பிரேமா நாராயணன்
premaa.narayanan@gmail.com
ஏழை மக்கள், விளிம்புநிலை மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நகரங்களில் ‘அன்புச் சுவர்கள்’ இருப்பது நமக்குத் தெரியும். பயன்படுத்தப்பட்ட ஆடைகளையும், மிச்சமாகும் உணவுகளையும் பலர் அங்கு கொண்டுவந்து தருவதைப் பற்றியும், அவை எண்ணற்ற ஏழைகளுக்குப் பயன்படுவது பற்றியும் அறிந்துவைத்திருக்கிறோம். இதே பாணியில், பயன்படுத்தப்பட்ட ஆடைகளைச் சேகரித்து ஏழை மக்களுக்கு விநியோகிப்பதற்காக ஒரு கடையையே நடத்திவருகிறார் குமரப்பன். சென்னை ஆழ்வார் திருநகரை அடுத்த சரஸ்வதி நகரில், சிறியதொரு தெரு ஒன்றின் முனையில் இருக்கும் இந்தக் கடையின் பெயரே ‘நம்ம கடை’தான்!
இங்கே புடவைகள் தொடங்கி, பேன்ட், சட்டை, சுடிதார், குழந்தைகளுக்கான ஆடைகள் என்று வண்ண வண்ண ஆடைகள் அழகுற அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பயன்படுத்தப்பட்ட ஆடைகள்தான் என்றாலும் புத்தாடைகள் போல பளிச்சென்று துவைக்கப்பட்டு, இஸ்திரி செய்யப்பட்டு ஒரு ஜவுளிக் கடையில் இருக்கும் ஆடைகள் போலவே ஜொலிக்கின்றன. ஏழை மக்கள் இங்கு வந்து தங்களுக்குத் தேவையானவற்றை இலவசமாக எடுத்துச்செல்கிறார்கள்.
பரந்த எண்ணத்துடன் இப்படி ஒரு கடையை நடத்திவரும் குமரப்பனிடம் பேசினேன்.
“நான் இந்த ஏரியாவிலேயே ரொம்ப வருஷமா வசிக்கிறேன். பிளாஸ்டிக் கம்பெனிகளுக்குத் தேவையான ‘மெஷ்’ (சல்லடை) தயாரிக்கும் சிறுதொழிலை இங்கே பக்கத்திலேயே நடத்திக்கிட்டிருக்கேன். பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகி எல்லாரும் நல்லா செட்டில் ஆகிட்டாங்க. எனக்கு ஆண்டவன் போதும் போதும்ங்கிற அளவுக்குக் கொடுத்திருக்கான். சரி, நாம மட்டும் நல்லா இருந்தா போதுமா... நம்மைச் சுற்றிலும் இருக்கிற சமூகத்துக்கு நம்மால முடிஞ்சதைச் செய்யலாமேன்னு யோசிச்சேன்.