என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
குமரி மண்ணுக்கே உரிய பாரம்பரியக் கலைகளின் முக்கியத்துவத்தைக் கதைக்களமாகக் கொண்டு அண்மையில் ‘பட்டாஸ்’ திரைப்படம் வெளியானது. இதில் ‘அடிமுறை’ எனும் தற்காப்புக் கலையைக் கற்றுத்தரும் ஆசானாக தனுஷ் நடித்திருந்தார். படம் வெற்றி பெற்றதோ இல்லையோ, அடிமுறை எனும் யுத்தக் கலையைப் பற்றிய பரவலான அறிமுகத்தை அந்தப் படம் தந்தது.
இதுபோன்ற பாரம்பரியக் கலைகளைக் கற்றுத்தரும் ஆசான்கள் திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் தீவிரமாக இயங்கிக்
கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஆசான்களில் ஒருவர்தான் ஜான் எட்வின் ராஜ்.
தமிழக, கேரள எல்லையோரப் பகுதியான மரியகிரி பகுதியில் இருக்கிறது ஜான் எட்வின் ராஜின் வீடு. அரசுப் பள்ளியின் கணித ஆசிரியரான இவர், சுற்றுவட்டாரக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் களரி, வர்மக்கலை உள்ளிட்ட பாரம்பரியக் கலைகளைக் கற்றுக்கொடுக்கிறார். இவரிடம் பயிற்சிபெற்ற பலரும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை அள்ளிவருகிறார்கள். பள்ளியில் ஆசிரியராகவும், பள்ளிக்கு வெளியே கலைகளைக் கற்றுத் தரும் ஆசானாகவும் பரிமளிக்கும் எட்வின் ராஜைச் சந்திக்க அவர் பயிற்சி அளிக்கும் மைதானத்துக்கே சென்றிருந்தேன். அவரது சிஷ்யப் பிள்ளைகள் ஒருவர் பின் ஒருவராக மைதானத்துக்கு வந்து பவ்யமாகக் குருவணக்கம் சொல்லிவிட்டு களத்தில் இறங்குகிறார்கள்.