நல்ல நூலகம் செய்வோம்!- வாசிப்பை வளர்க்கும் ரா.கி.ர பேரன்


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

“ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், நூலகம் அமைந்திருக்கும் இடம் பற்றிய தகவல்தான்” என்பார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். தமிழில் வாசிப்பு அருகிவரும் சூழலில் நூலகம் இருக்கும் திசை பற்றிக்கூட பலருக்கும் அக்கறை இல்லை. இந்தச் சூழலில், அவல நிலையில் இருக்கும் அரசுப் பள்ளி நூலகங்களைத் தேடிச் சென்று, அவற்றுக்கு உயிரூட்டும் உன்னதப் பணியில் ஈடுபட்டுவருகிறார், ஓசூரில் வசிக்கும் ராகவன். 130 பள்ளிகளில் நூலகங்கள் அமைத்து, ரூ. 1.5 கோடி மதிப்பிலான சுமார் 50 ஆயிரம் நூல்களை அளித்திருக்கும் இவர், மறைந்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனின் பேரன்.

ஒசூரிலிருந்து - தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் சார்ட்டட் அக்கவுன்டன்ட் பயிற்சி மையம் நடத்திவருகிறார் ராகவன். “இது ஆரம்பிச்சு 4 வருஷம் ஆச்சு. 32 ஆசிரியர்கள் பணியில் இருக்காங்க. 400 பேர் இங்கே படிச்சு வெவ்வேற வேலைகள்ல இருக்காங்க…” எனத் தன் தொழில் பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன் தொடங்கிய ராகவன், நூலகங்கள் பற்றி பேச்சு எடுத்ததும், ‘‘பக்கத்துலதான் ஓசூர் கிளை நூலகம். அதுல சில வேலைகள் நடந்துட்டு இருக்கு. வாங்க பார்க்கலாம்” என என்னை அழைத்துக்கொண்டு புறப்படுகிறார். ஒரு கிலோமீட்டர் காரில் பயணம். அங்கே நூலகத்தின் துப்புரவுப் பணிகள் முடிந்து, அறைகலன்கள் அமைத்தல், மின் சாதனங்களைப் பொருத்துதல் போன்ற பணிகள் நடந்துகொண்டிருந்தன.

“இந்த நூலகம் புதர் மண்டிக் கிடந்துச்சு. காம்பவுண்ட் சுவர் இல்லை. மக்களுக்கு ராத்திரி நேர கழிப்பிடம், பார் எல்லாம் இதுதான். இதைப் புனரமைக்க உதவ முடியுமான்னு கேட்டாங்க. இதுவரைக்கும் பள்ளிகளுக்குத்தான் உதவியிருக்கோம். இதையும் செய்வோம்னு ஒப்புக்கிட்டோம். இதுவரை ரூ.2.5 லட்சம் செலவு. இன்னமும் 2 லட்சம் செலவு பிடிக்கும்” என்ற ராகவன், தன்னைப் பற்றிய அறிமுகத்தைத் தருகிறார்.

x