அசடு வழிந்த ரகு, “தேங்க் யூ சார். வெல்கம். உள்ள வாங்க” என்று வழிசலாகச் சொல்லி வழிவிட… ராம் மனோகர் அவனைக் கடந்து உள்ளே வந்தபோது மது வாடை அடித்தது.
ரகு அவசரமாக அறைக்குள் சென்று சட்டை எடுத்து அணிந்துகொண்டான்.
ராம் மனோகர் குடித்திருக்கிறானே… எப்போது குடித்தான்? குடித்துவிட்டு காரோட்டியிருக்கிறானே… சட்டப்படி குற்றம்! ராஸ்கல்! இதில் இவளுக்கு வேறு லிஃப்ட் கொடுத்திருக்கிறான்.
அவன் ஷூவைக் கழற்றாமல் வந்து சோபாவில் அமர்ந்தது ரகுவுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.
இதென்ன அலுவலகமா? வீட்டுக்குள், அதுவும் கைக்குழந்தை இருக்கும் வீட்டுக்குள் ஷூ அணிந்து செல்வது தவறு என்று தெரிய வேண்டாம்?
சரி… எம்.டியாகவே இருக்கட்டுமே…பிக்கப் செய்ய காருடன் மதனை அனுப்புகிறேன் என்று நான் சொன்னதை மறுத்து இவன் காரில் எதற்கு இவள் ஏறிவர வேண்டும்?
ஏறியாயிற்று. வந்தாயிற்று. இறங்கிக்கொண்டு ஒரு நன்றி சொல்லி அனுப்பி வைப்பதை விட்டுவிட்டு, வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்தே தீர வேண்டுமா? அதுவும் இந்த ராத்திரியில்?
இவள்தான் அழைக்கிறாள் என்றால், ‘இன்னொரு நாள் வர்றேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்த் தொலைய வேண்டியது
தானே?
இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? போய் அவனுடன் அரட்டை அடிக்க வேண்டுமா?
கடுப்பையெல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு ஹாலுக்கு வந்து ராம் மனோகருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்தான் ரகு.
அவன் கண்களால் வீட்டை சர்வே செய்துகொண்டிருந்தான்.
அஞ்சலி ஈரப் புடவையைக்கூட மாற்றாமல் அப்படியே கிச்சனுக்குச் சென்று அவனுக்கு டீ தயாரித்தபடி குரலுயர்த்திக் கேட்டாள்,
“ராம்…சுகர் எத்தனை ஸ்பூன்?”
ஓ… முதலாளியாய் இருந்தாலும் பெயர் சொல்லித்தான் அழைப்பாளோ? அலுவலகத்தில் எல்லோரும் அப்படி அழைப்பார்களா அல்லது இவள்தான் அப்படி அழைக்கிறாளா?
“ஒன் அண்ட் ஹாஃப் ப்ளீஸ்” என்ற ராம் மனோகர், இவன் பக்கம் திரும்பி, “ராகவன்… நீங்க எந்த கம்பெனில வொர்க் பண்றிங்க?” என்றான்.
“நான் ராகவன் இல்ல… ரகு!” என்றவன் நிறுவனத்தின் பெயரைச் சொன்னான்.
“அங்க சரியா சேலரி தர்றதில்லன்னு கேள்விப்பட்டேனே?”
“அப்படில்லாம் இல்லயே. ஒழுங்காதான் தர்றாங்க.”
“இந்த ஃபிளாட்டுக்கு எவ்வளவு வாடகை?”
“ஏன்? என்ன விஷயம்?”
“சும்மாதான் கேட்டேன்.”
“பத்தாயிரம். மெயின்டெனன்ஸ் ஒரு ஆயிரத்தைநூறு வரும்''
“உங்க சாலரி எவ்வளவு ரகு?”
“உங்க கம்பெனியோட இயர்லி ப்ராஃபிட் என்னன்னு பதிலுக்கு நான் கேட்டா சொல்விங்களா ராம்?”
“ஏன் இப்படி டென்ஷனாகறிங்க? நான் ஒரு காரணமாதான் கேட்டேன்.”
“என்ன காரணம்?”
“துபாய்ல என் ஃப்ரெண்டு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வெச்சிருக்கான். உங்களை மாதிரி குவாலிஃபைட் சிவில் இன்ஜினீயர்ஸ் வித் எக்ஸ்பீரியன்ஸ்னா இண்டியன் மணில ஒரு லட்சம் வரைக்கும் சாலரி தர்ற மாதிரி என்னால ஏற்பாடு செய்ய முடியும்.”
“ஓகோ…”
“ஒருவேளை அதே அளவுக்கு இங்க உங்களுக்கு வந்தா நீங்க இதைக் கன்சிடர் செய்ய வேண்டியதில்ல.”
“அப்படியா?”
“நான் இதுவரைக்கும் அப்படி ஏழு பேரை ரெக்க
மண்ட் பண்ணி அனுப்பி வெச்சிருக்கேன். அதுக்குதான் கேட்டேன்.”
“எனக்கு லண்டன்ல ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அங்க எனக்கு வேலை ஏற்பாடு பண்ணித்தர்றேன்னு பல தடவை கேட்டுட்டாங்க. போறதுன்னா எப்பயோ போயிருப்பேன்.”
“பின்ன ஏன் சார் போகலை?”
“இதென்ன சார்… வெளிநாட்ல வேலை கிடைக்குதுன்னா எல்லாருமே அதுக்கு ஆசைப்பட்டுப் போயாகணுமா என்ன? எனக்கு இந்தியால இருக்கறதுதான் பிடிச்சிருக்கு.”
“அதிசயமா இருக்கு சார். ரொம்ப வித்தியாசமான ஆளா இருக்கிங்க நீங்க.”
“எனி வே உங்க அக்கறைக்கு தேங்க்ஸ்.”
டீயோடு வந்தாள் அஞ்சலி.
“அவர் இந்த மாதிரி ஏகப்பட்ட பாலிசீஸ் வெச்சிருக்
கார் ராம். தாம்பரத்துல ரெண்டு கிரவுண்ட் லேண்ட் வெச்சிருக்கார். லோன் போட்டு சொந்தமா வீடு கட்டிக்
கிட்டுப் போலாம்னு ஆயிரம் தடவை சொல்லிட்டேன்.”
“நல்ல யோசனைதானே?”
“அவருக்கு லோன் வாங்கறது பிடிக்காது.”
“ரெண்டு கிரவுண்டுன்னு சொன்னிங்களே… அதுல ஒரு கிரவுண்டை வித்துட்டு அந்தப் பணத்துல மிச்ச ஒரு கிரவுண்டுல கட்டலாமே…”
“எக்ஸ்க்யூஸ் மீ ராம். நான் வீடு கட்டணுமா, வேணாமா, எங்க கட்டணும், எப்படி கட்டணும் இப்படி ஏதாச்சும் உங்ககிட்ட ஆலோசனை கேட்டு வந்தா… அப்போ அட்வைஸ் செஞ்சா போதும்.”
டீ பருகிக்கொண்டிருந்த ராம், பாதியில் அப்படியே வைத்துவிட்டு சட்டென்று எழுந்தான்.
“அஞ்சலி… வர்றேன். ரகு… கொஞ்சம் மேனர்ஸ் கத்துக்கங்க.”
“என்ன… என்ன இப்ப மேனர்ஸ் இல்லாம நடந்துக்
கிட்டேன்? அடுத்தவங்க ஃபேமிலி மேட்டர்ஸ்ல தலை
யிடறதும், தேவையில்லாம யோசனை சொல்றதும், சாலரி என்னன்னு கேக்கறதும் ரொம்ப மேனர்ஸான விஷயமா?”
ரகுவை முறைத்துவிட்டு வேகமாகப் போனான் ராம்.
வாசல் வரை போய் அவன் விலகியதும் கோபமாகத் திரும்பினாள் அஞ்சலி.
“கார் வரைக்கும் போய் டாட்டா காமிச்சிட்டு வர்றதுதான?”
“என்னாச்சி ரகு? ஏன் இப்படி அர்ரகன்டா நடந்துக்கிட்டே?”
“அவன் ஒழுங்கா நடந்துக்கிட்டானா?”
“அவர் என் பாஸ்!”
“உனக்குதான? எனக்கில்லையே?”
“என்ன கோபம் உனக்கு அவர் மேல?”
“என்ன கரிசனம் உனக்கு அவன் மேல?”
“அர்த்தமில்லாம பேசாத!”
“யாரு அர்த்தமில்லாம பேசறது? அவனைக் கூப்புட்டு உக்கார வெச்சி டீ குடுத்து உபசரிக்கிறது ரொம்ப முக்கியமா இப்ப?”
“என்னை ட்ராப் பண்ணினதுக்காக ஒரு கர்ட்டசிக்குக் கூப்பிட்டேன். என்ன தப்பு?”
“அதென்ன பேர் சொல்லிக் கூப்புடறே?”
“அப்டித்தான் கூப்புடச் சொல்லிருக்கார்.”
“எல்லாரும் அப்படிதான் கூப்புடுவாங்களா?”
“ஆமாம்.”
“சரி… நான் இவன்கிட்ட வெளிநாட்ல வேலை வாங்கித் தர முடியுமான்னு கேட்டனா?”
“ஜஸ்ட் ஒரு யோசனையாதான சொன்னார்?”
“அவன்கிட்ட எதுக்கு என்னைப் பத்தி கமென்ட் பண்றே?”
“நீ இவ்ளோ டென்ஷன் மூட்ல இருக்கேன்னு புரியாம சாதாரணமா சொல்லிட்டேன் ரகு.”
“நீ வீடு பத்திப் பேசுனதாலதானே இப்படி கட்டு, அப்படி கட்டுன்னு அவன் யோசனை சொல்றான்! அதுக்கு நீதான இடம் குடுத்தே?”
“அய்யா… சாமி. தெரியாம சொல்லிட்டேன்ப்பா. விட்ரு!”
“அவன் எப்ப தண்ணி அடிச்சான்?”
“என்னைக் கேட்டா?”
“உனக்கு ஸ்மெல் தெரியலையா?”
“தெரியலையே…”
“நீ முன் சீட்ல உக்காந்து வந்தியா… இல்ல பின் சீட்ல உக்காந்து வந்தியா?”
“என்ன கேள்வி இது? அடப்பாவி! ஓ… உன் மனசுல என்ன இருக்குன்னு இப்பதான் புரியுது. எதுக்கு நீ இவ்ளோ ஆத்திரப்படறேன்னு நல்லாவே புரியுது. சரி…இப்ப சொல்றேன். நான் ஆட்டோவுக்காக வெய்ட் பண்ணிட்டிருந்தனா? ராம் கார்ல வந்தாரா? நான் வேற மழையில் நனைஞ்சி செக்ஸியா இருந்தனா? அதனாலதான் லிஃப்ட் தர்றேன்னார். எனக்கும் அவர் மேல ரொம்ப நாளா ஒரு க்ரஷ். அதனால நானும் உடனே ஏறிக்கிட்டேன். முன்பக்கத்துல. அப்பறம் வழில காரை ஓரமா நிறுத்தி… இப்ப உன் மனசுல என்ன வக்கிரமா நினைக்கிறியோ…அது நடந்துச்சி. அதுல அவர் டயர்டாயிட்டாரா… அதான் வந்து டீ குடிச்சிட்டுப் போங்கன்னு கூப்பிட்டேன். போதுமா?” என்று படபடவென்று பேசிவிட்டு அறைக்குள் சென்று ஈரப் புடவையை அவிழ்த்து நைட்டி அணியத் தொடங்கினாள் அஞ்சலி.
அதிர்ந்துபோய் அப்படியே நின்றான் ரகு.
(தொடரும்…)