முதுமை எனும் பூங்காற்று 22: ஞானம் என்ற பொக்கிஷம்


ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நிறைய அனுபவங்கள் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்குப் பின்னாலும் நிறைய விஷயங்கள் இருக்கும். நம் முன்னோர்கள் பல சாதனைகள் செய்திருந்தாலும் அவை எழுத்து வடிவில் பதிவுசெய்யப்படாமல் போனதால், அடுத்தடுத்து வந்த தலைமுறையினருக்குப் பயன்படாமல் போய்விட்டதாகப் பொதுவாக ஒரு பேச்சு உண்டு. குறிப்பாக, மருத்துவ முறைகள், விவசாய வழிமுறைகள் பற்றிய குறிப்புகள் வாய்மொழியாகவே தலைமுறைகளுக்குச் சொல்லித்தரப்பட்டதால், ஒருகட்டத்தில் அவை நீர்த்துப்போய் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாமலேயே போய்விட்டதாகச் சொல்லப்படுவதுண்டு.

மருத்துவ முறைகள், விவசாய வழிமுறைகள்தான் என்றில்லை, ஒவ்வொருவரும் தங்கள் சொந்த அனுபவங்களைத் தொகுத்து எழுதிவைத்தாலே அது அடுத்துவரும் சந்ததியினருக்கு மிகப் பெரிய அளவில் பலன் தரும்; வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்.

ஓய்வுக்குப் பின்னர்

வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில், அன்றாடம் நாட்குறிப்பு எழுதக்கூட நிறைய பேருக்கு நேரம் இருப்பதில்லைதான். ஆனால், பணிநிறைவு பெற்ற பின்னர் பொழுதுபோகவில்லை என்று சொல்பவர்களுக்கு, எழுதுவது என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல. தன் வாழ்வை, குடும்பப் பெருமையை, வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும் அற்புதமான வழி.

“மருமகள் என்னுடன் சரியாகப் பேசவில்லை, மகனுக்கு நேரமே இருப்பதில்லை, பேரப்பிள்ளைகள் சிறப்பு வகுப்புகளுக்குச் சென்று
விடுகிறார்கள்… நாள் முழுவதும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே இருப்பது கடினம்” என்று பெரியவர்கள் வருத்தப்
படுவார்கள். மறுபுறம், “உலக விஷயங்களில் குழந்தைகள் ஆர்வம் செலுத்துவதில்லை; பண்டிகைகள், விசேஷ நாட்களில் என்னென்ன விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்பது இளம் தலைமுறை யினருக்குத் தெரிவதே இல்லை” என்று சலித்துக்கொள்வார்கள். இப்படி குறை கூறுவதற்குப் பதிலாக, அவற்றையெல்லாம் இளம் தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் எழுத்து வடிவில் பதிவுசெய்யலாம். தினமும் ஓய்வு நேரங்களில் குறைந்தது நான்கு பக்கங்கள் எழுதலாம். எழுதத் தெரியாதவர்கள், கை நடுக்கம் உள்ளவர்கள் மற்றவர்களிடம் சொல்லி எழுதவைத்துப் பதிவுசெய்து கொள்ளலாம்.

சுயசரிதை எனும் சொத்து

இதுதான் என்றில்லை. எதை வேண்டுமானாலும் எழுதலாம். தன்னுடைய பணியில் பெற்ற அனுபவங்களை எழுதலாம். அன்றாடம் நாம் என்ன மனதில் நினைக்கிறோமோ அதைக்கூட எழுதலாம். 

நாளடைவில் அதுவே சுயசரிதை ஆகிவிடும். பெண்களுக்கு இதில் முக்கியப் பணி உள்ளது. ஒரு கலாச்சாரத்தை, பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வதில் அவர்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனவே, பெண்கள் இதை ஈடுபாட்டுடன் செய்தால், நல்ல விஷயங்களை நம் சந்ததியினருக்கு விட்டுச்சென்ற பெருமை வந்துசேரும்.

குடும்பப் பாரம்பரிய உணவுகள், பழக்கவழக்கங்கள், பண்டிகைக் காலத்தில் பூஜைக்கு செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, சேர்க்க வேண்டிய பதார்த்தங்கள், தவிர்க்க வேண்டியவை இப்படி எல்லாவற்றையும் எழுதலாம். எந்த மதத்தினராக இருந்தாலும், நோன்பு நாட்களில் செய்ய வேண்டியவை, தள்ள வேண்டியவை என சில விஷயங்கள் உண்டு. அவற்றை இளம் தலைமுறை
யினருக்காக எழுதிவைக்கலாம். இதில் எல்லாம் ஆர்வம் இல்லாதவர்கள் சமூகக் கருத்துகளைக்கூட எழுதலாம்.

வயது தடையல்ல

பெரியவர்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் வைத்திருப்பார்கள். பாட்டு கேட்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. வாசிப்பின் போது கிடைக்கும் குறிப்புகளைக்கூட எழுதிவைக்கலாம். இது தன் குடும்ப உறுப்பினர்களையும் தாண்டி, மற்றவர்களுக்குப் பலன் தரலாம். மதிப்பையும் பெற்றுத் தரலாம்.

சாதிக்க வயது தடையில்லை. 60 வயதுக்கு மேலே வென்றுகாட்டியவர்கள் அநேகம். சில வருடங்களுக்கு முன்னர், சென்னையைச் சேர்ந்த பவுல் சிரோன்மணி என்பவர் தன்னுடைய 90-வது வயதில் முனைவர் பட்டம் பெற்றார். அதுமட்டுமல்ல, கல்வி, சுகாதாரம் குறித்து குடிசைவாழ் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் தொடர்ந்து ஈடுபட்டார். 80 வயதைக் கடந்த அவரது மனைவி ஜாய்ஸும் சமூக சேவைகளில் சிறந்து விளங்கினார். எனவே, எழுதவோ, எண்ணங்களை ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படுத்தவோ வயது ஒரு தடையாக இருக்கவே முடியாது.

எனது நண்பர் ஒருவர் பெருமாள் பக்தர். பணி ஓய்வுபெற்ற பின், தனக்கு மிகவும் பிடித்த பஜகோவிந்தத்தை, இளம் தலைமுறையினரும் புரிந்துகொள்ளும் வகையில், இன்றைய நிகழ்வுகளுடன் இணைத்து, பொருள், வியாக்கியானம் என எழுதி புத்தகமாக வெளியிட உள்ளார். நாட்டுப்புற இசையை வளர்த்தெடுக்கும் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் தம்பதியினரையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். கிராமப்புறங்களில் உள்ள பெரியவர்களிடமிருந்து, கிராமியப் பாடல்களைத் தொகுத்த இந்தத் தம்பதியினர், குழந்தை பிறப்பு, நாத்து நடவு, பூப்பெய்தல், களை எடுத்தல், திருமணம், அறுவடை, ஒப்பாரி என்று பல்வேறு நிகழ்வுகளில் பாடுபவர்களைத் தேடியலைந்து, பாடல்களைச் சேகரித்தார்கள். இவர்கள் தொகுத்த பாடல்கள், இன்றைக்கு இளம் தலைமுறையினருக்குப் பயன்படுகின்றன.

இப்படி கிராமம், நகரம், படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரும் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை ஏதேனும் ஒருவகையில் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லலாம்.

மனக்கஷ்டத்தை மறக்கும் வழி சில சமயம் வீட்டில், சிறியவர்கள் பெரியவர்களைப் புரிந்துகொள்ளாமல் கோபமாகவும் எடுத்தெறிந்தும் பேசிவிடுவது உண்டு. இது போன்ற சமயங்களில் ஏற்படும் மன வருத்தத்திற்கு வடிகால் தேட பெரிய
வர்கள் நினைப்பார்கள். யாரிடமாவது தங்கள் மன வருத்தத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புவார்கள். சில சமயம், அப்படி யாரிடமாவது பகிர்ந்துகொள்வதுகூட புதிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடக்கூடும். இன்னும் சிலர், தங்கள் மன வருத்தங்களை வாழ்க்கைத் துணையிடம்கூட சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால், கசப்பான உணர்வுகளை மனதில் வைத்திருந்தால், ஒருகட்டத்தில் அது உடல்நலக் கேட்டுக்கு வழிவகுத்துவிடும்.

இந்த மாதிரியான சமயத்தில் மனதில் உள்ளனவற்றை வெளிப்படுத்தி, மன அமைதி பெற ஒரு காகிதத்தில் எழுதிவிடுவது நல்லது. இதனால், மனதில் உள்ள பாரம் குறையும். இப்படி எண்ணவோட்டங்களை எழுதிவைப்பதை, உளவியல் சிகிச்சையில்கூட பயன்
படுத்துவார்கள். ஆக, எழுத்துவடிவிலான எண்ணப் பகிர்வு எல்லாவிதத்திலும் நன்மை பயக்கும் விஷயமே!

புகழ்பெற்ற பேச்சாளர்கள்கூட, ‘படித்ததில் பிடித்தது’ எனத் தாங்கள் வாசித்த விஷயங்களை மேற்கோள் காட்டிப் பேசுவார்கள். இதை அவர்கள் அந்த நொடியில் தயார்செய்வது வருவதில்லை. பல காலமாகத் தாங்கள் படிப்படியாக வாசித்த விஷயங்களைக் குறிப்பாக எழுதி வைத்து, தேவையான இடங்களில் நேர்த்தியாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் புதிதாக டைரி வாங்குகிறோம் அல்லது ஏதாவது ஒரு வகையில் இலவசமாகவே கிடைத்துவிடுகிறது. அந்த டைரியை நாம் எத்தனை தூரம் உபயோகமாகப் பயன்படுத்துகிறோம் என்று ஒருமுறை எண்ணிப்பாருங்கள். நம் நினைவுகளை, வாழ்க்கையின் முக்கியத் தருணங்களை, அனுபவக் குறிப்புகளை, குடும்ப நிகழ்வுகள் குறித்த பதிவுகளைத் தினமும் எழுதிவந்தால், அது நம் மனதை ஆற்றுப்படுத்தி, நம்மைப் பண்படுத்தும். மேம்பட்ட அந்த எழுத்துகள் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அமையும்!

நமது ஞானத்தைவிட நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் சிறந்த பொக்கிஷம் வேறு எதுவும் இல்லை!

(காற்று வீசும்…)

x