லதா ரகுநாதன்
lrassociates@gmail.com
கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். அதே போல், கைக்கு அடக்கமான ஒரு சின்னஞ்சிறிய வஸ்து, பல்வேறு பணிகளைச் செய்து நமது வேலைகளைச் சுலபமாக்கி சுவாரசியப்படுத்துகிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் கருவிகளை ஒருங்கிணைக்கும் வகையில் செயல்பட்டு, நம்முடைய அன்றாடச் செயல்களைச் செய்து அசத்துகிறது. அதன் பெயர், ‘எஸ்.ஐ.பி’ (சிம்பிள் இன்டர்னெட்-கனெக்டட் பட்டன்).
கன சதுர வடிவத்தில் இருக்கும் இந்தச் சாதனம் செய்யப்போகும் சேவைகள் பல. உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் பார்ப்போம்.
இந்தச் சாதனத்தை நோயாளிகள், முதியோரின் படுக்கையில் பொருத்திவிட்டால் போதும். அவருக்கு ஏதேனும் அவசர சூழல் ஏற்பட்டால் இதில் உள்ள பொத்தானை அழுத்தினால், இதனுடன் இணைப்பில் இருக்கும் செல்போன்களுக்குத் தகவல் பறந்துவிடும். இது ஒரு சாம்பிள்தான். இது செய்யும் பிற வேலைகளைப் பின்னர் பார்க்கலாம்.
இதைத் தயாரித்திருப்பது ‘ட்ரெய்டெல் டெக்னாலஜீஸ்’ எனும் அமெரிக்க நிறுவனம். மிகக் குறைந்த செலவில் தரமான தொடர்பு சாதனம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் இதை உருவாக்கியிருக்கிறார்கள். ‘கிக் ஸ்டார்ட்டர்’ எனும் நிதி தளம் வழியே க்ரவுட் ஃபண்டிங் முறையில் இதை உருவாக்கியிருக்கிறார்கள்.