கனா பேச்சு 6- ஒரு காலத்தில் நான் ஒரு...


கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

பாண்டி நாட்டுத் தங்கம் என்ற சினிமா வெளியாகியிருந்த நேரமது. கதாநாயகியான நிரோஷா கட்டிவரும் பட்டுப் பாவாடை அத்தனை பிரபலம். தீபாவளி பொங்கல் சமயங்களில் நிரோஷா பாவாடையின் விற்பனை விண்ணைத் தொடும். அப்படி விண்ணைத் தொட்ட நிரோஷா பாவாடை கட்டிவரும் ராணியை யாருக்குதான் பிடிக்காது..? பீட்டர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டுக்கு எதிரில்தான் ராணியின் அண்ணன் வீடு. வார விடுமுறைகளில் பக்கத்துத் தெருவிலிருந்து தன் அண்ணன் வீட்டுக்கு வரும் ராணியின் காதுகளில் விழும்படி மிக சத்தமாக டேப் ரெக்கார்டரை அலற விடுவான் பீட்டர். மண் பானைக்குள் வைத்த ஸ்பீக்கரின் பேஸ் சவுண்ட் வீதியெங்கும் இசை தெளிக்கும். ‘ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி’, ‘ காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்’, ‘ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ , ‘ கலை வாணியோ ராணியோ அவள்தான் யாரோ’ என்றெல்லாம் ராணி எனத் தொடங்கும் பாடல்களை தனி கேசட்டில் ரெக்கார்ட் செய்துவைத்து ராணியைக் கவர்ந்தான் பீட்டர். பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த பீட்டர், ராணியின் மனதை வென்று முதல் வகுப்பில் பாஸ் செய்தான். இரு வீட்டாரின் எதிர்ப்போடு ராணியை திருச்சிக்கு அழைத்துச் சென்று ரகசியத் திருமணம் செய்துகொண்டு மூன்று நாள் கழித்து ஊருக்குத் திரும்பி வந்த பீட்டரை அவனின் நண்பர்கள் அனைவரும் உலகப் பொறாமையுடன் பார்த்தனர். ராணி வீட்டில் அவர்களின் காதலை தலை முழுகியிருந்தனர். பீட்டர் வீட்டிலோ குடும்பத்தின் ஒரே ஆண் பிள்ளை என்பதால் சகித்தபடி ஏற்றுக்கொண்டனர். பீட்டர்- ராணி இல் வாழ்க்கை தொடங்கியது.
கார்பெண்டர் வேலை, பெயின்ட்டிங் வேலை என்று கிடைத்த வேலைக்கெல்லாம் போய் தன் குடும்பத்தைக் காப்பாற்றினான் பீட்டர். ஒரு வருடத்தில் ஆண் குழந்தைக்குத் தகப்பனானான். பீட்டரின் உடம்பில் உப்பு நீர் சேர்ந்ததால் திடீரென எடை கூடி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருக்கத் தொடங்கினான். மகனையும் பேரனையும் ஏற்றுக்கொண்டவர்கள் மருமகளை அந்நியப்படுத்தியிருந்தது அப்போதுதான் தெரிய வந்தது. மிகத் தீவிரமான காய்ச்சலுக்குப் பின்பான ஒருநாளில் கழிவிரக்கத்தின் உச்சத்தில் ராணியைக் கண்மண் தெரியாமல் அடித்தான். வீட்டு வாசலுக்கு வெளிச்சம் தந்துகொண்டிருந்த தெருவிளக்கின் கீழ் அமர்ந்தபடி ‘ தே.....யா’ ‘ தே....யா’ என்று வாய் ஓயாமல் புலம்பிக் கொண்டிருந்த பீட்டரை தெருவே வேடிக்கை பார்த்து நகர்ந்தது.

பீட்டரின் முகத்தில் கறுமையும் கடுமையும் சேர்ந்தன. மகனின் நிலையைப் பார்த்து வெதும்பிப்போய் மூன்று வேளையும் குடிக்கத் தொடங்கினார் பீட்டரின் அப்பா. ராணி மீண்டும் கருவுற்று இன்னொரு ஆண் குழந்தைக்குத் தாயானாள். இரவுகளில் தூக்கம் தொலைத்த பீட்டர் சதா ஏதாவது முணுமுணுத்துக் கொண்டிருக்கத் தொடங்கினான். வேண்டாதவர்கள் செய்வினை வைத்துவிட்டதாக நம்பிய பீட்டரின் அம்மா நாகூர் தர்காவுக்கு பீட்டரை அழைத்துச் சென்றார். இரண்டு குழந்தைக்குத் தகப்பனான பீட்டர், தர்காவின் இரவில் தன் அம்மாவை இறுக அணைத்துக்கொண்டு குழந்தை போல் தூங்கினான். பயமாய் இருப்பதாய் திரும்பத் திரும்பச் சொல்லி அழுதான். எந்த இடத்துக்குப் போவதாயிருந்தாலும் பயம். யாரைக் கண்டாலும் பயம். மாமியார் மருமகள் பிரச்சினையில் ராணி தற்கொலை முடிவுக்குப் போக பீட்டர் இரண்டு குழந்தைகளுடன் ராணியுடனும் வீட்டை விட்டு வெளியேறி தனியானான். பெந்தகொஸ்தே சபை என்று போர்டு மாட்டி ஞாயிறுகளின் காலையில் ஒரு வீட்டின் உள்ளிருந்து கோரஸாய் குரல் கேட்கும். பீட்டர் அங்குதான் சென்றான் குடும்பத்துடன். இயேசுவின் புகழ் பரப்பத் தொடங்கினான். ஒரு அறுவைசிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்த என்னிடம் பீட்டர் பேசியதுதான் அவனைப் பற்றி இங்கு எழுத வைத்தது.

“ஒனக்கு இருக்கிறதெல்லாம் பிரச்சினைனே நெனைக்காத. நான்லாம் எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கேன் தெரியுமா... எல்லாரும் ஏமாத்திருக்காங்க என்னைய. ராத்திரியானா கம்பும் கத்தியும் எடுத்துகிட்டு எத்தனை பேர் தொரத்திருக்காங்க தெரியுமா... தர்காவுல இருந்தப்ப ஒடமெல்லாம் ஊசியா குத்தும். வாய் கசப்பு வேற... எனக்கு எல்லாத்தையும் தெளிவாக்கி இங்கே வாழ வழி தந்ததே தேவனின் ஒளிதான். நம்ம வாழ்க்கைல சைத்தானுக்குப் பெரிய இடம் இருக்கு. நாமதான் அத சரியா புரிஞ்சிக்கிறதில்ல. பிதாதான் எல்லோருடைய வாழ்விலும் வெளிச்சமும் சந்தோசமுமாயிருக்கிறார். நீ ஒருநாள் அங்க வந்து பாரு. ஒனக்கு எந்தத் துன்பமும் இருக்காது. நான் எந்தப் பிரச்சினையும் இல்லாம இப்போ சந்தோசமா இருக்கேன். என்னைப் பாத்தாலே தெரியுமே...’’
ஒருநாள் ஞாயிறு பிரார்த்தனை கூட்டம் முடிந்து திரும்பிக்கொண்டிருந்த பீட்டரின் குடும்பத்தை வீதியில் பார்த்தேன். நிரோஷா பாவாடை கட்டி மான் ஒன்றைத் துரத்தி ஓடும் பிம்பமாய் மனதில் பதிந்த ராணி, 30 வயதுக்குள்ளாகவே 100 வருட வாழ்வை வாழ்ந்திருந்த அலுப்புத் தெரிந்தது. உடம்பில் துளித் தங்கம் இல்லாமல்... வெற்று நெத்தி வெறும் கழுத்துடன் வெள்ளைப் புடவை கட்டி வெறித்த பார்வையில் வீதியைக் கடந்த ராணி என்றாவது ஒருநாள் தன் மகன்களிடம் “உன் அப்பா சில வருடங்கள் பைத்தியமாய் இருந்தாரடா’’ என்று முன்கதைச் சுருக்கத்தைச் சொல்லக் கூடுமா...

x