பயமுறுத்தும் பன்றிக் காய்ச்சல்!


கரோனா வைரஸ் தாக்குதல் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவிவருவது கவலையளிக்கிறது. கடந்த 45 நாட்களில் 170-க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

கேரளம், கர்நாடகம் எனத் தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே பன்றிக் காய்ச்சல் பாதிப்பு நிலவுகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆறு பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது இதன் தீவிரத்தை உணர்த்துகிறது. இந்நிலையில், புத்தாண்டு தொடங்கி முதல் ஒரு மாதத்திலேயே தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. பருவநிலை மாறிவரும் சூழலில் இதன் பாதிப்பு அதிகரிக்கும் என்றே எச்சரிக்கப்படுகிறது.

இது உயிர்க்கொல்லி நோயல்ல என்பதும் எளிதாகத் தடுத்துவிடக்கூடியது என்பதும் ஆறுதல் அளிக்கும் விஷயங்கள். அதேசமயம், அலட்சியமாக இருந்தால் உயிர் பலியும் நிகழ்ந்துவிடலாம். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு இது எளிதில் பரவிவிடும் என்பதால் கூடுதல் எச்சரிக்கையும் அவசியம்.

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகளும் புழக்கத்தில் இருக்கின்றன. ஆண்டுக்கு ஒரு முறை இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் பன்றிக்காய்ச்சலிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். அதேசமயம், இந்தத் தடுப்பூசியின் விலை அதிகமாக இருப்பதும் அரசின் கவனத்துக்குரிய முக்கிய விஷயம்.

x