இதுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவாச்சு!- சசிக்குமாரின் நவீன ஏர்க்கலப்பை வண்டி


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

நம்மூர் பாரம்பரிய விவசாயிகள், காளைகள் பூட்டிய ஒற்றை கொத்துக் கலப்பை கொண்ட ஏர்க் கலப்பையைத்தான் உழவுக்குப் பயன்படுத்துவார்கள். நவீன விவசாயிகளோ நான்கைந்து கொத்துக் கலப்பைகள் மாட்டிய ஏர்க்கலப்பைகள் பொருத்தப்பட்ட டிராக்டர்களில் உழவு செய்வார்கள். ஆனால், ‘ரேக்ளா’ வடிவமைப்பில் மாடுகளைப் பூட்டி, டிராக்டர் ஏர்க்கலப்பைகளைப் போல கொத்துக் கலப்பைகளைப் பின்புறம் மாட்டிக்கொண்டு உழவோட்டும் வகையில் புதிதாக ஒரு வண்டியை உருவாக்கியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த சசிக்குமார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசிக்கும் சசிக்குமார், பி.இ எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படித்திருந்தாலும் முழு நேர விவசாயியாக வாழ்ந்துவருபவர். முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தனது நவீன ஏர்க்கலப்பை வண்டியை உருவாக்கித் தந்திருக்கும் சசிக்குமாரை செல்போனில் தொடர்புகொண்டேன்.

“கோவை மாதம்பட்டியில நான் உருவாக்கின வண்டிகள் இருக்கு. வாங்க பார்க்கலாம்” என்று சொல்லி மாதம்பட்டி குப்பனூரில் சண்முகம் என்பவரது விவசாயப் பண்ணைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கே அவர் உருவாக்கிய வண்டிகள் இருந்தன.
“இது சிக்ஸ் இன் ஒன் வண்டி. ஆறு வேலைகளை இதுல செய்யலாம். கொத்துக் கலப்பைகளை மாட்டி உழவோட்டலாம். அதைக் கழற்றிட்டு, விளைஞ்ச வெங்காயம், மஞ்சள், காய்கறிகளைப் பறிக்க பார் ஓட்டும் பெட்டியை மாட்டிக்கலாம். நாம போக வர… வண்டியையும் பூட்டிக்கலாம். பிளேடு கலப்பையை மாட்டி களைகள் வெட்டவும் பயன்படுத்தலாம்” என்றவர், அங்கிருந்த இளைஞரின் உதவியுடன் மூன்று கொத்துக் கலப்பையை வண்டியில் மாட்ட ஆரம்பித்தார். ஐந்து நிமிடம்தான். வண்டியில் நுகத்தடி மாட்டப்பட்டது. இரண்டு பக்கமும் காளைகள் பூட்டப்பட்டன. அருகில் இருந்த விவசாய நிலத்தில் அந்த இளைஞர் உழவோட்ட ஆரம்பித்துவிட்டார். டிராக்டருக்கு நிகரான வேகத்திலேயே வண்டி ஓடியது.

x