ஒருவரது வாழ்க்கையில் எப்போது, யாரால், எப்படியான திருப்பம் வரும் என்று யாராலும் கூற முடியாது. அது எந்த நேரத்திலும், எப்படியும் வரலாம். 1989-ல், சிம்லாவில் உள்ள செயின்ட் பீட்ஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த 21 வயதான பிரியா ஜிங்கனின் (Priya Jhingan) வாழ்க்கையில், ஒரு பத்திரிகை விளம்பரத்தின் வடிவில் அந்தத் திருப்பம் வந்தது. தேசியப் பத்திரிகைகளில் வெளியான அந்த விளம்பரத்தை இந்திய ராணுவம் கொடுத்திருந்தது. நாட்டிலுள்ள துடிப்பான இளைஞர்களை, ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவை செய்ய அழைப்பதே அந்த விளம்பரம்.
இந்த விளம்பரத்தைப் பார்த்ததும், பிரியா ஜிங்கனின் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. “ஆண்கள் மட்டும்தான் ராணுவத்தில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டுமா... பெண்களும் ஏன் அந்தச் சேவையைச் செய்யக்கூடாது?” என்பதே அது. அந்தக் கேள்வியை மனதிலேயே போட்டுப் புதைத்துவிடாமல், அதைக் கடிதமாக எழுதி இந்திய ராணுவத்தின் அப்போதைய தளபதியான ஜெனரல் சுனித் பிரான்சிஸ் ரோட்ரிகஸுக்கு அனுப்பினார். பெண்களை ராணுவத்தில் சேர்ப்பதாக இருந்தால், தான் முதல் நபராக அதில் சேர விரும்புவதாகவும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதம் ராணுவத் தளபதியை சிந்திக்க வைத்தது.
இது பற்றி, சக ராணுவத் தளபதிகளுடனும், அமைச்சர்களுடனும் விவாதித்தார். இது நடந்த சில மாதங்கள் கழித்து, ராணுவத் தளபதியிடமிருந்து பிரியா ஜிங்கனுக்கு ஒரு கடிதம் வந்தது. ‘ராணுவத்தில் சேர விரும்புவதாக ஒரு பெண்ணிடம் இருந்து கடிதம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கான வாய்ப்பு விரைவில் வரும்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ராணுவத் தளபதி சொன்னதைப் போலவே, ராணுவத்தில் பெண்
களைச் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான விளம்பரம் பத்திரிகைகளில் வெளியாக, உடனடியாக விண்ணப்பித்தார் பிரியா ஜிங்கன்.
பிரியா ஜிங்கன் மட்டுமல்ல; அவருடன் சேர்த்து சுமார் 25 ஆயிரம் பேர் இதற்கு விண்ணப்பிக்க, அதிலிருந்து 250 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் அவர்களில் இருந்து 25 பேர் மட்டும் இந்திய ராணுவத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட, அவர்களில் முதல் பெண் கேடட்டாக இந்திய ராணுவத்துக்குள் நுழைந்தார் பிரியா ஜிங்கன்.
இதுபற்றிக் கூறும் பிரியா ஜிங்கன், “என் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி. அதனால் சிறுவயதிலிருந்தே, போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. நான் 9-ம் வகுப்பில் படிக்கும்போது, எங்கள் பள்ளிக்கு ஆளுநர் வந்திருந்தார். அவருடன் ஒரு ராணுவ அதிகாரியும் வந்திருந்தார். அவரது ராணுவ மிடுக்கு, பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் பிடித்துவிட்டது. அவரால் ராணுவத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், ‘நாங்கள் திருமணம் செய்துகொண்டால் ஒரு ராணுவ வீரரைத்தான் திருமணம் செய்துகொள்வோம்’ என்று என் தோழிகள் கூறினார்கள்.
ஆனால், நான் அப்படிச் சொல்லவில்லை. மாறாக, ஒரு ராணுவ அதிகாரியைத் திருமணம் செய்துகொள்வதற்கு பதில், நானே ஒரு ராணுவ அதிகாரி ஆவேன் என்று கூறினேன். அப்போது என் தோழிகள், ராணுவத்தில் பெண்களைச் சேர்ப்பதில்லையே என்று என்னைக் கிண்டல் செய்தார்கள். ஆனால் நான் ராணுவத்தில் நிச்சயம் சேர்வேன் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்தச் சூழலில்தான் நான் கல்லூரியில் படிக்கும்போது, ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கான விளம்பரம் வெளியானது. இதைத்தொடர்ந்து ராணுவ அதிகாரிக்கு கடிதம் எழுதினேன்” என்கிறார்.
1992-ம் ஆண்டு சென்னையில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் பயிற்சியைத் தொடங்கிய பிரியா ஜிங்கன், ஆண்கள் மேற்கொண்ட அத்தனை பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்தார். இதன்மூலம் ஆண்களுக்கு இணையாக பெண்களாலும் ராணுவத்தில் செயலாற்ற முடியும் என்பதை நிரூபித்தார். இதுபற்றி கூறும் பிரியா, “பயிற்சிக் காலத்தில் ஒரு பெண் என்பதால் எனக்கு எந்தவித சலுகையையும் காட்டத் தேவையில்லை என்று ராணுவ பயிற்சி மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் முதலிலேயே தெரிவித்துவிட்டேன். அவர்களும் என்னை அப்படியே நடத்தினார்கள். குறிப்பாக, அங்குள்ள சக ராணுவ அதிகாரிகள் என்னை ‘மேடம்’ என்று அழைக்காமல் ‘சார்’ என்றுதான் அழைத்தனர். இதெல்லாம் என் தன்னம்பிக்கையை அதிகரித்தது” என்கிறார்.
6 மாத பயிற்சியை முடித்த பிரியா ஜிங்கன், 1993-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி இந்திய ராணுவத்தில் முதல் பெண் அதிகாரியாக சேர்ந்தார். இந்திய ராணுவத்தின் காலாட்படை பிரிவில் பணியாற்றவே பிரியா விரும்பினார். ஆனால், அதற்கு அனுமதி கிடைக்க
வில்லை. மாறாக, பிரியா சட்டம் பயின்றவர் என்பதால் ராணுவத்தின் சட்டப்பிரிவில் பணியமர்த்தப்பட்டார். ராணுவ வீரர்கள் மீதான புகார்களை விசாரிக்கும், அவர்களுக்காக வாதாடும் பொறுப்பு பிரியாவுக்கு வழங்கப்பட்டது.
ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த இந்திய ராணுவத் துறையில், முதல் பெண்ணாக நுழைந்த பிரியா ஜிங்கன் ஏராளமான சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஒரே நீச்சல் குளத்தில் சக ராணுவ வீரர்களுடன் குளிப்பது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக உள்ள ஒரே கழிப்பறையைப் பயன்படுத்துவது என்று பல சவால்களைக் கடந்து இந்திய ராணுவத்
தில் பணியாற்றினார் பிரியா ஜிங்கன். இப்படி பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் பெண்களுக்கென்று பிரத்யேக சலுகைகள் வேண்டும் என்று கேட்காமல் ஆண் அதிகாரிகளுக்கு சமமாக வாழ்ந்து காட்டினார்.
இந்திய ராணுவத்தில் 10 ஆண்டுகள் சேவையை முடித்த பிரியா ஜிங்கன், மேஜராக பதவி உயர்வு பெற்ற நிலையில் 2002-ல், தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
“ஒருவர் ஆணோ பெண்ணோ, தனக்கு பிடித்த விஷயத்தை வாழ்க்கையில் செய்யவேண்டும். பிடிக்காத விஷயங்களைச் செய்யக் கூடாது. இதுவே என் வாழ்க்கையின் மூலம் நான் சொல்ல விரும்பும் விஷயம்” என்கிறார் பிரியா ஜிங்கன்.