மஹா பெரியவா 53: அருளே ஆனந்தம்


பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

மொழி (பாஷை) என்பது முக்கியமானது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்குப் பயன்படக் கூடியது மொழி.

தாய்மொழியைத் தவிர மற்ற மொழிகளையும் ஒருவர் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அது அவசியமாகிறது.

எல்லோருக்கும் தாய்மொழி என்பது முக்கியம். அதை அவசியம் கற்றிருக்க வேண்டும். அதிலேயே பேசவும் வேண்டும். இன்றைக்கு அயல் தேசங்களில் வாழும் தமிழர்களும் அங்கே தமிழைத்தான் பெரும்பாலும் பேசுகிறார்கள்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் பலர், வெளிநாடுகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக வாழ்கின்ற காரணத்தால் அவர்களது வாரிசுகள் தமிழைக் கற்காமலேயே போக நேரிடுவது, சோகமே! எப்பாடு பட்டேனும் தாய்மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கான அவசியம் இப்போது தெரியாது. பிற்காலத்தில் ‘கற்காமலேயே விட்டு விட்டோமே’ என்று வருத்தப்பட நேரிடும்.
காஞ்சி மகா பெரியவாளுக்கு பதினெட்டு பாஷைகள் தெரியும் என்று சொல்லப்படுவதுண்டு.

வேதம், பாஷ்யங்கள், உபநிஷதங்கள் காரணமாக சம்ஸ்கிருதத்தைப் போற்றுவார்.

தமிழ் மொழி, உயர்ந்த மொழி என்று மகானே சொல்லி இருக்கிறார். தமிழ் தொடர்பான பல ஆராய்ச்சிகளைத் தேர்ந்த தமிழறிஞர்களைக் கொண்டு நடத்தி இருக்கிறார். அத்தகைய அறிஞர்களுள் கி.வா.ஜ. என்கிற கி.வா.ஜகந்நாதன் முக்கியமானவர்.
ஒரு முறை தமிழறிஞர் கி.வா.ஜ -வை காஞ்சி ஸ்ரீமடத்துக்கு வரவழைத்தார் மகான். தமிழ் மொழியின் சிறப்பு பற்றி மகா பெரியவா அவரிடம் வியந்து பேசிக் கொண்டிருந்தார். தமிழ்ப் புலவர்களின் சிலேடைப் பாடல்களையும் அதன் பொருளையும் வித்தியாசமான முறையில் பதம் பிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது கி.வா.ஜ - விடம், ‘‘எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பு தமிழுக்கு இருக்கிறது, தெரியுமா?’’ என்றார்.
‘‘சொல்லுங்கோ பெரியவா... கேட்டுக்கறேன்’’ என்று அடக்கமாகப் பதிலளித்தார் தமிழறிஞர்.

பொதுவாக நம்மை விட மெத்தப் படித்தவர்கள், ஞானிகள் ஏதேனும் கேள்வி கேட்டால், ‘நீங்கள் சொன்னால் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்று அடக்கமாக இருக்க வேண்டும். பணிவு என்றுமே உயர்வு தரும். பதில் சொல்லாமல் பணிவுடன் இருக்கிறபோதுதான் நமக்குத் தெரியாத பல புதிய தகவல்கள் அந்த ஞானிகளிடம் இருந்து கிடைக்கும். ‘எனக்குத்தான் எல்லாம் தெரியுமே...’ என்கிற பாணியில் அகந்தையுடன் பேசினால், பல நல்ல தகவல்களை அறிந்து கொள்ள முடியாமலே போய்விடும்.
இந்த இடத்தில் கி.வா.ஜ., தமிழில் மிகப் பெரிய பண்டிதராகவே இருந்தாலும், தமிழின் சிறப்பு பற்றி மகான் சொல்ல, நாம் கேட்கலாமே என்று அவையடக்கம் காத்தார்.

மகா பெரியவா சொன்னார்: ‘‘எந்த ஒரு மொழியிலும் இல்லாத சிறப்பு தமிழுக்கு உண்டு என்றால், அதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒரு காரணம், ‘ழ’ என்கிற எழுத்துதான். இதை உச்சரிப்பதே ஆனந்தமாக இருக்கும். ‘ழ’ என்கிற இந்த எழுத்து வரக் கூடிய பெரும்பாலான சொற்கள் இனிமை வாய்ந்தவை. அந்த வார்த்தைகளைக் கேட்டாலே ஒரு சுகம் கிடைக்கும்.’’
கி.வா.ஜ. ஆச்சரியத்துடன் மகானைப் பார்த்தார், அவரே மேலே பேசட்டும் என்று.

‘‘அழகு, குழந்தை, மழலை, நிழல், பழம், யாழ், மழை.. இப்படி ‘ழ’ என்கிற எழுத்து வரக்கூடிய பல வார்த்தைகளைச் சொல்லிப் பார். பெரும்பாலும் இன்பம் பயக்கின்றவையாகவே அவை இருக்கும்.’’

பெரியவா சொன்னதைக் கேட்டு வியந்து அவரை நமஸ்கரித்தார் கி.வா.ஜ.!
‘‘தமிழுக்குத் தமிழ் என்கிற பெயர் ஏன் வந்திருக்கும் தெரியுமா?’’
அடுத்த ஆராய்ச்சிக்கான கேள்வியைப் போட்டார் பெரியவா.

வழக்கம்போல் அமைதி காத்தார் கி.வா.ஜ.! ‘‘தெரியலை பெரியவா... நீங்களே சொல்லுங்கோ...’’ என்றார்.
‘‘இத்தனை இனிமையான எழுத்தான ‘ழ’வைத் தம்மிடம் கொண்டுள்ளதால், அதை தமி + ழ் என்று சேர்த்து தமிழ் என்று அழைக்கலாமா?’’   ஒரு புன்னகையுடன் சொல்லி விட்டுத் தமிழறிஞரை மலர்ச்சியுடன் பார்த்தார் ஆன்மிக அறிஞர்.
கி.வா.ஜ. மீண்டும் ஒரு முறை மகா பெரியவாளை நமஸ்கரித்தார். ‘‘பெரியவா... தமிழுக்கு தமிழ் என்கிற பெயர் இப்படியும் வந்திருக்கலாம் என்கிற கோணத்தில் தாங்கள் சொன்ன விளக்கம் நன்றாக இருக்கிறது. இனி, மேடைகளில் நான் பேசுகிறபோது பெரியவா சொன்ன இந்த விளக்கத்தையும் சொல்ல அனுமதிக்க வேண்டும்’’ என்று கைகூப்பிப் பிரார்த்தித்தார்.
ஒரு புன்னகையுடன் தமிழறிஞரை ஆசிர்வதித்துப் பிரசாதம் தந்து அனுப்பினார் பெரியவா.

மொழியை வைத்துக் கொண்டு பலரும் சண்டை போடுவதை அந்தக் காலத்திலேயே கண்டித்திருக்கிறார் மகான்.
‘‘பாஷையை வைத்துக் கொண்டு, ‘இது என் பாஷை... அது உன் பாஷை’ என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிறோம். அதோடு இந்த பாஷைதான் உயர்ந்தது... அந்த பாஷைதான் உயர்ந்தது என்றெல்லாம் இப்போது பலரும் சண்டை போடுவதைப் பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. பாஷைக்காக நடைபெறும் இந்தச் சண்டை சச்சரவுகளைப் பார்த்தால் எல்லோரும் ஊமையாகப் போனால்கூடத் தேவலை என்று தோன்றுகிறது.

நம்முடைய கருத்தை...  அபிப்பிராயத்தைத் தெரிவிக்கப்பயன்படும் ஒரு கருவிதான் பாஷை. இது எல்லா ஊரிலும் ஒன்றாக இருக்க முடியாது. பல்வேறு இடங்களில் வசிக்கக் கூடியவர்கள் பல்வேறு பாஷைகளைப் பேசுவார்கள் (தமிழகத்தில் பார்த்தாலே தமிழ் ஊருக்கு ஊர் மாறுபடுகிறது. தஞ்சாவூர், சென்னை, மதுரை, நெல்லை என்று ஊருக்கு ஊர் பேச்சு வழக்கு மாறுவதைப் பார்க்கலாம்).
என் பாஷை உசத்தி, உன் பாஷை தாழ்த்தி என்று சண்டை பிடிப்பது அர்த்தமில்லாத காரியம். தெரிந்த பாஷை, தெரியாத பாஷை என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, பாஷையை வைத்துக் கொண்டு சண்டை போடுவது கூடாது.

ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நம்முடைய மதத்துக்கு மூலமான வேதம், சாஸ்திரம் எல்லாம் சம்ஸ்கிருத பாஷையில் இருப்பதால் அவற்றைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சம்ஸ்கிருத பாஷையை ரட்சிக்க வேண்டும் என்று சொல்கிறேன்’’  என்கிறார் மகா பெரியவா.

எந்த ஒரு காலத்திலும் தமிழ் மொழியை விட்டுக் கொடுத்ததில்லை மகா பெரியவா. இடம், பொருள், ஏவல் அறிந்துதான் அந்தந்த பாஷையில் பேச வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார் மகான். ஆந்திராவில் இருந்து பக்தர்கள் வந்திருந்தால் அவர்களுடன் தெலுங்கில் உரையாடுவார். கர்நாடகாவில் இருந்து வந்திருந்தால், கன்னடம். தமிழ் தெரிந்தவர்கள் என்றால், அவர்களிடம் தமிழில்தான் உரையாடுவார்.

தமிழ் நமது தாய்மொழியாக இருக்கிறபோது அதுதான் நம் மொழி. அதில் உரையாடுவதைத்தான் எல்லோரும் விரும்புவோம். அதுதான் நமது பழக்கமும்கூட.

மொழியில் மகா பெரியவாளுக்கு இருக்கும் ஆர்வம் தொடர்பான ஓர் அனுபவத்தையே பார்ப்போம்.

மகான் அப்போது காஞ்சிபுரத்தில் இருந்தார். அன்றைய தினம் தரிசித்து அருள் பெறுவதற்காகப் பக்தர்கள் பலரும் ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தனர். அத்தகையவர்களில் ஒரு தம்பதியும், அவர்களின் குடும்ப நண்பர் ஒருவரும் வந்திருந்தார்கள்.

இந்தத் தம்பதியர் அமெரிக்காவில் வசித்து வருபவர்கள். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னேயே அமெரிக்கா
வுக்குச் சென்று ‘செட்டில்’ ஆனவர்கள். எப்போதெல்லாம் தாய்நாடு வர வேண்டிய வேலை இருக்கிறதோ, அப்போதெல்லாம் புறப்பட்டு வருவார்கள். சொந்த பந்தங்களைப் பார்த்து மகிழ்வார்கள். ஷேத்திராடனம் செல்வார்கள். பல ஆலயங்களைத் தரிசிப்பார்கள். மகான்களையும் தேடித் தேடி தரிசிப்பது வழக்கம். அந்த வகையில் பாரதம் வரும்போதெல்லாம் காஞ்சிக்கும் வந்து பெரியவாளைத் தரிசித்து ஆசி பெறுவது வழக்கம்.

இந்தத் தம்பதியருடன் உடன் வந்திருக்கிற அவர்களது குடும்ப நண்பரும் தமிழர்தான். என்ன ஒன்று... அவர் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். இருந்தாலும் தமிழர் என்றால் முகம் காட்டிக் கொடுத்துவிடும், உலகத்தின் எந்த மூலையில் பிறந்தாலும்கூட!
அந்த வகையில் இந்தக் குடும்ப நண்பர் ஒரு தமிழ்க்காரர் என்பது பார்த்தாலே முகத்தில் எழுதி ஒட்டி இருக்கிறது. ஆனால், அவர் அணிந்திருக்கிற ஆடை, நமது தமிழ்க் கலாசாரப்படி இல்லை. அவரது நடவடிக்கைகளும் மேல்நாட்டு பாணியில்தான் இருந்தது.
புறப்படுகிறபோது இந்தத் தம்பதியர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள் ‘‘ஆலயங்களுக்கோ, மகான்களைத் தரிசிக்கவோ செல்லும்போது நம் பாரம்பரியப்படி  உடை அணிந்து செல்ல வேண்டும்’’ என்று!

ஆனால், அவர் கேட்கிற வழியாக இல்லை.

என்ன நடந்தது அடுத்து?

(ஆனந்தம் தொடரும்...)

x