கண்ணுக்கு விருந்தளிக்கும் கடவுளின் சொந்த தேசத்துக்கு எத்தனை முறை சென்றுவந்தாலும் தெவிட்டாது என்பதால், இந்த வாரம் மீண்டும் கேரளம் நோக்கி வாசகர்களை அழைத்துச் செல்கிறோம்.
கடந்த வாரம், சூழல் இணக்கச் சுற்றுலாவில் புதிதாக இணைந்த சின்னாறு நோக்கி ஒரு சிலிர்ப்பான பயணத்தை மேற்கொண்டோம். இந்த வாரம் நாம் பார்க்கவிருப்பது, இந்தியாவில் முதன்முதலில் திட்டமிடப்பட்ட சூழல் இணக்கச் சுற்றுலா மையத்தை. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள செந்தூரணிதான் அது!
2001-ல், கேரளத்தின் அப்போதைய முதல்வர் ஈ.கே.நாயனார் தலைமையிலான அரசு, தென்மலாவை இந்தியாவின் முதல் சூழல் இணக்கச் சுற்றுலா மையமாக அறிவித்தது. தென்மலா சூழல் இணக்கச் சுற்றுலா மையத்தின் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை 'Thenmala Eco toruism Promotion Society (TEPS)' என்ற மாநில அரசு சார் அமைப்பு கவனித்துவருகிறது.
உள்ளம் கவரும் கொல்லம்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையிலிருந்து வெறும் 45 நிமிடப் பயணத்தில் தென்மலாவை அடையலாம். தென்மலாவைச் சென்றடைந்ததும், மலையாளக் கரையோரம் தமிழ் பாடும் குருவியாக நீங்கள் மாறியிருப்பீர்கள். செந்தூரணி வனவிலங்கு சரணாலயம் (இதுதான் தென்மலா சூழல் இணக்க மையத்தின் அதிகாரபூர்வ நாமகரணம்) தன்னகத்தே கொண்டுள்ள இயற்கை எழிலைக் கண்டதும் உங்களுக்குள் அப்படி ஒரு உற்சாகம் ஊற்றெடுக்கும்.
வெப்பமண்டல பசுமையான காட்டு வகையினுள் இப்பகுதி அடங்குகிறது. தென்மலாவின் சிறப்பு சிங்கவால் குரங்கு (Lion tailed Macqaque). ஆனால், இவை மக்கள் அனுமதிக்கப்படும் பகுதியைக் காட்டிலும் சற்று உயரமான பகுதியில் இருப்பதால் எளிதில் காணக் கிடைப்பதில்லை. இரைக்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் கீழே இறங்கும்போதுதான் இவற்றைப் பார்க்க முடியும். இதுதவிர, 62 வகையான பாலூட்டிகள், 227 வகையான பறவையினங்கள், 58 வகை ஊர்வன, 280 வகை வண்ணத்துப்பூச்சிகள், மேற்குதொடர்ச்சி மலைக்கே உரித்தான உயிரினங்கள் எனப் பல்லுயிரின் புகலிடமாக இருக்கிறது தென்மலா.
ஒரு நாள் பயணம்
‘தென்மலா சூழல் சுற்றுலா' திட்டத்தின் கீழ் செந்தூரணி வனப்பகுதியானது, கலாச்சாரப் பகுதி, சாகசப் பொழுதுபோக்குப் பகுதி, மான்கள் மறுவாழ்வு மையம், பொழுதுபோக்குப் பகுதி என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும், பயணத்திற்கும் தனித்தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. www.thenmalaecotourism.com என்ற இணையதளத்தில் இது குறித்த தகவல்களைப் பெறலாம்.
மழைக்காலங்களில் இங்கு செல்ல அனுமதி இல்லை. தென்மலாவின் இயற்கையைச் சிலாகிக்க அக்டோபர் தொடங்கி பிப்ரவரி வரையிலான காலகட்டம் சிறந்தது. நீங்கள் குடும்பத்துடன் தென்மலா சென்றால் காலை தொடங்கி மாலை வரை வணங்கி அனுபவிக்க தென்மலா சிறந்த இடம் என்றும் கூறுகின்றனர்.
‘இது என் ஊர்…’ பெருமித அனுபவக் குறிப்பு
தென்மலாவைச் சொந்த ஊராகக் கொண்டவர் பைஜூ. இயற்கையின் மீதான காதலால் மத்திய அரசுப் பணியை உதறியவர். சொந்தமாகத் தொழில் செய்துகொண்டே, நேரம் கிடைக்கும்போதெல்லாம் வனத்துக்குள் பயணப்படுகிறார். வனத் துறையோடு சேர்ந்து சில ஆவணப்படுத்துதல் பணியில் தன்னார்வலராகவும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
“செந்தூரணி ஆற்றுப்படுகை எனது பள்ளி நாட்கள் முதல் எனக்குத் தாய்மடி. எனவே, இயல்பாகவே இயற்கையின் மீது காதல் வந்துவிட்டது. எனக்குப் பறவைகள் மீது ஆர்வம் அதிகம். சிறு வயதில் செந்தூரணி ஆற்றில் குவியும் வெளிநாட்டுப் பறவைகளை வியந்து பார்ப்பேன். இப்போதும் அக்டோபர் தொடங்கி பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் பலவிதமான வெளிநாட்டுப் பறவைகளை அங்கு பார்க்கலாம்.
செந்தூரணி வனப்பகுதியில் மான்கள் மறுவாழ்வு மையம் இருக்கிறது. அங்கே புள்ளி மான்கள் உட்பட பலவகையான மான் இனங்களைக் காணலாம். பள்ளி- கல்லூரிகளிலிருந்து கல்விச் சுற்றுலா வருபவர்களுக்கு நுழைவுக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது.
தென்மலா வந்தடைந்தவுடன் தகவல் மையத்திலிருந்து உங்களை வனத் துறை வாகனத்திலேயே, படகு சவாரி மையம் வரை அழைத்துச் செல்வார்கள். தென்மலா (கல்லடா) அணையின் பேக்வாட்டர்ஸ் தான் படகுச் சவாரிக்கான இடம். போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் படகில் ஏறினால் 3 மணி நேரம் குதூகலப் பயணம் உத்தரவாதம். மான்கள், காட்டெருமைகள், யானைகள் என வன உயிரினங்கள் காணக் கிடைக்கும். ஆற்றின் நடுவே சில இடங்களில் உள்ள தீவுப் பகுதிகளில் தங்கும் விடுதி அமைத்துள்ளனர். அவை பிரத்யேகமாகப் புதுமணத் தம்பதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
தென்மலா அணை அமைக்கப்படுவதற்கு முன்னதாக அந்தத் தடம் செங்கோட்டை - கொல்லம் பகுதிகளை இணைக்கும் சாலையாக இருந்துள்ளது. இப்போதும்கூட தண்ணீர் மிக மோசமாக வற்றினால் அணைக்கு அடியில் புதைந்திருக்கும் பிரிட்டிஷ் கால கண்ணாடி மாளிகை தெரியவரும். என் பால்ய பருவத்தில் கண்ணாடி மாளிகைப் பற்றி புனையப்பட்ட பேய்க் கதைகள் நிறையவே கேட்டிருக்கிறேன்.
சிறு வயதில் ஊர்க்காரர்கள் மட்டுமே உலா வந்த இடம் இன்று சுற்றுலா மையமாகிவிட்டது. அதன் தாக்கம் இருந்தாலும்கூட செந்தூரணி வனச்சரக அதிகாரிகள் இயற்கை மீது அழுத்தம் ஏற்படாமல் நடத்திவரும் இந்த சூழல் இணக்கச் சுற்றுலா திட்டம் பாராட்டத்தக்கதே” என ஊர்ப் பெருமையை உளம் நெகிழ்ந்து பகிர்ந்துகொண்டார் பைஜூ.
ட்ரெக்கிங் செல்லத் தயாரா?
தென்மலாவில் இடிமுழங்கான் பாரா, ராக் வுட், ரோஸ் மலா என ட்ரெக்கிங் செல்ல மூன்று இடங்களை வனத் துறை தெரிவுசெய்து வைத்துள்ளது. ட்ரெக்கிங் செல்ல 5 பேர் கொண்ட குழு, 20 பேர் கொண்ட குழு என இரண்டு பேக்கேஜ்கள் உள்ளன. வனத்துறை வழிகாட்டி, மஸ்தூர் எனப்படும் பாதுகாவலர்களுடனேயே ட்ரெக்கிங் செல்ல அனுமதிக்கப்படுவீர்கள். கரடுமுரடான பாதையில் சைக்கிள் பயணம் செய்து இயற்கையை ரசிக்க சைக்கிள்களும் வழங்கப்படுகின்றன. தொங்குபாலத்தில் நடந்தவாறு வண்ணத்துப் பூச்சிகளின் அணிவகுப்பைக் கண்டு மகிழலாம். ட்ரெக்கிங் நடுவே வனத் துறை சார்பிலேயே சைவ சிற்றுண்டி வழங்கப்படுகிறது. குப்பைகளை எங்கும் வீசிவிடாதபடி வழிகாட்டி எச்சரித்துக்கொண்டே வருவார் என்பதால் முன்கூட்டியே நீங்கள் பொறுப்பான பயணியாக மாறிக்கொள்ளுங்கள்.
நாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியதுபோல் தென்மலாவின் நான்கு பகுதிகளில் ஒன்றான பொழுதுபோக்குப் பகுதியான லீஸர் ஜோனில், மாலை நேரத்தில் செயற்கை ஊற்றில் வண்ண ஒளி பாய்ச்சி இசைக்கேற்ப அவற்றை அசைந்தாடச் செய்யும் கண்கவர் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
உள்ளூர் பழங்குடிகளால் தயாரிக்கப்பட்ட தேன், அங்கு விளைவிக்கப்பட்ட ஏலம் போன்ற வாசனைப் பொருட்கள் ‘ஈக்கோ ஷாப்’களில் கிடைக்கின்றன. வனம் சார்ந்த நூல்களும் கிடைக்கின்றன. பயணத்தின் நினைவாக நீங்கள் வாங்கிச் செல்ல நினைவுப் பரிசுப் பொருட்களும் உள்ளன. குடும்பத்துடன், நண்பர்களுடன் குதூகலிக்க சிறந்த இடம் என்பதாலேயே சர்வதேச சுற்றுலா அமைப்பு தென்மலாவை உலகின் சிறந்த சுற்றுலா மையங்களில் முக்கியமானதாக அங்கீகரித்துள்ளது.
அடுத்த வாரம், புத்துணர்வூட்டும் புதிய சுற்றுலா மையத்தில் சந்திப்போம்.
படங்கள் உதவி: பைஜூ.எச்
(பயணம் தொடரும்…)