கனா பேச்சு 8- எல்லோருக்கும் இன்னொரு பெயர்


கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

“உங்கப்பாவுக்கு ஒரு லெட்டர் வந்துருக்கு. இந்தா’’ என்று போஸ்ட்மேன் என்னை அழைக்காவிட்டால் லோக்கல் தபால் ஆபீஸுக்குள் நான் போயிருக்க மாட்டேன். அப்படிப் போயிருக்காவிட்டால் மல்லாகொட்டையின் நிஜப் பெயர் எனக்குத் தெரியாமலே போயிருக்கும். மல்லாகொட்டைக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது எனத் தெரியாது. எல்லோரும் அழைக்கிறார்களே என்றுதான் எல்லோரும் அழைத்திருப்பார்களே தவிர எவருக்கும் அந்தப் பட்டப்பெயர் குறித்த ஆர்வம் இருந்திருக்காது. 30 வயதான மல்லாகொட்டை எப்போதும் கைலி, முழுக்கைச் சட்டையுடன் வலம் வருவார். மொட்டையடித்து பத்து நாள் வளர்ந்த முடியுடனே காணப்படுவார். லேசான பெண்மை நிரம்பிய பேச்சும் நடையும் மல்லாகொட்டையை அவரிலிருந்து அதுவென மாற்றிப் பேசச் சொல்லும். தெருவில் சென்றுகொண்டிருக்கும் மல்லாகொட்டையிடம் சாப்பிட்டாச்சா, சாப்புடுறியா என்று என் அம்மா கேட்கச் சொல்லும்போதெல்லாம் “மல்லாகொட்ட... சாப்புடுறியான்னு அம்மா கேட்டாங்க’’ என்றிருக்கிறேன். சிறுவன் என்பதாலோ என்னவோ என் அருகில் வந்து என் தலை கோதிவிட்டு சாப்புட்டேன் என்று சொல்லி விலகும்.

மல்லாகொட்டையுடன் உடன் பிறந்தவர்கள் 3 பேர். எனக்கு மல்லாகொட்டையைத் தெரியும் முன்பே அவர்கள் குடும்பத்தின் இரண்டாவது அண்ணன் தற்கொலை செய்துகொண்டிருந்தார். மூத்த அண்ணனும் அண்ணியும் அவர்களது குழந்தைகளும் எங்கள் குடும்பத்துக்கு நெருக்கம். பெட்டிக்கடை வைத்திருந்த மூன்றாவது அண்ணன் 50 வயது தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாமலே இறந்து போனார். மல்லாகொட்டையின் மூத்த அண்ணன் விபத்தொன்றில் இறந்துபோக அரசு வேலைக்கு விண்ணப்பித்து அதில் வந்த வருமானத்தில் அந்த அண்ணி வாழத் தொடங்கினார். எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்றாக இருக்க மல்லாகொட்டை மட்டும் அவர்களுடன் இல்லை.

உடம்பில் ஏறியிருந்த பெண் சாயலை மறுக்க முடியாத நிலையில் இளமையிலேயே தன்னை ஒடுக்கிக்கொண்டுவிட்டது மல்லாகொட்டை. பிற வீடுகளில் வீட்டு வேலை செய்து அவர்கள் தரும் சம்பளம், சாப்பாட்டில் வாழ்வைக் கழிக்கத் தொடங்கியது. இரவு உறக்கத்துக்கு அதிகம் தன் வீட்டுக்கு வராத மல்லாகொட்டை கோயில் வாசல், பேருந்து நிலையம் என்று கிடைத்த இடத்தில் எல்லாம் படுத்து உறங்கத் தொடங்கியது. விபரீதம் அங்கிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். குடிகாரர்களும் காம வெறியர்களும் தங்களின் இச்சையைத் தணித்துக்கொள்ள தனியாய் இருந்த மல்லாகொட்டையைப் பலவந்தப்படுத்தியதில் இயல்பு பிசகியிருக்க வேண்டும். தன்னை அவ்வளவு சீக்கிரம் வெளிப்படுத்திவிடாத மல்லாகொட்டை ஒருநாள் ரேஷன் கடை வரிசையிலிருந்து விலகி அங்கு நின்றுகொண்டிருந்த யாரோ சில ஆண்களை மையப்படுத்தி மிக மோசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கியது. “அவ்ளோ வெறி இருந்தா பொண்டாட்டிகிட்ட போக வேண்டியதுதானே... ஏன் இங்க வந்து மேயிறானுங்க தூ...கு...’’  மனிதர்களும் ஊரும் மல்லாகொட்டையை அருவருப்பாக பார்க்க ஆரம்பித்தது அதன் பின்புதான்.

x