்கு யாரும் வண்டியோட்டிச் செல்வதற்குத் தயாராக இல்லை. ஒரு மாட்டு வண்டிக்காரரை வற்புறுத்தி இருள் பாதையில் விஜயகுமார் பயணிக்க… திகிலூட்டத் தொடங்குகிறது ஒரு பாட்டு - ‘ஆகாயத்தில் தொட்டில் கட்டி...!’ தொலைவில் வெள்ளை உடையில் மாயமாய்த் தோன்றி மறையும் மோகினியாய் ஒரு பெண் உருவம். துரத்திச் செல்லும் விஜயகுமார் பாட்டின் முடிவில் இறந்துபோகிறார்.

ஜெய் பாண்ட்!

அண்ணன் உயிரை மாய்த்த கிராமத்திற்கு, உண்மை அறிய புறப்படுகிறார் தம்பி ஜெய்சங்கர். எப்படி அந்தப் பேய் கிராமத்துக்குள் நுழைந்து சாகசம் செய்து, தீயவர் சதியை முறியடிக்கிறார் என்பதுதான் கதை. அண்ணன் இறந்தபின் டைட்டிலில் ஜெய் பெயர் போட்டபோதே தியேட்டரில் ஆரவாரமான விசில் சத்தம். ‘தென்னாட்டு ஜேம்ஸ் பாண்ட்’ ஆயிற்றே!

ஜெய்சங்கர் எனக்கு ஏற்கெனவே பிடித்த நடிகர். ஒரு முறை சேது சித்தப்பா என்னை ஆச்சரியப்படுத்தும் வகையில், சொல்லாமல் ஒரு படத்திற்குக் கூட்டிச்சென்றார். ‘ஈராஸ்’ தியேட்டரில் ஒரு ஜெய்சங்கர் படம். ‘உன்னைத்தான் தம்பி’ என்று பெயர். சண்டைக் காட்சிகளில் எம்ஜிஆருக்குப் பிறகு ஒரு துடிப்பான நாயகனைக் கண்ட மகிழ்ச்சி எனக்கு. அவர் கண்களில் தெரியும் குறும்பு என்னைக் கவர்ந்தது. அலட்டிக்கொள்ளாமல் நடித்தார். அவரின் முத்திரைப் படங்களை அந்த வயதில் நான் பார்த்திராவிட்டாலும், பார்த்த சுமாரான படங்களில்கூட, இயல்பான அவரது நடிப்பு எனக்குப் பிடித்தது.

முத்திரைப் படங்கள்

அவரது முத்திரைப் படங்களை எல்லாம் வளர்ந்த பிறகுதான் பார்த்தேன். அவரின் ‘நூற்றுக்கு நூறு’ மிகவும் வித்தியாசமான கே.பாலசந்தர் படம். இன்றுகூட அதை அழகாக ரீமேக்கலாம்! ஒரு கல்லூரி ஆசிரியர் மேல் விழும் பாலியல் குற்றச்சாட்டை அவர் எப்படி எதிர்கொண்டு உண்மை அறிகிறார் என்பதுதான் கதை. வித்யாவும் லட்சுமியும் மட்டுமா அழகாக இருந்தார்கள் திரையில், ஜெய்சங்கரும் தான்! ‘நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்... நீ வர வேண்டும்!’ பாடல் பெரிய ஹிட். ஒவ்வொருவர் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், கதை நகர்விற்கேற்ப அப்பாடலின் காட்சிகள் மாறியிருக்கும். எஸ்.பாலசந்தர் ‘அந்த நா’ளில் பின்பற்றிய குரோசாவா டெக்னிக்கை, கே.பாலசந்தர் சிறிய அளவில் அந்தப் பாடல் காட்சியில் செய்திருப்பார்.

‘பூவா தலையா’ படத்தில் பணக்கார மாமியாரின் சவாலை எதிர்கொள்ளும் மருமகன் வேடம். சகலை நாகேஷ் என்றால் எப்படி ரகளையாக இருக்கும்? காமெடியிலும் டிராமாவிலும் ஜமாய்த்திருப்பார் ஜெய். அடங்கா மாமியாரை அடக்கும் இந்த கதையைத்தான் ‘மாப்பிள்ளை’யாக ரஜினி ஒருமுறையும், அவர் மாப்பிள்ளை தனுஷ் இன்னொரு முறையும் வெற்றிப் படங்கள் ஆக்கினார்கள். அதேபோல, ஜெய் நடிப்பில் வெற்றிபெற்ற ‘கல்யாணமாம் கல்யாணம்’ படமும் ஒரு நல்ல டெம்ப்ளேட். எம்ஜிஆர் நடித்த ‘பெரிய இடத்து பெண்’ கதையேதான் இதுவும். ஷேக்ஸ்பியரின் ‘The Taming of the shrew’ தான் எல்லோருக்கும் இன்ஸ்பிரேஷன். நகரத்திலுள்ள அடங்காப் பெண்ணை அடக்க நினைக்கும் கிராமத்தானின் கதை. பின்னாளில் இதையே மீண்டும் ‘சகலகலாவல்லவ’னாக எழுதினார் பஞ்சு அருணாசலம். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் பின்னியெடுத்த படம் அது!

எல்லா வேடங்களுக்கும் ஏற்றவர்

ஜெய்யின் ரொமான்ஸ் அலாதியாக இருக்கும். அவரின் மிகச் சிறந்த ஜோடி ஜெயலலிதா என்பது என் கருத்து. ‘கங்கா’, ‘எங்க பாட்டன் சொத்து’, ‘ஜம்பு’ போன்ற எம்.கர்ணன் படங்களில் கேமராவும் ராட்டினமாகச் சுற்றும், ஜெய்சங்கரும் இறங்கி அடிப்பார். அவை ‘சி’ சென்டர் கெளபாய் படங்கள். அவற்றிலும் இயல்பாக நடித்திருப்பார். ‘பணமா பாசமா’ போன்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படங்களில் அளவான குணச்சித்திர நடிப்பு காட்டுவார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘வல்லவன் ஒருவன்’, ‘இரு வல்லவர்கள்’ போன்ற படங்களால்தான் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என்று பெயரெடுத்தார் ஜெய்.

அவரது ஆரம்பகாலப் படங்களில் ஒன்றான ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தில் படு பாந்தமாக நடித்திருப்பார். மனக்கசப்பால் பெற்றோர் பிரிந்தால் பிள்ளைகளின் நிலை என்னாகும் என்பதை 55 வருடங்கள் முன்னரே பேசியது அந்தப் படம். காதலன், கணவன், தகப்பன் என்ற மூன்று பரிமாணங்களிலும் ஜொலித்திருப்பார் மக்கள் கலைஞர். இப்படி எந்த வகைப் படம் என்றாலும் தன்னைப் பொருத்தி, ஒத்துழைத்து நடித்ததால்தான் 300 படங்களுக்குப் பின் வில்லன், குணச்சித்திரம் என அவரால் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட முடிந்தது.

‘ஃப்ரைடே ஸ்டார்!’

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கர் படம் ஒன்று ரிலீஸாகும். படம் சுமாராகப் போகும். அவருக்கு முழுச் சம்பளம் கிடைத்திருக்காது. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடித்து தள்ளிக் கொண்டிருந்தார். அதனால் அவருக்கு ‘ஃப்ரைடே ஸ்டார்’ எனும் பட்டமும் கிடைத்தது. பலரைத் தயாரிப்பாளர்களாக ஆக்கினார்.

நிறைய சமூக நலப் பணிகளை யாருக்கும் சொல்லாமல் செய்தார். எல்லோரையும் சமமாகவும் மிகுந்த கண்ணியத்துடனும் நடத்தியவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் பேட்டி மூலம் நான் அறிந்துகொண்ட ஒரு செய்திதான், ஜெய் மீதுள்ள மரியாதையைப் பன்மடங்கு கூட்டியது. மறுநாள் அதிகாலை ஷூட்டிங் என்று இயக்குநர் முன்பே சொல்லியிருந்தும், புரொடக் ஷன் மேனேஜர் ஜெய்க்குச் சரியாகத் தகவல் சொல்லவில்லையாம். ஷூட்டிங் தாமதமானதால் ஜெய்சங்கருக்கே போன் செய்து விஷயத்தைச் சொல்கிறார் செல்வமணி. உண்மை அறிந்த ஜெய், மன்னிப்பு தெரிவித்தது மட்டுமின்றி அடுத்த அரை மணி நேரத்தில் பல்கூட துலக்காமல் லுங்கியுடன் வந்து இறங்கினாராம் ஸ்பாட்டுக்கு. செட்டிலேயே குளித்துத் தயாராகி நடித்துக் கொடுத்துவிட்டுப் போனாராம்! தன்னால் பிறர் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணம்தான் அவரை அப்படி வளைந்து கொடுத்து வேலை செய்ய வைத்தது.

தோல்வி பயமற்றவர்

துணிவே துணை என்ற வாசகம் ஜெய்யின் திரைப்பட வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானதுதான். திரையுலகமும் பொன்வயல் கிராமம் போன்றதுதான். பேய்க் கதை போல பல சென்டிமென்டுகள் இங்கு உண்டு. பல மர்மங்கள் நிறைந்த அந்தப் பிரதேசத்துக்குப் போய் சிக்குண்டு ஒடிந்து விழுந்தவர்கள் பலர். ஜெய் அங்கு செல்கையில் மற்றவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளை நம்பாமல் ஒவ்வொரு நிகழ்வையும் புதிதாகப் பார்க்கிறார். அதைத் திடமாக எதிர்கொள்கிறார். துணிந்து சென்று வெற்றிபெறுகிறார். அவருக்குத் தோல்வி பயம் இல்லை.

சில ஆண்டுகள் கழித்து அந்த எம்.டியை மீண்டும் பார்த்தேன். இடையில் சேர்ந்த ஜி.எம். ஒருவரும் வேலையைவிட்டுப் போய்
விட்டதாக வருத்தப்பட்டார். “எல்லாம் ‘துணிவே துணை சிண்ட்ரோம்’தான்” என்றவர், “எல்லாரும் பழைய கதையைக் கேட்டு ஓடிருறாங்க. தைரியமா நிக்கற ஆள் வேணும் சார்” என்றார் பெருமூச்சுடன்.

அதற்கு ஜெய்சங்கர் மாதிரி ஒருத்தர்தான் வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்!

படங்கள் உதவி: ஞானம்

(திரை விரியும்…)

x