கரு.முத்து
muthu.k@kamadenu.in
தமிழகத்தில், ரஜினி தலைமையில் ஆன்மிக அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். இதற்காக, ஆன்மிக அமைப்புகள், பக்தி இயக்கங்களை ஒருங்கிணைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். 2019 டிசம்பரில் சென்னையில் முதல் ஆன்மிக அரசியல் மாநாட்டை நடத்திய அவர், சமீபத்தில் தஞ்சாவூரில் இரண்டாவது மாநாட்டை நடத்தியிருக்கிறார். அதில் பாஜக பிரமுகர் ராதாரவியையும் வைத்துக்கொண்டு, “ரஜினி தலைமையில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழும்” என்று தீர்மானம் போட்டுப் பரபரப்பை ஏற்றியிருக்கும் அர்ஜுன் சம்பத்திடம் பேசினேன். அவரது பேட்டி:
ஆன்மிக அரசியல் என்பதுதான் தற்போது புது ட்ரெண்டா?
தமிழ்நாட்டில் எப்போதுமே ஆன்மிக உணர்வுக்குக் குறையேயில்லை. ஆனால், ஆன்மிக உணர்வாளர்கள் ஆன்மிகத்துக்கோ, தேசத்துக்கோ ஒரு பிரச்சினை என்று வருகிறபோது பக்தி, கோயில் என்பதோடு ஒதுங்கிக்கொள்கிறார்கள். அப்படி இருப்பதல்ல ஆன்மிகம். நம் நாட்டில் ஆன்மிகம் ஆட்சி செய்திருக்கிறது. 63 நாயன்மார்களில் மன்னர்கள் இருந்தார்கள், அமைச்சர்கள் இருந்தார்கள். சேக்கிழார் முதலமைச்சராக இருந்தார். தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூராரும் சிறந்த ஆன்மிகவாதி, வள்ளலார் பக்தர்.